நண்பனுக்கு ஒரு சிறுகுறிப்பு

விஜய் மே 22, 2015 #கட்டுரை #குறிப்பு

மனிதனில் உயிரியல் பால் இனங்கள் (biological sex) உண்டு – ஆண் மற்றும் பெண். உயிரியல் பால்வகை என்பது இயற்கை விதித்த உடல் சார்ந்த வகை. ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு சார்ந்த பால் இனமும் (gender) உண்டு. தான் யார் என்று தன் இயல்பான உணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி கொண்ட பால். உதாரணமாக உடல்சார்ந்து ஆணாக இருப்பவர், தன் உணர்வு சார்ந்து தன்னைப் பெண்ணாகக் கொள்ளலாம். இவர்கள் திருநங்கைகள் (transwomen) எனப்படுவர். பொதுவாக திருநர்கள் (transgenders) என்று பெயர். இவ்வாறாக அல்லாமல், தன்னை ஆணாகவும் அல்லாமல், பெண்ணாகவும் அல்லாமல் கருதுபவர்கள் உண்டு. சிலநேரம் பெண்ணாக, சிலநேரம் ஆணாக உணர்பவர்களும் உண்டு.

இனக்குழு சமூகத்தில் இருந்தே ஆண்-பெண் இருமை வலியுறுத்தப்படுகிறது. நிலபிரபுத்துவச் சமூகத்திலும் இதே நிலைதான். யோசித்தால் அவை போர்ச்சமூகங்கள். சங்க இலக்கியங்களிலே பார்க்கலாம் - அது ஓயாமல் தொடர்போர் நிகழ்ந்தகாலம். ஆகவே, ஆணுக்கு உடல்சார்ந்த வீரம் விழுமியமாக அளிக்கப்பட்டது. பெண்ணுக்கு வீடுசார்ந்த விழுமியங்கள். ஆகவே பெண்ணுணர்வுள்ள ஆண்கள் இச்சமூகக்கட்டமைப்பிற்கு வெளியே தள்ளப்பட்டனர். ஒரு நிலையான பேரரசு உருவானபின்னர் திருநர்களுக்கு சில அந்தஸ்துகள் இருந்தததையும் நாம் காண்கிறோம். ஆனாலும் பொதுவாக, அவர்கள் குடும்ப அமைப்புக்கு வெளியேயே நிறுத்தப்பட்டனர்.

பால் இனங்களைப் போன்று பால் ஈர்ப்பும் (sexuality) சமூகத்தால் இருமையாக்கப்படுகிறது. ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் விரும்பவேண்டும், மற்றும் ஒரு பெண் ஓர் ஆணைத்தான் விரும்பவேண்டும் என்பது ஒரு சமூக எதிர்ப்பார்ப்பு. ஆனால், இயற்கையாக ஒருவருக்கு உருவாகும் ஈர்ப்பு இதன்படி நிகழவேண்டும் என்பதில்லை. ஓர் ஆண் மற்றொரு ஆணை விரும்பலாம், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும். இவ்வாறு தன்பாலீர்ப்புள்ள உடல்சார்ந்த ஆணோ பெண்ணோ, தங்களை முறையே பெண்ணாகவோ, ஆணாகவோ உணரவேண்டும் என்பதில்லை. தன்னை ஆணாக உணர்ந்துகொண்டே ஒருவர் மற்றொரு ஆண்மேல் விருப்பம் கொள்ளலாம். இவ்வாறு தன்னுடைய பாலின் மீதே உள்ள மனிதர்கள் தன்பால் ஈர்ப்புள்ளவர்கள் (homosexuals) எனப்படுவர். தன் எதிர்பாலை விரும்பும் மனிதர்கள் எதிர்பாலீர்ர்புள்ளவர்கள் (heterosexuals) எனப்படுவர். ஆண், பெண் என இரண்டு பாலினத்திரிடமும் ஈர்ப்புள்ளவர்கள் இருபால்ஈர்ப்புள்ளவர்கள் (bisexuals) எனப்ப்டுவர். இருபால்களிடமும் ஈர்ப்பு இல்லாதவர்களும் (asexuals) உண்டு.

இந்தியச் சமூக அமைப்பு தற்போது ஆண்-பெண் உடலுறவையும், காதலையும், திருமணத்தையும் மட்டுமே ஏற்கிறது. இந்தியச் சட்ட அமைப்பு (இபிகோ 377ன்படி) இயற்கைக்கு எதிரான உடல்சார்ந்த உறவைத் தடைசெய்கிறது. இது பொதுவாக தன்பால் உறவைத் தடைசெய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் அச்சட்ட வரிகளின்படி, ‘இயற்கை என்பது என்ன?’ என்பது கேள்விக்குறி. சில ஆண்-பெண் உடலுறவுகளை இயற்கைக்கு மாறானதாகக் கொள்வதற்கும் இடம் உண்டு. ஒருவர் தன்பாலீர்ப்புள்ளவராகவோ, எதிர்பாலீர்ப்புள்ளவராகவோ வாழ்வது சட்டக்குற்றம் இல்லை. காதலும் குற்றம் இல்லை. உடல்சார்ந்த உறவுதான் குற்றமாக கருதப்படுகிறது. சட்டப்படி ஒரேபால்-இருவர் திருமணம் செய்துகொள்ளமுடியாது. ஆனாலும் சேர்ந்துவாழ்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

சமூகத்தில் ஒருவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. பெண் என்றால் இன்னின்ன உடைகள் அணிய வேண்டும். ஆணுக்கு உடல்சார்ந்த வீரத்திலும் வன்முறையிலும் நாட்டம் இருக்கவேண்டும். எழுத்தாளன் என்றால் சமூக விஷயங்களில் கருத்து சொல்லவேண்டும். இப்படி பல. இது ஒருவிதமான நிலபிரபுத்துவ எண்ணம். இச்சாதியினர் இவ்வேலையே செய்யவேண்டும். இவ்வேலை செய்பவன் இப்படித்தான் இருக்கவேண்டும். தொடர்ந்து, பொதுவாக ஆணும், பெண்ணும் ‘ஆண்’,’பெண்’ போலவே இருக்கவேண்டும். இவற்றிலிருந்து மாறுபட்டவர் சமூகத்தில் இருக்கமுடியாது. தன் தனித்தன்மையை மறைத்தே வைத்திருக்கவேண்டும். இந்திய நாட்டின் தற்போதைய மனநிலையும் இவ்வாறுதான் உள்ளது. ஆகவே, ஒரு ஆண் மற்றொரு ஆணை விரும்பும்போது, அது தனித்தன்மையோடு இருப்பதால், மறு எண்ணமே இல்லாமல் புறக்கணிக்கப்படுகிறது.

தன்பால் விருப்பத்தை எதிர்ப்பவர்கள் கூறும் காரணங்கள் பொதுவாக மூன்று: 1. இது இயற்கைக்கு எதிரானது. 2. இது குடும்ப அமைப்பைப் பாதிக்கும் 3. இது மதத்துக்கு எதிரானது.

எது இயற்கை என்பதை மனிதன் வகையறை செய்வது ஒரு நகைமுரண். இயற்கையைப் பற்றி மனிதன் அறிந்துள்ளது சொற்பமே. முழுமையாக இயற்கையை அறிய முடியுமா என்பது ஒரு பெருங்கேள்வி. ஆகவே இது இயற்கை, இது செயற்கை என மனிதன் வகுப்பதை, நான்-வகுத்துள்ள-விதிகளின்-படி இது இயற்கை, இது செயற்கை என்றுதான் கூறமுடியும். தனித்த இயற்கையின்படி (absolute nature), மனிதன் வகுத்துள்ள செயற்கையும் இயற்கைதான். இதையே நாம் நம் இலக்கியத்தில் ‘இயற்கை அல்லாததும் இயற்கைதான்’ என்று காண்கிறோம். இவ்வாறு மனிதன் வகுத்துள்ள விதிகள் நிரந்தரமானவை அல்ல. அவை கால-வெளியின்படி மாறுபடும். நூறு ஆண்டுகளுக்குமுன் உள்ள ஒழுக்கநெறிக்குற்றம் தற்போது குற்றமல்லாததாக கருதப்படலாம். பெண்கள் வேலைக்குச் செல்வது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இழிவானதாக, ஒழுக்கமில்லாததாக கருதப்பட்டது. இப்போது அப்படி இல்லை. தன்பால் விருப்பம், எதிர்பால் விருப்பத்தைப் போன்றே மனிதனுக்கு இயல்பாக மலரக்கூடியது என்று அறிவியலின்படி நிரூபித்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. அதாவது, ஒரு எதிர்பால் ஆண் எப்படி ஒரு பெண்ணின் மீது ‘இயற்கையாக’ இச்சைக் கொள்கிறானோ, ஒரு தன்பால் ஆண் மற்றொரு ஆணின் மீது இச்சைக் கொள்வான். ஆகவே தன்பால் உறவு இயற்கைக்கு எதிரானதாக கருதுவதற்கு வாய்ப்பே இல்லை. இது மனப்பிறழ்வு அல்ல. தேவை, மனப்பிறழ்வோடு உள்ள தற்போதைய சமூகத்தின் மாற்றமும் உயர்வும்தான்.

தன்பால் உறவையும், திருமணத்தையும் தனிமனித உரிமையாக பார்க்கலாம். அதாவது, ‘இது அவரவர் விருப்பத்திற்கு உரியது; அதில் நான் தலையிடமாட்டேன்’ என்று ஒருவர் கூறலாம். ஆனால், இதில் உள்ள ஆபத்து, இவ்வுறவு ‘இயற்கையல்லாததாக இருந்தாலும்’ நான் தனிமனித உரிமையை ஆதரிக்கிறேன் என்ற தொனி வருகிறது. தன்பால் உறவை எதிர்பால் உறவிற்கு நிகராக கருதுதலே சிறந்த வழி, அதுவே உண்மையும் கூட. உதாரணமாக, ஒரு தன்பால் ஆண், தனக்கு விருப்பப்பட்ட ஆணோடு பேசும்போது, அவனுக்கு பொழுதுபோகிறதே தெரியாது. அவனை எப்போது காணப்போகிறோம் என்ற துடிப்பு இருக்கும். அவன்மீதுள்ள காதலால், தொடர்ந்து அவனுக்கு அஞ்சல்கள் பறந்துகொண்டிருக்கும். அவன் வீடு எங்கிருந்தாலும் கண்டுபிடித்து, கதவைத் தட்டி, அவனைச் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அவனுக்காக கவிதை எழுத வைக்கும். அவன் வாசனை அருகிலேயே இருக்கலாகாதா என்று ஏங்கவைக்கும். தன்பால் உடலுறவும், எதிர்பால் போலவேத்தான். ஒரு எதிர்பால் ஆணுக்கும், பெண்ணுக்கும் காமத்தின் மீது என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ, அவ்வகைப்பட்ட எதிர்ப்பார்ப்புகளே தன்பால் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும். எதிர்பாலினத்தவருக்கு அவர்களுக்குத் தெரிந்த உண்மைகளின்படி, இவை அருவருப்பாக தோன்றலாம். ஆனால், இன்னொரு பக்கமுள்ள உண்மையையும் அறிந்துகொள்வதே பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அடுத்த புள்ளி, தன்பால் உறவு குடும்ப அமைப்புக்கு எதிரானது என்பது. திருமணம் என்ற அமைப்பு சமூகத்தில் தனிமனிதனுக்கு நிலையான அமைதியான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக ஏற்பட்டது. குடும்பங்கள் பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆயுளுக்கும், அதனால் ஏற்படும் பண்பாட்டுக்கடத்தலுக்கும் இன்றியமையானவை. (திருமணம், குடும்பம் போன்ற அமைப்புகள் வேண்டுமா என்பது தனிக்கேள்விகள். அவை இக்கட்டுரையின் மையத்துக்கு அப்பாற்பட்டது.) எதிர்பால் ஈர்ப்பு திருமணத்திற்கு அங்கீகாரம் இருக்கும்போது, தன்பால் திருமணத்துக்கும் அது பொருந்தும். விருப்பப்பட்ட இருவர் குடும்பமாகச் சேர்ந்துவாழ்வது, மொத்த சமூகத்தையே அழிக்காது. ஒரேபால்கொண்ட இருவர் குடும்பமாக வாழலாம் என்பதை, மறுபடியும், ஆண்-பெண் குடும்பத்துக்கு நிகராக, இயற்கையாகக் கொள்ளவேண்டும் என்ப்தே முதல்படி. தன்பால் தம்பதியினர் குழந்தைகளையும் பெற்றுக்கொள்ளலாம். ஆகவே, மனிதகுல தொடர்ச்சிக்கு அறுதலும் ஏற்படாது.

அடுத்ததாக மதம். குறிப்பாக இந்தியா பல்வேறு மதங்களின் தொகை என்பதால் பல எதிர்ப்புகள் உள்ளன. இவை மதத்திற்கு தன்னைப் பிரதிநிதியாகக் கருதும் மதநிறுவனங்களிடமிருந்து வருகின்றன. இவ்வெதிர்ப்புகளும் பெரும்பாலும் ‘இது இயற்கை அல்ல’, ‘இது குடும்பத்திற்கு எதிரானது’, ‘இது பண்பாட்டுக்கு எதிரானது’ போன்றவற்றையே சுற்றியுள்ளன. கூடுதலாக, மதநூல்கள் இவற்றை மனிதத்துக்கு எதிரானதாகச் சொல்கின்றன என்று சொல்லும். ஆனால், இந்தியா போன்றொரு மதசார்பில்லா ஜனநாயகம், என் நோக்கில், அறிவியலின்படியும், தனிமனித உரிமையின்படியுமே முடிவெடுக்கவேண்டும்.


< பின்
⌂ முகப்பு