எண்ணும் ஈட்டவோ

விஜய் ஜூன் 5, 2015 #குறிப்பு #கம்பராமாயணம்

“மத்துறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு உள்ளம் தள்ளுறும்
பித்து நின்பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ”

கம்பனின் சொல்லிணைப்புகள் மிக அற்புதமானவை. மத்துறு தயிர் – தயிரை மத்து சுழற்றி சுழற்றி அடிக்கும், துமி தெறிக்க பிரளயம் போன்று ஒலி பிறக்கும். மனத்தின் வேதனையை இச்செயலோடு ஒப்பிடுவதற்கு கம்பனால் மட்டும்தான் முடியும். தத்துறும் உயிர் - உன் பிரிவினால் உயிர் வாழ்வுக்கும் சாதலுக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதயத்தை இரத்த குழாய்கள் அங்கும் இங்கும் குடைந்து கடைகின்றன. தயிர் பொங்குவது போல், இரத்தம் இதயத்தைவிட்டு பொங்கி வழிகிறது - எந்த நொடியும் வெடித்து விடலாம் என்பதைப்போல். ஐம்புலனைகளையும் அடக்கியவன் யோகி; அவன் பிரிவின் வேதனை, ஐம்புலன்களையும் வெளியே தள்ளி, அவற்றையே இல்லாமலே ஆக்குகிறது. ஆகவே நான் யோகிக்கும் மேல். நின் தொடுதலன்றி வேறு எவர் தொட்டாலும் அது தொடுதலே அல்ல. உன் குரலைத் தவிர எந்த அலையையும் என் காதால் கேட்க இயலவில்லை. உன்னை நோக்காமல் என் கண் பார்வையையே இழந்துவிட்டது. உன் வாசனை தவிர எனக்கு எதுவும் மணம் அல்ல. உன் இதழின் சுவையன்றி எதையும் எந்நாக்கு அறியவில்லை. இவ்வைம்புலனும் இல்லாமல், உயிர் இருந்து என்ன பயன்! நான் பித்துநிலையில் மிதக்கின்றேன். உன் பிரிவினில் பிறந்த வேதனை இவை மட்டுமோ என்ன! அவை எண்ணுவதற்கு உரியவோ! அலகிலாமல் விளையாடுபவனே, எண்ணிலடங்கா என் வேதனைகள் உனக்கு விளையாட்டோ!


< பின்
⌂ முகப்பு