இலங்கையில் குதிரைமலை என்றொரு ஊர் உண்டு. மதுரையிலிருந்து அல்லி வந்து அவ்வூரை ஆட்சி செய்ததாக ஒரு கதையும் உண்டு. அல்லி மதுரையின் ராணியாக நாட்டுப்புறப் பாடல்களில் வலம் வருபவள். வீரத்தோடு “ஆண்”மகனைப் போலவே வளர்க்கப்பட்டவள். மகாபாரத அர்ஜுனன் தமிழகத்துக்கு வந்து அவளை மணந்ததாக கதை. இதே போன்று, இந்தியாவின் வடகிழக்கிலுள்ள மணிப்புரத்துக்கும் அர்ஜுனன் சென்றான். மணிப்புரத்தின் அரசன் தன் பெண்ணை ஓர் ஆணைப்போலவே வளர்த்தவன். அவளின் பெயர் சித்திராங்கதை. அவளுக்கு போர்முறைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தான். மணிப்புரத்தின் அழகான மலைகளைக் குதிரையில் சுற்றி அலைவாள். வேட்டைக்கு தன் பட்டாளத்தோடு செல்வாள். தான் ஒரு ஆண் என்றே நினைத்து வளர்ந்தாள். தான் சித்திராங்கதை அல்ல, சித்திராங்கதன் என்றே வளர்ந்தான்.
அர்ஜுனன் வனவாசத்தில் இந்தியா முழுவதும் சுற்றியபோது, ஒருநாள் மணிப்புரத்துக்கு வந்தான். ஒரு காட்டுப்பன்றியை கையில் வேலோடு துரத்தி வந்துகொண்டிருந்த சித்திராங்கதன், அர்ஜுனனைக் கண்டான். தனக்கு அர்ஜுனன் மேல் அளவிலா ஈர்ப்பு உள்ளதை உணர்ந்தான். சித்திராங்கதையாக மாறினான்.
ரபீந்திரநாத் தாகூர் இக்கதையை மேலும் விரிவுபடுத்தி ‘சித்திராங்கதா’ என்றொரு நாடகக்கவிதை இயற்றியுள்ளார். சித்திராங்கதனாகவே மணிப்புரத்தின் இளவரசி தன்னின் இயல்பாக உணர்கிறாள். சித்திராங்கதனாகவே அர்ஜுனன்மீது காதல் கொள்கிறாள். ஆனால் அர்ஜுனனுக்கு அவன்மீது ஈர்ப்பு இல்லை. ஆகவே காமதேவனிடம் முறையிட்டு, தன்னைச் சித்திராங்கதையாக மாற்றக் கோருகிறாள். அர்ஜுனன் இப்போது சித்திராங்கதையை அழகியப் பெண்ணாக இருப்பதால் காதல் கொள்கிறான். ஆனால், சித்திராங்கதைக்கு இத்தோற்றம் “தான்” இல்லை என்று தோன்றுகிறது. தான் ஓர் ஆணாக இருப்பதையே இயற்கையாகக் எண்ணுகிறான். அர்ஜுனன் தான் ஆணாக இருக்கும்போது காதலிப்பதே தன் மனத்தின் இயற்கைக்கு நேர்மையாக இருக்கும் என்று நினைக்கிறான். தான் ஓர் ஆணா அல்லது ஒரு பெண்ணா என்பதை அந்த நபர்தான் முடிவுசெய்ய முடியும், முடிவுசெய்ய வேண்டும். வெளியில் இருந்து யார் வற்புறுத்தினாலும் தன் இயற்கைக்கு எதிராக மாறக்கூடும். இச்சிந்தனையின்பொருட்டு தாகூரின் இக்கவிதை இன்றைய இந்தியாவுக்கு மிகவும் அவசியம் ஆகிறது.
ரிதுபர்னோ கோஷின் ‘சித்திராங்கதா’ (Chitrangada - A Crowning Wish) திரைப்படம், தாகூரின் இக்கவிதைக்கு திரைவடிவம் கொடுக்கிறது. ‘ருத்ரா’ ஓர் ஆடல்கலைஞன். மேடைநாடகங்களை இயக்குபவன். அவன் தன்னிடம் சமுகம் சொல்லும் பெண்தன்மை நிறைந்திருப்பதை உணர்கிறான். அவனுக்கு மற்ற ஆண்களின்மீது ஈர்ப்பு, பெண்களின்மீது அல்ல. பெண்தன்மை இருந்தாலும், தன் இயக்குநர் வேலையில் எப்போதும் ஒரு கோபத்துடன் இருப்பவன். அவன் குழுவில் புதிதாக சேரும் தாளவாசிப்பவன், ‘பார்த்தோ’ மீது காதல்கொள்கிறான். பார்த்தோவுக்கும் அவன்மீது காதல். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவும், குழந்தை தத்தெடுத்துக்கொள்ளவும் இந்தியாவில் வழியில்லை என்று ருத்ரா உணர்கிறான். தான் ஒரு பெண்ணாக மாறுவதாக முடிவெடுக்கிறான். ஆனால் இதில் பார்த்தோவிற்கு விருப்பமில்லை.
இப்படத்தில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவை மூன்று உறவுகள்: ருத்ராவிற்கும், பார்த்தோவிற்குமான உறவு, ருத்ராவிற்கும் அவள் பெற்றோருக்குமான உறவு, மற்றும் அவளுக்கும் சமூகத்துக்குமான உறவு. ஒவ்வொரு உறவின் ஆழங்களை இப்படம் அற்புதமாக ஆராய்கிறது.
ருத்ராவின் பெற்றோருக்கு, குறிப்பாக அவள் அப்பாவுக்கு, தன் மகன் பெண்ணாக இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தன் உறவினரும், சமூகமும் என்ன சொல்லும் என்று யோசிக்கிறார். மகன் பெண்ணாக இருப்பதை அவமானமாக உணர்கிறார், அவளின் நாடகங்களுக்கு செல்ல மறுக்கிறார். ருத்ரா தான் ஒரு பெண்ணாக மருத்துவரீதியாக மாறமுடிவெடுத்துள்ளதைக் கூறும்போது இருவருமே அதிர்ச்சியடைகின்றனர். அவள் அம்மா கேட்கும் ஒரு கேள்வி: அந்த உடலை நான் பத்துமாதம் என் வயிற்றில் சுமந்திருக்கின்றேன். எனக்கும் அதில் உரிமை உள்ளது.
இந்தியச்சூழலில், குறிப்பாக தமிழகச்சூழலில் இப்படம் ஒரு திகைப்பை, அதே சமயம் ஒரு திறப்பையும் ஏற்படுத்தும். ஆண் என்றால் போர்வீரன் என்ற படிமம் சங்க இலக்கியத்திலிருந்து, அக்காலத்தேவைக்கு வளர்க்கப்பட்ட படிமம், இன்று தகர்க்கப்பட்டாக வேண்டும்.