வாழ்வின் மாவெப்பம்

விஜய் ஜனவரி 18, 2015 #வாசிப்பு #நாவல்

வாழ்வில் சில பகுதிகள் மிக உச்சக்கட்ட அனுபவமாக இருக்கும். நாம் இயற்கையால் உந்தப்பட்டு விளக்கமுடியாச் செயல்களில் ஈடுபடுவோம். மனம் அந்நாட்களில் உக்கிரத்தன்மை கொண்டிருக்கும். மூளையின் அறிவுச்செயல்பாடு சுருங்கிவிட்டாற்போல் இருக்கும். ஒழுக்கம், அறம் பற்றிய கேள்விகளால் அலைகழிக்கப்படுவோம். ஆனாலும் இயற்கையின் ஆதியிச்சையே மேலெழுந்து பொங்கிவரும். பாலையின் பெரும்நிலத்தில் குவித்துகுவித்து அடிக்கும் காற்று முகத்தில் அறைவதுபோல் இருக்கும். காற்றின் தீ தொடர்ந்து நம் நெற்றியில், கண்களில், மூக்கின் நுனியில், காய்ந்த உதடுகளில், காதோரங்களில் வழிந்துவழிந்து ஓடும். நம் தலைமுடியே பற்றி எரிவதுபோல முகம்முழுதும் மாவெப்பம் அலையும்.

அனல்காற்று குறுநாவலில் அருணின் அனுபவங்கள் இந்த வெப்ப உச்சத்தை நோக்கி நகர்வதே. கடும்வெப்பத்தை அவன் உதறநினைத்தாலும், ஒரு கட்டத்திற்குப்பின் அதை அவன் விரும்பவே செய்கிறான். இயற்கையின் விதிப்படி அனலை வாங்கி, அனலை ஏற்று, அனலைக் குடித்து, அனலை விழுங்கி, அனலை நம் வாழ்க்கையின் பகுதியாகவே கருதத்தொடங்குகிறோம். ஒரு கட்டத்தில் வெடித்துச்சிதறி, குளிர்ந்தகாற்று அடிக்கும்போது உணர்கிறோம், இது இவ்வளவுதானா? இதற்காகவா இப்படியெல்லாம் செய்தோம்? நம்மை நாமே பார்த்து, சிரிப்போடு அந்நாட்களைக் கடந்துவிடுகிறோம்.

அந்த எரி அனுபவங்களுக்காகவே வாழ்வின் அப்பகுதி முக்கியமானது, அழகானது.

புத்தகம்: ஜெயமோகனின் அனல்காற்று பதிப்பு: தமிழினி 2009.


< பின்
⌂ முகப்பு