காந்தி இறந்து அறுபத்தியாறு ஆண்டுகள் ஆகின்றன. காந்தியைப் பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்திருப்பது மிகச் சொற்பமே. காந்தி எழுத்துப்பிழை செய்து ஆசிரியர் சொன்னபோதும் மாற்றமறுத்த ‘கெட்டில்’ கதை இப்போது பள்ளியில் இருக்கிறதா என தெரியவில்லை. அதற்குமேல், காந்தியைப் பற்றி இரயிலில் தள்ளப்பட்டச் சம்பவம், ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம் போன்றவை பாடப்புத்தகத்தில் சொல்லப்படும். அதுவும் தேர்விற்கு ஒரு மனப்பாட பதிலாக கரைந்துவிடும். இணையத்தில் பெரும்பாலும், காந்தி ஒரு பெண்சல்லாபம் உள்ள, மனைவியை மதிக்கத்தெரியாத, பிள்ளைக்கு மோசமான தந்தையாக வலம்வருகிறார். காந்தியின் முக்கிய பங்களிப்பான மக்களிடம் ஜனநாயத்தை உணர்வித்தலை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பது இல்லை. ‘காந்தி இல்லைன்ன என்ன, நாற்பத்துயேழுக்கு பதில், ஐம்பதில் சுதந்திரம் கிடைத்திருக்கும்’ என்பதுபோன்ற எளிய முடிவுகள் இணையம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. காந்தியின் குணநலன்களைப் பற்றி, அரசியல் பற்றி, அவர்மேல் வைக்கப்படுகின்ற பல கேள்விகளுக்கு, விரிவான நோக்கோடு பதில் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
நூல்: இன்றைய காந்தி, தமிழினி வெளியீடு, 2009. https://www.nhm.in/shop/100-00-0000-000-1.html