வண்ணக்கடல்

விஜய் நவம்பர் 18, 2014 #குறிப்பு

திருவல்லிக்கேணி அல்லிப்பூக்களின் கேணியாக அல்லாமல், பலவிதமான, பலவண்ணங்களாலான உயிர்களின் கடலாக உள்ளது. இரயில் நிலையத்தில் இறங்கியவுடனே தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தேன்; சில எட்டுகள் நடந்தபின், கடற்கரை தெரிந்த்ததால், நூற்றியென்பது பாகை திரும்பி நடக்க ஆர்ம்பித்தேன். பக்கிங்காம் கால்வாய் இனிதே வரவேற்றது. ஒருமுறை முங்கி எழுந்தால் சொர்க்கத்திற்குச் சென்றுவிடலாம். குறுக்கே கட்டப்பட்ட சிறு பாலத்தின் பக்கத்தில், ஆண்கள் குழுக்களாக பிரிந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர். குழுவுக்கு நான்கிலிருந்து எட்டுபேர் வரை இருந்தனர். பாலத்தில் மேல், பக்கச்சுரில் விடலை பையன்கள் சிரித்து, கிண்டலித்து பேசிக்கொண்டிருந்தனர். பாலம் இறங்கினவுடன், வரிசையாக டாமினோஸ்போல் சிறுசிறு ஓட்டுவீடுகள். ஆங்காங்கே, வீட்டிற்கு வெளியே, பெண்கள் குழுமி, சோழி விளையாடிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாலையும் அத்தெருவுக்கு ஒருவிதமான கொண்டாட்டமாகவே இருக்கும் போல.

அருள்மிகு கருமாரி அம்மன் கோயிலைக் கடந்து, வெங்கட்டரங்கம்பிள்ளை தெருவைச் சென்றடைய வேண்டும். ஆனால் வழிதெரியாமல், வேறொரு தெருவிற்குபோயாயிற்று. ஐந்து நிமிடங்கள் கழித்து, பார்த்தசாரதி குளம் கண்ணில்பட்டது. கடவுள் நம்பிக்கை உள்ளவர், ஆகா இது அவனின் திருச்செயலே அல்லவா என்று மயிர்கூச்செறிந்திருப்பார். நான் பெருமூச்சுவிட்டு, ஒருவரிடம் ட்ரிப்லிக்கேன் ஹைரோடிற்கு வழிகேட்டேன். சதுரத்தில் ஒருபக்க நேர்கோட்டில் செல்வதைவிட்டுவிட்டு, தேவையில்லாமல் ஒரு ப அடித்துக்கொண்டதுதான் மிச்சம். நடந்து வந்து, அதே வெங்கட்டராம் தெருவின் மறுமுனையில் சேர்ந்தேன். மாடுகள் எச்சிலோடு அசைந்து அசைபோட்டுகொண்டிருந்தன. இங்கிருந்து நேராகச் சென்றால் ஹைரோடு வந்துவிடும். இந்த ஒரு சாலையே, மூன்றாக பிரிக்கப்பட்டிருந்தது, பெயரளவில். வெங்கட்டரங்கம்பிள்ளை, சிங்காரச்சாரி மற்றும் பி.வி.நாயக்கர். எந்த வாகன ஓட்டிக்கும் சவாலாக இருக்கும் தெரு. தேமேயென்று நடுத்தெருவிலேயே எருமையைப்போன்று அசையாமல் இருக்கும் பசுக்கள். ஆனால் ஏதோ தோன்றினாற்போல், ஒரு மர்மமான சமயத்தில் தலையை அசைத்து, நடக்கும். இவற்றைத் தவிர, தெருவில் இடை, கடை என்று யோசிக்காமல், எங்கும் நடந்துசெல்லும் மக்கள். இந்த இரண்டையும் சமாளித்து ஓட்டுவது ஒருவருக்கு விடுக்கப்பட்ட அறைகூவலே ஆகும்.

இராகவேந்திர மண்டபத்தையும் சி.எஸ்.ஐ.தேவாலயத்தையும் கடந்தபின், ஒருவழியாக பிரதானசாலையை அடைந்தேன். ஆச்சரியம், அதற்கும் நான் கடந்துவந்த சாலைக்கும் மிகக்குறைவான வேறுபாடுகளே. நகரப்பேருந்துகள் ஓடுகின்றன, அவ்வளவுதான். அகலம் மிகக்குறைவே. வலப்பக்கம் நடக்க ஆரம்பித்தேன். மலபார் நகைக்கடையை அடையாளக்குறியாக மனத்தில் வைத்து வந்திருந்தேன். அங்கு இடம் திரும்பினவுடன், தொலைவில் ரேணுகா பரமேசுவரி கோயில் தென்பட்டது. மிக்ஸி ரிப்பேர் கடைகள், மளிகைபொருட்கள் விற்கும் பெட்டிக்கடைகள், மாலை பஜ்ஜிவாசனை தூக்கும் டீக்கடைகள் என பலவினூடாக நடந்து, கோயிலை அடைந்ததும் நற்றினை தென்பட்டது. இது இரண்டாவது முறை. பதிப்பகம் தரைதளத்தில் புத்தக அச்சும், பிணைப்பும் நடந்துகொண்டிருந்தது. அருகே இருந்த சிறு மாடிப்படிகளில் ஏறினவுடன், வண்ணக்கடல் என்னை வரவேற்றது. வாங்கி என் பையில் போட்டுக்கொண்டேன்.


< பின்
⌂ முகப்பு