காலத்தின் வழியே ஓடிகொண்டிருக்கும் மனித ஓடையில் மிகச்சிலரே குமிழிகளாக உயர்கின்றனர். மீதமுள்ளோர் மத்திய தளத்திலே நின்றுவிடுகின்றனர். திருப்பிப்போடும் அறிவியலையோ, தத்துவத்தையோ, கலையையோ செய்வது மிக மிகச்சிலராலேயே சாத்தியம். காரணம் பல இருக்கலாம். இயற்கையான நரம்பு அமைப்போ, வளர்ப்பு முறையோ. மற்றவர்கள் சுமாரான அறிவியலையும், சுமாரான தத்துவத்தையும், சுமாரான கலையையுமே நடத்துகின்றனர். ஏன் என்று கேட்டால் முடியாது, அவ்வளவு தான். ஆன்ட்டோனியோ சலியேரி, பதினெட்டாம் நூற்றாண்டு வியென்னாவின் ஒரு சிறந்த இசையமைப்பாளர். இளவயதில் இசை பயின்று, வியன்னாவின் அரசு இசைஅமைப்பாளராக பதவி வகித்தவர். தான் உருவாக்கும் இசை கடவுளின் வெளிப்பாடென உணர்ந்தவர். ஏழை இசைஞருக்கு உதவி, இசைமாணவருக்கு பாடங்கள், மணம்செய்துகொள்ளாமல் இசையிலேயே மூழ்கல் என தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். மக்களையும், தன்னையும் மிகவும் நேசிப்பவர். ஆனால் ஒரு புதிய இளைய இசையமைப்பாளனின் வருகை அவரையே திருப்பிப்போடுகிறது. வுல்ஃப்காங் அமெதியஸ் மொட்ஸார்ட்.