பறவைவேட்டை (அசோகமித்திரன்)

விஜய் மே 18, 2014 #வாசிப்பு #சிறுகதை

எர்னஸ்டிற்கும் அவன் அப்பாவிற்குமான உறவு பற்றிய கதை. அப்பா ஒரு தோற்றவர். அவர் பறவைவேட்டைக்குச் செல்லும்போது, நான்குமுறைக்கு ஒரு முறைதான் குறியில் குண்டுபடும். அவர் வைத்தியதொழிலும் அவ்வாறேதான். எர்னஸ்ட் படிப்பு முடிவதற்குள் வீட்டைவிடு வெளியேறி, யுத்தம், குண்டடி, ஆஸ்பித்திரி, வேறுநாடு, எழுதுதல், திருமணம், குழந்தை, விவாகரத்து, இன்னொரு திருமணம் என்று வாழ்க்கை சென்றது.

அப்பொழுது அவனிடம் வந்த அப்பாவின் நீளமான கடிதம் அவனை யோசிக்கவைத்தது — முக்கியமாக அந்தப் பின்குறிப்பு. “உன்னால் சிறிது பணம் அனுப்பமுடியுமா?”. அனுப்பினான், பல மாதங்கள் கழித்து.

சிறிதுநாள் கழித்து அப்பாவின் தற்கொலை தெரியவந்து வீட்டுக்கு வந்தான். பைன்மரக்காட்டில் அலைந்து அப்பாவை நினைவுகூர்ந்தான். அப்பாவின் பொருட்களை அம்மாவும், அவனும், சகோதரனும் நினைவுச்சின்னங்களாக பிரித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவன் கடிதம் பிரிக்கப்படாமலே இருந்ததை எர்னஸ்ட் பார்த்தான்.

அவன் எழுதிய கடிதத்தை அவனே படித்துப்பார்த்தான். “நானும் சிறிது நெருக்கடியில்தான் இருக்கிறேன். என்னாலியன்ற பணத்தை அனுப்பியிருக்கிறேன். இதோ செக்…”. அவனால் இயன்ற பணத்தை நினைக்க அவனுக்கே வெட்கமாக இருந்தது. கடிதத்தைப் பையில் மடித்துப்போட்டுக்கொண்டு செக்கைமட்டும் கிழித்துப்போட்டான்.

இம்முறை அப்பாவின் குறி தப்பவில்லை.



< பின்
⌂ முகப்பு