எழுத்தாளரின் நடையும், கதை வடிவமைப்பும் அற்புதாமாக இணைந்துள்ள சிறுகதை. எழுத்தாளரே வாசகனிடம் பேசுவதுபோன்ற கதை (பின்நவீனத்துவம்?). புதுமண தம்பதிகளான ஆத்மாவும் இந்துமதியும் காவேரி கரையிலுள்ள மாந்தோப்பில் கழிக்கும் ஒரு மாலை பற்றிய கதை. அவர்களின் ஒரே ஒரு மாலை.
இருவரின் ஆளுமைச்சித்திரங்களும் இருபத்திகளில் அழகான வரிகளாக விவரிக்கப்பட்டுள்ளன. உன்னிப்பான வாசகன் சிறுகதையின் முடிவை சில ஆரம்ப வரிகளிலே யூகிக்க முடியும். “இந்த ‘கேஸி’ல் கொஞ்சம் சங்கடமான நிலைமையாக இருக்கிறது.” ஆங்காங்கே தெற்க்கும் உரையாடல் வழியாகவும் கணிக்கமுடியும். கல்யாணம் என்கிறது ஒரு ‘லைஃப் டைம்‘ சமாசாரம்…”
சிறுகதையின் இறுதி ஆச்சரிய முடிவு இதில் நடுவிலே வந்துவிடுகிறது. கல்யாண வாழ்க்கையை வாழ முழு வாழ்வும் வேண்டுமா என்ன? ஒரு மாலை போதாதா? அவர்கள் அந்த மாலையில் உரையாடிய சொற்கள், அதன் மூலமாக புரிதல்கள், பரிமாற்றங்கள், கனவுகள், நீண்ட உரையாலுக்குப் பின்னான ஒரு அற்புத மௌனம் - அவர்கள் ஒரு முழுவாழ்க்கையை அந்த மாலையில் வாழவில்லையா என்ன?