மிகவும் கொடுமையான நாட்கள் இவை. இயற்கையின் காம வேட்கை உச்சத்தில் இருக்கும் நாட்கள். எதிர்பால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு கல்யாணம் ஆகும்வரை இவை நீடிக்கும். தங்களுக்கு ஒரு துணை கிடைக்கும் என்று உறுதியாக தெரியுமாதலால், அவர்கள் இந்நாட்களைப் பொறுத்துக்கொண்டு கடந்துவிடுகிறார்கள். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிட்டு வாழத்தொடங்குகிறார்கள்.
தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு இப்பருவம் கூடுதல் சுமையானவை. தங்களுக்கு இந்நாட்டில் திருமணம் நடைப்பெறாது என்று உறுதியாகவே நம்புகிறார்கள். அது இன்னும் பல ஆண்டுகளுக்கு உண்மையாகவே நீடிக்கும். எனவே ஒவ்வொரு நாளும் நரகத்தில் உலாவுவது போன்றதே. மனம் பள்ளிக்கரணை குப்பைமேடு போன்று குழப்பமாக ஆகிவிடும். எந்த செயலிலும் நாட்டம் இருக்காது. எதற்காக இந்த வாழ்வு என்று அடிக்கடி தோன்றும். இந்தச் சிக்கலான முடிச்சின் கத்தரிப்பே, தன்னை மாய்த்துக்கொள்வது.
நான் ஒரு தன்பால் ஈர்ப்புடைய ஆண். நானும் இந்தக் குழப்பம் மிகுந்த, கவலை தோய்ந்த, நாட்களில் உழல்பவன். எனக்கு அழகாய் தெரிகின்ற எந்த ஒரு ஆணைப் பார்த்தாலும், எங்கிருந்தோ திடீரென்று ஒரு எரிகோள் பூமியில் விழுவது போல, மனதில் இச்சை மூளுகிறது. இயற்கை ஒரு பாரபட்சமில்லாத அரக்கன். எந்நேரமும் ரோந்து பணியில் சுற்றும் காவலன் போல, தன் அலகைக் கூர்மைபடுத்திக்கொண்டே காத்துக்கொண்டிருக்கிறது. இயற்கையை வெல்வது என்பது நம் தோற்பை ஒத்திப்போடுவதுதான். நம் வாழ்நாளில் இயற்கையை முழுமையாக வெல்லவே முடியாது. முழுமையாக வெல்லல் என்பது நம்மை அழித்தல்தான். ஆனால் மரணமேகூட இயற்கையேயாம்.