அபிஷேக்கின் தோடி

விஜய் டிசம்பர் 31, 2014 #குறிப்பு

மார்கழி கச்சேரிக்குச் சீட்டு வாங்குவதென்பது பேரலைச்சல். மாபெரும் மறைமுக வலை ஒன்று எப்போதும் உண்டு. கச்சேரி அன்று போனால் கண்டிப்பாகச் சீட்டு கிடைக்காது. அந்த மாபெரும் வலையில் யாரையாவது தெரிந்தால் மட்டுமே சாத்தியம். சஞ்சய் கச்சேரிக்கு பார்த்தசாரதி சுவாமி சபாவில் சீட்டு இல்லை என்றான பின், டக்கென்று ஓர் ஆட்டோவைப் பிடித்து மியூசிக் அக்காதமிக்குச் சென்றோம். ஆறே முக்கால் கச்சேரிக்கு, ஆறரை மணிக்கு சேர்ந்தோம். அது புது கட்டிடம், ஏகப்பட்ட நுழைவாயில்கள். தபதபவென்று அங்குமிங்கும் ஓடும் குழந்தைகளையெல்லாம் இடித்துவிட்டு, சேவைமுகப்பில் கேட்டால் இங்கும் சீட்டு இல்லை. உரக்கக் கவலைப்படுவதற்கு ஒரு பயன் உண்டு; அருகிலிருப்பவர் கேட்பர். ஒருவர் வைத்திருந்த மூன்று மேடை சீட்டுகளை எங்களுக்கு கொடுத்தார். அவருக்கு மேடைக்கு முன்னாலுள்ள வரிசையில் டிக்கெட் கிடைத்துவிட்டதாம். சீட்டுக்குரிய எண்பது ரூபாய்களைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டோம். வரிசையில் இருபது நிமிடம் காத்திருந்துவிட்டு உள்ளே சென்றோம். ஒலிவாங்கிகளைச் சரிபார்த்துக்கொண்டிருந்தனர். பாடகர், கஞ்சிரா, வயலின், மற்றும் மிருதங்கம் என எல்லா ஒலிவாங்கிகளின் அலையெண்வெளியீடுகளும் ஒலிஅளவுகளும் சரிபார்க்கப்பட்டன.

கச்சேரி ஒன்பதரைக்கு முடிந்தது. திருமயிலை இரயிலுக்கு இன்னும் 22 நிமிடங்கள் இருந்தன. ஒருமாதிரி ஓடி, நாரதகானசமாவைக் கடந்து, காவேரி மருத்துவமனைக்கருகில், இடப்பக்கம் திரும்பி, திருமயிலை சென்றுசேர ஒன்பது ஐம்பது ஆகிவிட்டது. ஐந்து நிமிடம் காத்திருந்து இரயில் வராததால், அங்கிருந்த அட்டவணையைப் பார்த்தோம். அதில் ஒன்பது நாற்பத்தியெழுக்கே இரயில் என்று போட்டிருந்தது. அடுத்தது பத்து பதினேழுக்கு. அந்த இருபது நிமிடங்கள் மேடையிலேயே உட்கார்ந்து பார்த்த அபிஷேக்கின் முகம் மனத்திற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அவர் பாடிக்கொண்டிருக்கும்போது பலவித முகத்தசைவுகள் இருக்கும். நடுவில் வாத்தியம் வாசிக்கும்போது முகம் குழந்தையாக மாறிவிடும் – அந்த இதழ்விரிந்த சிரிப்பும், ஆர்வமுள்ள சிறுவனின் இரு கண்களும்.


< பின்
⌂ முகப்பு