“இரவுத் தேவி வந்துவிட்டாள்
கண்ணால் எங்கும் பார்க்கிறாள்
ஆபரணங்கள் அனைத்தையும் பூண்டுவிட்டாள்.
…
அலைபோல் ஊரும் இரவுத்தேவி
ஓநாய்களை விரட்டு
வழியில் பயமில்லாமல் நாங்கள் போகவேண்டும்.”
- ரிக்வேதம்
மனிதனின் வாழ்க்கையே இயற்கைக்கும் அவனுக்கும் நடக்கும் போராட்டம்தான். இயற்கையின் முடிவிலா ஆற்றலை கட்டுப்படுத்திக்கொண்டுதான் மனிதன் சமூகத்தைக் கட்டமைத்து உள்ளான். காமத்தைக் காதல் என்று புனிதப்படுத்தியிருக்கிறான். வன்முறையை வீரம் என்று வரையறுத்து இருக்கிறான். குடும்பம் என்ற சமூக அறத்தை முன்வைத்து நடைமுறைப்படுத்தி அமைதியான வாழ்வுக்கு வழிசெய்ய எத்தனித்துக்கொண்டிருக்கிறான். மதம் என்ற ஒன்றை சட்டகப்படுத்தி மக்களை ஒரு குடைகீழ்கொண்டுவர முயன்றுகொண்டிருக்கிறான். யோகம் மூலம் புலனடக்கத்தை வலியுறுத்தி மேலான ஒரு அமைதியை அடைய முயற்சிசெய்கிறான்.
இந்த யோகமும் தவமும் எல்லா மனிதர்களுக்கும் சாத்தியம் இல்லை. உலகில் வெகுசில மனிதருக்கே சாத்தியப்படுகிறது. இயற்கை இச்சையை வெல்லல் என்பதே மனிதக்குலத்தின் ஆகப்பெரும் முயற்சியாகும். தன் வாழ்க்கை முழுவதும் யோகத்தைக் கடைப்பிடித்துவரும் ஒரு குருவைப் பற்றிய இக்கதை, அசோகமித்திரன் எழுதிய ஒரு அற்புதம்.
சாகும்தருவாயில் கிடக்கும் குருவை சீடன் ஒரு மலைப்பகுதி வழியாக பக்கத்து ஊருக்கு அழைத்துச்செல்கிறான். நடக்க, பேச முடியாத குருவை கம்பளியால் சுற்றி, ஒரு சாக்குபையில் குளிருக்கு இதமாக வைத்து தூக்கிச்செல்கிறான். இரவில் எரிமூட்டி, கஞ்சி கொடுக்கிறான். சிறிது அயர்ந்து தூங்கி விழிக்கையில், குருவின் சாக்கை ஓநான் ஒன்று கடிக்க முயன்றிருப்பதைக் கவனிக்கிறான். குருவோ மூச்சை இழந்துவிடுகிறார்.
குருவைப் புதைக்கவேண்டி பயணத்தைத் தொடருகிறான். அடுத்த இரவு, அந்த ஓநாய் தன் கூட்டத்தோடு வருகிறது. அவனும் ஓநாயாகவே மாறி சண்டையிடுகிறான். ஒரு ஓநாயைத் தன் இரட்டைச் சகோதரனாக எண்ணி அன்பும் வெறுப்பும் கலந்து மனம் நிறைந்த ஒரு கணத்தை அசோகமித்திரன் அற்புதமாக விவரிக்கிறார். போருக்கு பின்பு, மயங்கி, காலையில் விழித்துப்பார்க்கும்போது, குருவை ஓநாய்கள் கிழித்துக்குதறியிருப்பதைப் பார்க்கிறான். அதே நேரம், குருவின் கையில் பிய்த்தெடுக்கப்பட்ட ஒரு ஓநாயின் காலிருப்பதையும் பார்க்கிறான்.
தன் வாழ்வு முழுவதுமே யோகத்தைக் கடைப்பிடித்துவந்த குரு, மனிதனின் ஆதியிச்சையான வாழும் ஆசையைக் கைவிடமுடியவில்லை. எவருக்குத்தான் சாத்தியம் அது?
இயற்கையான ஒன்றை நிராகரித்தல் அபத்தமே அல்லவா!