யுகதர்மம் (அசோகமித்திரன்)

விஜய் மே 27, 2014 #வாசிப்பு #சிறுகதை

ஒரு சிறுபிள்ளையின் ஆளுமை தன் பெற்றோரிடமிருந்தே முதலில் வரையப்படுகிறது. பல் எப்படி தேய்ப்பது என்பதிலிருந்து, புத்தகத்துக்கு எப்படி அட்டைப் போடுவதிலிருந்து, வாசலில் நிற்கும் யாசிப்போனுக்கு என்ன பதில் கூறவேண்டும் என்பதுவரை. வாழ்வின் நன்மை, தீமை, அறம் போன்றவையும் அவ்வாறே. பிள்ளை பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும்போது, அவன் தனிப்பட்ட ஆளுமை ஒன்று உருவாக ஆரம்பிக்கின்றது. நண்பர்களுக்கு பென்சில் தருவதிலிருந்து, மற்றவர்களைக் கிண்டல்செய்வதுவரை. இது சிலநேரத்தில் இரண்டு ஆளுமைவட்டங்களை உருவாக்கியிருக்கும். அவன் பள்ளியில் நண்பர்களிடம் இருக்கும்போது ஒரு ஆளுமை, வீட்டில் இருக்கும்போது ஒரு ஆளுமை. இருவட்டங்களில் ஒருபாகம் பொதுவாகவும் இருக்கும். பிள்ளை வளரவளர பெற்றோர்களால் உருவாக்கப்படும் ஆளுமை குறைந்து, அவனுக்கென்றே ஒரு தனிப்பட்ட ஆளுமையொன்று உருவாகியிருக்கும். சிலசமயத்தில் பெற்றோரின் கருத்துகள், இந்தத் தனியாளுமையிடம் மோதும்போது ஒரு பேரதிர்ச்சி உருவாகும். அந்தத் தருணம், தன் பெற்றோரைப்பற்றிய மனச்சித்திரம் வெகுவாக கலைக்கப்பட்டுவிடும். அதைப் போன்ற ஒரு தருணமே இக்கதை.

பாலு பத்தாவது தேர்வு எழுதி, மதிப்பெண்ணுக்காகக் காத்திருக்கும் ஒரு சுமாரான மாணவன். செய்தித்தாளில் அவன் தேர்ச்சிப்பெற்றுவிட்டான் என்று அச்சாகிவிட்டது. ஆனால், பள்ளி மதிப்பெண் பட்டியல் தரவேண்டும். அதைவைத்தே, எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று தெரியவரும். அவனும் அப்பாவும், பள்ளியில் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவன் பெயரை அழைக்கிறார்கள். வெகுசுமாரான மதிப்பெண்கள். அவன் நண்பர்கள், அவனைப்போன்றே எப்போதும் சுமாராகப் படிப்பவர்கள், அவனைவிட அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். பள்ளியில் கூட்டத்தினிடையில் எதுவும் கேட்காத அப்பா, வீட்டுக்கு நடந்துசெல்லும்போது அவனிடம் கேட்கிறார்.

“… எல்லோரும் உன்னைவிட கூட வாங்கியிருக்காங்க. உனக்கு மட்டும் ஏன் இப்படி?”.

“அதுக்கு ஒரு காரணம் இருக்குப்பா. அவங்க பிட் அடிச்சாங்க. நான் எனக்கு தெரிஞ்சத எழுதினேன்”.

“ஏன் நீயும் அடிக்கிறதுதானே?”.



< பின்
⌂ முகப்பு