பிரியும் உயிர்

விஜய் ஏப்ரல் 13, 2014 #குறிப்பு #குறள்

அன்பு காதலா, ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும்போதும் மிகுந்த இன்பம் கொண்டிருந்தேன். உன் பார்வையே போதும் என்றிருந்தேன். காமத்தை உடலால்தான் பெறமுடியுமா என்ன? ஆனால், இப்போது நம் உடல்கள் தழுவிக்கொண்டாலும்கூட, காமத்தில் ஈடுபடும்போதும்கூட, நான் அஞ்சுகிறேன். ஒவ்வொரு தழுவலும் இதுதான் கடைசியோ என்றிருக்கிறதே. உன் பிரிவைக்கண்டு அஞ்சுகிறேனே.

“இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு”

நான் யாரை நம்புவேன்? என்னை நீரைப்போல் தெளிவாகப் புரிந்துகொண்டவன் நீ மட்டுமே அல்லவா? இப்பொழுது நீ ‘நான் பிரியப்போவதில்லை’ என்று கூறுவதை நம்ப மறுக்கின்றதே மனம். நீ என்னைப் பிரிவாய் என்று எனக்குத் தெரியும்.

“அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்”

என்மீது மிகுந்த அன்புகொண்டு ஆரம்பநாட்களில், நான் உன்னைப் பிரியேன் என்று விடியலுக்கு ஒருமுறை உரைத்தாயே. அதை நான் முழுமையாக நம்பினேனே. அது என் தவறோ?

“அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு”

காதலனே, பிரிவு என்பது ஒருமுறைதான். மீண்டும் இணைதல் என்பது அரியது. ஒருவன் ‘நான் உன்னைப் பிரிகிறேன்’ என்று சொல்லும் அளவுக்கு கொடுமையானவன் என்றால், அவன் திரும்பி வந்து என்னிடம் அன்பு செய்வான் என்று கொள்ளுதல் மிகுந்த முட்டாள்தனம் அல்லவோ!

“பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை”

“ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு”

நெருப்பு தொட்டால்தான் சுடும், ஆனால் இந்தக் காமநோயோ, பிரிந்தால் சுடுகிறதே! இதோ என் மெலிந்துப்போன என் கை ஊருக்கு அறிவித்து விட்டதே, அவன் பிரிவை. வளையல் வெண்ணைப்போல் வழுக்கிச் செல்கின்றதே. அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்வது மிகவும் கொடியது. அதனினும் கொடியது என் காதலன் என் பக்கத்தில் இல்லாமல் நான் உயிர் வாழ்கின்றது.

“துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை”

“இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு”

தீ. காமத்தீ. இதோ என் உடல் தகித்துக்கொண்டிருக்கிறது. நீ இல்லாத உலகில் எனக்கு என்ன வேலை? காதலனின் பிரிவைத் தாங்கிக்கொண்டு உயிரோடு இருப்பவர் பலர் உளர். நானும்தான் அப்படியோ!

“தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ”

“அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்”

நீ வந்து என்னிடம் பிரியும் நேரம் வந்துவிட்டது என்று சொன்னத்தருணம், ஏன் அது நிகழ்ந்தது? ஏன் என்னிடம் அப்படிச்சொன்னாய்? நீ என்னைப்பிரிந்து சென்று, மீண்டும் வரும்பொழுது நான் உயிரோடிருப்பேன் என்று நினைத்தாயோ?

“செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை”


< பின்
⌂ முகப்பு