அகங்காரம்

விஜய் டிசம்பர் 14, 2013 #குறிப்பு

பல இணையப்பதிவு பின்னூட்டங்களிலிருந்து பெரும்பாலும் ஆண்கள்தான் ஒருபால்ஈர்ப்புக்கு எதிராக இருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன். இதற்கு காரணம் ஆணின் அகங்காரம் என்றே படுகிறது.

  1. ஒரு ஆண் எப்படி மற்றொரு ஆணுக்கு அடங்கிப்போகலாம்? ஒரு பெண்தான் ஆணிற்குக் கீழ்படிந்து நடக்கவேண்டும். ஒரு ஆண் ஒரு பெண்ணிடமோ, மற்றொரு ஆணிடமோ தன் ஆதிக்கத்தை இழக்கக்கூடாது என்று நினைக்கின்றார்கள்.ஆண்-ஆண் உறவை முழு ஆண் இனத்திற்கே வரும் இழுக்கு என்று கருதுகிறார்கள்.

  2. பெண்-பெண் உறவைப்பற்றிச் சொல்லும்பொழுதும் ஆண் ஆதிக்கம்தான் தெரிகிறது. ஒரு பெண் எப்படி ஆண் இல்லாமல் தனித்து இருக்க முடியும் என்பதைப் பொறுக்கமுடியாமல் எதிர்க்கிறார்கள். இதே மனநிலை கொண்டவர்கள் ஒரு பெண் சமுதாயத்தில் உயர்வை அடையும்பொழுது ஏளனம்புரிவார்கள் என்ற எண்ணம் எனக்கு வலுக்கிறது.

  3. ஒருபால் உறவில் நாட்டம் உள்ள ஆண்களை ஆண்மையற்றவர்களாகப் பார்ப்பது. ஆகவே அந்த ஆண் எனக்கு ஒருபடி கீழே; அவனுக்குச் சம உரிமை கிடையாது என்று நினைப்பது. முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தவேண்டும். ஒருபால்ஈர்ப்பு விருப்பம் உள்ள ஆணோ பெண்ணோ குழந்தையைப் பெற்றுக்கொள்ள முழுமையாக தகுதியடையவர்கள். அந்த ஆண் ஒரு பெண்ணிடமோ, அந்தப் பெண் ஒரு ஆணிடமோ உறவுவைத்துக்கொண்டு குழந்தையைப்பெற முடியும். ஆனால் இயற்கையாக மனதளவில் அப்படி உடலுறவு வைத்துக்கொள்ள விருப்பம் இருக்காது. நிர்பந்திக்கப்பட்டு உறவு வைத்துக்கொள்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

ஒருபால்ஈர்ப்பைப் பற்றி பெண்களின் எண்ணங்களைத் தெரிந்துகொள்ள ஆவல்.


< பின்
⌂ முகப்பு