அகமுகநோக்கு

விஜய் பிப்ரவரி 6, 2015 #குறிப்பு #படைப்பு

“தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள் பெரும்பாலும் அகமுகநோக்காளர்களாகவே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.”

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

“என்னையே எடுத்துக்கொள். நான் கல்லூரி நாட்களில் நம் நண்பர்குழுவில் அவ்வளவாக உரையாடவில்லை.”

"ஆனால் அதற்கும் உன் பால்ஈர்ப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்."

“என்னைத் தவிர உன்னையும் சேர்த்து எல்லா பையன்களும் எதிர்பால்ஈர்ப்பாளர்கள்தாம். அதனால் எதைப் பற்றி பேசினாலும், அவ்வபோது நீங்கள் பெண்கள்பற்றி பேசுவது இயல்பானது.”

"ம்ம்ம்"

“அந்த உரையாடல்களில் என்னால் முழுமையாக பங்கேற்க இயலாது. இந்தப் பெண் அழகு என்றோ, அந்தப் பெண் அழகில்லை என்றோ என்னால் வரையறுக்க முடியாது. அவ்வாறான சமயங்களில் எனக்கான வழிகள் என சிலவற்றை நான் கண்டுகொண்டேன்.

ஒன்று, சிரித்துவிட்டு மற்றவரின் கூற்றை ஆதரிப்பது. இரண்டு, மௌனமாக இருப்பது. இரண்டிலும் ஒரு ஆபத்து உண்டு. பலமுறை இதையே பின்பற்றினால் நேரடியாகவே என்னிடம் கேள்விகள் கேட்கப்படும். அப்போது என்னால் மழுப்பவேமுடியாது. அதனால் பொதுவாக நான் கூட்டு உரையாடல்களையே தவிர்த்துவிடுவேன்.”

"நீ இதுமாதிரி பேச்சுகளைத் தவிர்ப்பதைக்கண்டு நாங்கள் உன்னை பெண்கள்பற்றியோ செக்ஸ்பற்றியோ பேசுவதற்கு விருப்பம் இல்லாதவன் என்று நினைத்துக் கொள்வோம் :-) "

"ஆம், சரிதான் :)

ஆண்களைப் பற்றி பேசியிருந்தால் நான் முழுநாள்கூட தொடர்ந்து பேசியிருப்பேன்."

"ஹஹா"

“நான் இயல்பிலேயே அகமுகநோக்காளன் என்று நினைக்கிறேன். பள்ளிநாட்களில் நம் நண்பர்கள் குழுவில் நான் உரையாடியது குறைவே. அப்போது பேசப்பட்ட விஷ்யங்கள் பெண்கள் பற்றியே அல்ல

பெரும்பாலும்.”

"சமீபம் என்னப் படம் பார்த்தாய்?"

“ஓம் ஷாந்தி ஒஷானா. மலையாளம்.”

"ஓ, நசிரியா!"

“இல்லை, நிவின் பாலி ;) “

"நிவின் பாலி எனக்கும் கூட ஹான்சம்மாகத்தான் தெரிகிறான்."

“நீ பையாக இருக்கலாமோ :P “

"இல்லை. எதிர்பால் ஈர்ப்புள்ளவர்களாய் இருந்தாலும், அவர்களுடைய பாலிலும் அழகானவர் யார் என்று சொல்லமுடியும்."

“ஆனால் அது சமூகம் சார்ந்த முடிவாக இருக்குமோ என்று ஐயப்படுகிறேன்.”

"புரியவில்லை"

“நீ ஒரு ஆணை அழகானவன் என்று சொன்னால், அது சமூகத்தால் எது ஆணின் அழகு என்று பெரும்பாலும் சொல்லப்படுகிறதோ, அதையொற்றியே இருக்கும். நான் ஒரு ஆணை அழகானவன் என்று சொன்னால், எனக்கென்று ‘இதுதான் எனக்கான ஆணின் அழகு’ என்று இயற்கையான ஒரு அளவீடு இருக்கும். அதைச் சார்ந்தே நான் மதிப்பிடுவேன்; அது சமூக வரையறைக்கு நேர்மாறாகக் கூட இருக்கலாம்”

"ஓ"

“சரி. கிளம்பனும்.

பாப்போம்”

"பாப்போம்"


< பின்
⌂ முகப்பு