தூய்மையான இந்தியா

விஜய் அக்டோபர் 4, 2014 #கட்டுரை #குறிப்பு

செப்டம்பரில் பத்து நாட்கள் சியூரிக் (ஸ்விட்சர்லாந்து) மற்றும் இத்தாலியில் ஃப்ளாரன்ஸ், வெனிஸ் ஆகிய இடங்களுக்கு ஒரு ஆராய்ச்சி மாநாட்டிற்காகச் சென்றிருந்தேன். சியூரிக் மிகவும் கச்சிதமாக திட்டமிடப்பட்ட அற்புதமான நவீன நகரம். சியூரிக்கில் உள்ள பல கட்டிடங்கள் ஐநூறு ஆண்டுகள் பழைமையானவை. ஆனாலும், நவீன என்ற பதத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு காரணம் உண்டு. அது அந்நகரில் உள்ள கச்சிதமான பொது போக்குவரத்து அமைப்பு. மூன்று வகையான போக்குவரத்து வகைகள். டிராம், இரயில் மற்றும் பேருந்து. இரயிலே மிகவும் வேகமானது. அது முக்கியமான இடங்களுக்கு வேகமாகச் செல்லவேண்டுமேயானால் பயன்படுத்தப்படும். பேருந்தும் உண்டு. ஆனாலும் அவ்வளவாக விரும்பப்படவில்லை. டிராம் நகரின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் செல்வதால், மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை மூன்றுமே மிகவும் துல்லியமாக நேரத்தைக் கடைபிடிக்கக்கூடியவை. முப்பது விநாடி நேரம் தவறி வந்தால் ஆச்சரியம்தான்.

என்னை மிகவும் கவர்ந்தது, இம்மூன்று வகையான வண்டிகளிலும் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகள்தாம். பேருந்தில் ஒவ்வொரு நான்கு சீட்டுகளுக்குவீதம் ஒரு தொட்டி, சிறியதுதான். ஆனால், அவசியமானது. சிறுகுழந்தைகள் முதல் மூதாட்டிகள்வரை இக்குப்பைத்தொட்டிகளைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான மக்கள் புகைக்கிறார்கள். பொதுவிலே புகைப்பிடிக்கலாம். ஆம், சட்டத்திற்கு புறம்பானது கிடையாது. அதனால் குப்பைத்தொட்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். வண்டிகளைத் தவிர, ஒவ்வொரு தெருவின் மூலையிலும் ஒரு தொட்டி உண்டு. இதில் வைக்கப்பட்டுள்ள பையை அவ்வபோது தொழிலாளர் ஒருவர் வந்து எடுத்துக்கொண்டுபோவார். ஆகவே, தெருவில் ஒரு காகிதத்தைப் பார்ப்பது மிக அரிது.

இந்தியாவில் இதுபோன்று வண்டிகளில் இல்லாவிடினும், தெருக்களில் குப்பைத்தொட்டிகளை அதிகரிப்பது அவசியமான ஒன்று. நமக்கு பாதகமாக இருக்கும் முக்கியப் பிரச்சனை, மக்கள்தொகை. ஆகவே, இன்னும் நிறைய தொட்டிகள் வேண்டும். அது மட்டுமல்லாமல், அவற்றைச் சுத்தப்படுத்த, தகுந்த ஊதியம் கொடுத்து தொழிலாளர்களை நியமிப்பது அரசின் கடமை.

வீட்டுக்குப்பையை நகர்த்துவதில் மூன்று நிலைகள் உண்டு.

  1. வீட்டில் உள்ள குப்பையைச் சேகரித்தல்
  2. வீட்டிலிருந்து தெருகுப்பைத்தொட்டிக்கு நகர்த்தல்
  3. எல்லா தெருக்களிருந்தும் நகரின் மையகுப்பைசேகரிக்கும் மையத்திற்கு நகர்த்தல்.

முதல் இரண்டு நிலைகளில், பொதுமக்களின் பங்கு மிக அவசியம். மூன்றாவது நிலைக்கு, அரசின் பங்கே முழுவதும். இந்நிலைகளுக்கும் அப்பால், பல கேள்விகள் உண்டு. மையசேகரிப்புமையத்தை எவ்வாறு, எங்கே தேர்வு செய்வது? தினம் சேரும் குப்பைகளை என்னச் செய்வது? எந்தெந்தக் குப்பைகளை மறுசுழற்சி செய்யலாம்? என பலப்பல.

தூய்மையான இந்தியா என்பது ஒரு தொடர்நிகழ்வு. மக்களின் பங்கும் அரசின் பங்கும் இதில் மிகமுக்கியமே. தன் அறையையோ, வேலை பார்க்கும் இடத்தையோ ஓர் இளைஞர் சுத்தமாக வைத்திருந்தால், அவரை வித்தியாசமாகப் பார்க்கும் இன்றைய இளைய சமுதாயத்திற்குத் தேவை மனதளவில் ஒரு பெருமாற்றம்.


< பின்
⌂ முகப்பு