இயற்கைக்கு மாறாக நாம் சிந்திக்க, செயல்பட ஆரம்பித்தபொழுதே பண்பாடு ஆரம்பித்துவிடுகிறது. முதல் சக்கரம். முதல் வீடு. முதல் விவசாயம். முதல் கப்பல். முதல் அணை. காட்டை அழித்துதான் நாட்டைச் செதுக்கமுடியும். பண்பாடு என்பதே ஒருவகையில் இயற்கைக்கு எதிரானதுதான்.
இனக்குழுவிலிருந்து ஆரம்பித்து, நிலவுடைமை வழியாக, நாம் ஜனநாயகத்தை அடைந்திருக்கிறோம். அதாவது தன் மக்கள் எல்லாருக்கும் ஒரு ஜனநாயக நாடு சம உரிமை வழங்க வேண்டும் என்கிற காலத்திற்கு. இனம், சாதி, மொழி, இடம், நிறம், பால் எதையும் பாராமல் சம உரிமை. ஒரு மனிதன் மற்றொரு மனிதனை இனம், சாதி, மொழி, நிறம் மற்றும் பால் இவற்றையெல்லாம் கடந்து மணம் செய்துகொள்ள தடை விதிப்பது இந்தச் சம உரிமையை கூற்றை உடைக்கிறது.