சாதல் என்பது நினைவின் அழிதல் மட்டும்தானா என்ன? உடலுக்கும் சாதலுக்கும் உறவு உண்டா?
வாழ்தல் என்பதைப் பொதுவாக உயிரும் உடலும் ஒன்றாக இருப்பது என்று வரையறை செய்திருக்கிறோம். உயிர்மட்டும் தனித்திருக்கமுடியாது; உடல் தனித்திருந்தால் அது வாழ்தல் அல்ல. மூளை செயல்படுத்தும் கட்டளைகளை உடல் தன் எல்லைகளுக்கு உட்பட்டு நடப்பதே வாழ்தல் என்கிறோம். உடலில் வாழ்வதே ஒரு குறுகிய வாழ்வுதான். மூளை விழையும் எல்லா செயல்களையும் உடல் நிறைவேற்றமுடியாது. உடல் ஈடுபடாத மூளையின் செயல்களே நம்மின் பெருவாழ்வாக இருக்கும். அதற்கு எல்லைகள் கிடையாது.
கலையோ இலக்கியமோ அறிவியலோ இந்த வாழ்வை வாழ்வதற்குத்தான் படைக்கப்பட்டவை. இவற்றைப் படைக்கும்போதுமட்டும் அல்ல, பயிலும்போதே நாம் மிகச்சிறந்த வாழ்வை வாழ ஆரம்பிக்கின்றோம். இசையைப் பயின்று அதைக் கேட்கும்போது, அதன் நுண்வேறுபாடுகளை உணரும்போது, மேலான மூளையின்பம் ஒன்றை அடைகின்றோம். பாரதத்தைப் படிக்கும்போது பீஷ்மனுக்கும் அம்பைக்குமான உறவு நம்முடைய உச்சத்தில் நிகழும் உறவாகவும், கண்ணனுக்கும் பார்த்தனுக்குமான நட்பு நம்முடைய ஆகச்சிறந்த நட்பாகவும் நினைத்து அவற்றில் வாழ்கின்றோம். நியூட்டனின் ஆப்பிளையும், வெளி-நேரத்தையும் ஒப்பிட்டு மெய்சிலிர்க்கிறோம். இந்த அனுபவங்களுடன் ஒப்பிட்டால் உலகின் லௌகீக உறவுகளும், அனுபவங்களும் மிகச் சாதாரணமவை.
கலை, இலக்கியம், மற்றும் அறிவியல், இவற்றைப் படைக்காததும் பயிலாததும் ஒருவிதமான சாதலே. உடல் மரிப்பது இறப்புதான். இக்கணத்திலே கூட சாதாரண லௌகீகக் காரணங்களுக்காகவும், துக்கங்களுக்காகவும், தோல்விகளுக்காகவும் நான் என் உடலை மரித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த இறப்பு மூளையிறப்பிற்கு ஒருபடி கீழ்தான்.