ஆர்குட்டும் தொழில்நுட்பமும்

விஜய் அக்டோபர் 1, 2014 #குறிப்பு

ஆர்குட்டின் சாவு நமக்கு தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் வேறுபாட்டையும், நிழல் மற்றும் பொருளின் வேறுபாட்டையும், கானல்நீர் மற்றும் மெய்நீரின் வேறுபாட்டையும் கற்றுக்கொடுக்கிறது. தொழில்நுட்பத்தின் ஒரு பகுதி, எப்போதும் மக்களின் மனத்தைத் திருகி, அவர்களைச் சுரண்டுகிறது. ஆம், ஒரு புதிய தொழில்நுட்பத்தின் உருவாக்கம், பற்பல வழிமுறைகளைத் தொடர்ந்து முயற்சிசெய்து, எது நல்லது என்றுபடுகிறதோ அதை முன்னெடுக்கும் வழியால் உண்டாகிறது. இது பொது மக்களை பயன்படுத்திச் செய்யப்படுகிறது.

ஒரு நிறுவனம் புதிதாக ஒரு மென்பொருளையோ, ஒரு செயலியையோ, அல்லது ஒரு சமூக வலைதளத்தையோ உருவாக்குகிறது. உலகம் அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. அந்நிறுவனம் இதை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறது. மக்கள் கேட்கிறார்கள். நிறுவனம் சில மாற்றங்களைச் செய்கிறது (அவர்களின் சொற்களில், சுலபமான பயன்பாடு அல்லது திறமுயர்த்தல்). மக்கள் பின்பற்றுகிறார்கள். இது ஒரு அலகிலா கம்பியாக நீள்கிறது. பொதுமக்கள் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று யோசிக்கமறுக்கிறார்கள், அவர்களுக்கு என்ன தரப்படுகிறதோ, அதைச் செய்கிறார்கள்; ஏனென்றால் அவர்களுக்குத் தேவைப்படுவதை அவர்களால் உருவாக்கமுடியாது. ஒருநாள், அந்நிறுவனம் அத்தொழில்நுட்பத்தை மூடுகிறது. போலி ஏக்கத்தையும், செயற்கையாக உருவாக்கப்பட்ட தேவையின் பூர்த்தியையும் தவிர, அத்தொழில்நுட்பம் என்ன கொடுத்தது என்பதுதான் கேள்வி.


< பின்
⌂ முகப்பு