வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே மக்கள் தங்கள் உறைவிடங்களை வடிவமைக்கத் தொடங்கிவிட்டார்கள். கற்கால மனிதனின் வீடுகள் பெரும்பாலும் குகைகளே ஆகும். இயற்கை வீடுகள் அவை. கூட்டமாக வசிக்கும்போது பாதுகாப்புக்காக ஒரு குகையைத் தேர்வுசெய்து அங்கே தங்களுக்குத் தேவையான தீ அடுப்பு, கல்நகைகள், குளிருக்குத் தேவையான ஆடைகள் ஆகியவற்றால் குகையை நிரப்பி அதைத் தங்களதாக ஆக்கிக்கொள்கிறார்கள். குழுவாகச் சேர்ந்திருத்தல், முக்கியமாக இரவில், மிகவும் அவசியம். அது தங்களை விலங்குகளிடமிருந்தும், மற்றக் குழுவினரிடமிருந்தும் பாதுகாக்க அவசியமாகிறது. இயற்கையான குகையிடமிருந்து சற்றே நகர்ந்து, அடுத்தக் கட்டமாக, மனிதன் செயற்கையாக தங்கள் குடியிருப்புகளை அமைப்பதைப் பார்க்கிறோம். அக்குழு வசிக்கும் இடத்தில், என்னென்ன இயற்கையான பொருட்கள் கிடைக்கிறதோ, அதைப் பயன்படுத்தி, வீடுகள் அமைக்கப்படும். முதலில் புற்களைக் கூரையாகக் கொண்ட வீடுகள். சுவராக மரக்கட்டைகள். குழுவிலே தனித்தனி குடும்பங்களாக வசிக்கவும், அல்லது ஆண்,பெண் தனித்தனியே வசிக்கவும் நிறைய வீடுகள் அவசியமாகின்றன.
பரிணாம வளர்ச்சியை வீடுகளும் கொள்கின்றன. மரத்திலிருந்து, கற்கள், பின்னர் செயற்கையாக உண்டாக்கப்படும் கலவை என அவை வேகம் கொள்கின்றன. வீடுகளின் அளவும் பெரிதாகின்றன. ஒரு குழு, பண்பாடு என்பதை நோக்கி வளரவளர, வசிக்கும் வீடுகளும், இடங்களும் மாறுபடுகின்றன. மீன் பிடிக்கும் பண்பாட்டுக்குக் கடலோரமாகவோ, ஏரிகள், ஆறுகளின் ஓரமாகவோ இவ்வுறைவிடம் அமைகின்றது. அக்குழுவே ஒரு குடியாக மலர்கிறது. மலைசார்ந்து அமைந்திருக்கும் குடியும், கடல்சார்ந்து அமைந்திருக்கும் குடியும் வெவ்வேறாக இருக்கும். வீடுகளும், கட்டிடங்களும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும். பின்னர், சில குடிகள் விவசாயம்நோக்கி காலெடுத்து வைக்கின்றன. இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளிடமிருந்து நகர்ந்து, தாமே பயிரிடும் உணவுகள் நோக்கி மனிதன் நகர்கிறான். இக்குடிகள் ஆறுகளின் ஓரமாக, பெரும்பாலும் சமவெளிகளியே தங்கள் உறையூரைக் கட்டமைக்கும். விவசாயம் மனிதனின் பண்பாட்டில் ஒரு பெரும்பாய்ச்சல். தனக்குத் தேவையான உணவை, தனக்கு வேண்டிய அளவு விளைத்துக் கொள்ள மனிதனால் முடிந்தது. இம்மருதம் சார்ந்த குடிகளே ஒரு நகரமாக உருவம் கொள்கின்றன. விவசாயம் தவிர, மற்ற கட்டிட, குயவ, நகை, போர் போன்ற தொழில்களும் அவசியமாகின்றன. அவையும் வளர்கின்றன. அதுவே அந்நகரத்துக்குள் மக்கள்தொகையை அதிகரிக்கச் செய்கின்றன.
எவ்வளவு நிறைவடைந்தாலும் மனிதனின் தேவைகள் குறைவதேயில்லை. அதுவே அவனை ஒரு நகரத்திலிருந்து, பல நகரங்களின் கூட்டமைப்பான நாடு என்ற அமைப்புக்குச் இட்டுச்செல்கிறது. ஒரு நகரத்தில் இயற்கைசார்ந்து விளைவிக்கப்படும் பொருட்கள் மற்றொரு நகரத்தில் கிடைக்காது. ஆகவே ஒரு நாட்டில் உள்ள எல்லா நகரங்களும் ஒரு தொடர்வணிகத்தில் ஈடுபட்டிருக்கும். ஒரு தனியாள், அவன் நாட்டில் நகரத்தில் இருக்கவே விருப்பப்படுவான். அதன் காரணங்கள் பல. நகரங்களே பண்பாட்டின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும். பண்பாட்டை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வாய்ப்புகள் நகரங்களிலே அதிகம். கற்றலின் உச்சமான அமைப்புகள் நகரங்களிலே இருக்கும். நகரம் என்பது பல ஆயிரம் மனிதர்களின் வண்ணக்கலவை. ஒருவனின் அனுபவம் நகரத்துக்கு வராமல் முழுமை கொள்ளாது.
வரலாற்றின் எல்லாக் கட்டத்திலும் மனிதர்கள் தந்நாட்டில் உச்சமான நகரங்களை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் இப்பண்பாட்டின் ஒருவனே, நானும் இப்பண்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு உதவுவேன் என்று ஒரு தொடர்ந்த நகர்வு நகரங்களை நோக்கி சாத்தியப்படுகிறது. அப்படியல்லாத மனிதரும், தங்கள் உயிர்வாழ வேண்டியாவது நகரங்களுக்கு வருவது அவசியமாகிறது.
இணையம் இந்நகர்வின் தேவையைத் தற்போது கேள்விகேட்க வைத்திருக்கிறது. மனித பண்பாட்டின் தற்போதைய உச்சக்கலைகளை அனுபவிக்க நகரங்களில் வாழ்ந்தாகவேண்டும் என்ற அவசியம் இப்போது குறைந்துவருகிறது. நமது பண்பாட்டின் எல்லா செய்திகளையும், நிகழ்வுகளையும், கலைகளையும், கற்றல்களையும் இப்போது ஒருவர் வீட்டிலிருந்தே பெறமுடியும். இந்நிலையில்தான் நகரங்களின் தேவையைப்பற்றி யோசிக்கவேண்டியுள்ளது. ஒரு பள்ளிமாணவன் சென்னையில் படித்தாலும், திருச்சியில் படித்தாலும், தேனியில் படித்தாலும் வேறுபாடு இல்லை. இணையத்திலிருந்து அவன் இவ்வுலகத்தில் உள்ள மிகச்சிறந்த பாடங்களைக் கற்கமுடியும்.
குழு, குடி, ஊர், நகரம் என்ற வரிசையில் நாம் பின்னோகிச் செல்ல ஒரு வாய்ப்பு இது. நகரங்களின் இயற்கையின்மையின் இன்னல்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம். ஒரு பெரிய நகரத்துக்கு மாற்றாக, பத்து சிறுசிறு ஊர்களாக அமைப்பது நமக்கு ஒரு சாதகமே. நகரம் இருப்பதாலேயே, மக்கள்தொகை அடர்த்தி பெருக்கம், அதனாலேயே போக்குவரத்து நெரிசல், இயற்கை சுரண்டல் என வேதனைகள் அதிகம். சிறு ஊராக இருந்தால் பல தேவைகள் குறைக்கப்படும். ஊரைச்ச் சுற்றியுள்ள இயற்கையே போதுமானதாக இருக்கும். இல்லாதபட்சத்தில், நாம் மற்ற ஊர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அதிவேக ரயில்கள்மூலம் போக்குவரத்து எளிதாக இருக்கும். அழிந்துபோகும் ஒரு புகாருக்கு மாற்றாக, ஆயிரம் புள்ளம்பாடிகளை அமைப்போம்.