எழுத்த்தாளர் பாராவில் இறுதிச் சடங்கு சிறுகதைக் குறித்து என் குறிப்பு.
சிலிக்கான் ஷெல்ஃப் தளத்திலும் இச்சிறுகதைப்பற்றி விவாதிக்கப்படுகிறது.
சிறுகதையின் ஆரம்பத்தில் இரு பெயரில்லா ஆண் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவர்கள் தன்பால் ஈர்ப்பாளர்கள். ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். தெளிவாக யோசிக்கிறார்கள். கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். பெற்றோரிடம் திருமணம் பற்றிச் சொல்ல (அல்லது அப்போதுதான் வெளிவர ) முடிவெடுக்கிறார்கள். நண்பர்களிடம் சொல்ல முடிவெடுக்கிறார்கள். அவர்களிடம் முன்னரே வெளிவந்திருக்கவேண்டும், ஏனென்றால் அவர்கள் இருவரும் எதிர்பால் ஈர்ப்புள்ளவர்களாய் இல்லாததற்கு நண்பர்கள் எந்த ஆச்சரியமும் அடையவில்லை. இருவரில் ஒருவனின் பெற்றோரிடம் வரவேற்பு இல்லை. ஆனால் இருவரும் எந்த சோர்வுமில்லாமல் திருமணத் திட்டத்தைத் தொடர்கிறார்கள். திருமணத்திற்கு முந்நாள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தாங்கள் எப்போதும் பெண்மீது ஈர்ப்படையப் போவதில்லை என்று தெளிவாகச் சொல்கிறார்கள். அதேசமயம் “இது ஒடம்புலேருந்து மனசுக்குப் போன ஒறவுடா. கொஞ்சம் பேஜார்தான்.” என்று இருவரில் ஒருவன் சொல்கிறான். அன்றிரவே ஒருவன் விபத்தில் இறந்துபோகிறான். மற்றொருவன் வெகுநேரம் அழுதபின், பாத்ரூமுக்குள் சென்று தன்னின்பம் காண்கிறான்.
வாசகருக்கு எழும் தன்பால் ஈர்ப்புத் தொடர்பான கேள்விகள் ராமச்சந்திரன் கதாபாத்திரம் மூலமாக கேட்கப்படுகிறது. அவற்றைத் தன்பால் ஈர்ப்புள்ளவரே பதிலளிப்பதுபோல் வருகிறது. திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கும் குழப்பமில்லாத கதாபாத்திரம், பின்னர் இவ்வீர்ப்பு உடம்பிலிருந்து மனத்துக்கு போகும் என்று சொல்கிறது. தன்னைப்பற்றியும், தன்னுடைய பால் ஈர்ப்பைப் பற்றி புரிந்துகொண்டிருப்பவன், திருமணத்தைப் பற்றி ஒருமனதாக தெளிவோடு முடிவெடுப்பவன், இதுபோல் (உடலிலிருந்து மனம்) கருதவோ சொல்லவோ மாட்டான். அல்லது அதற்கான சாத்தியங்கள் இக்கதையில் தென்படவில்லை. ஆண்-பெண் இடையேயான காதல் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டதே. இயற்கையாக எழும் காமத்தை நாம் பண்பாட்டுக்காக காதல் என்று உன்னதப்படுத்தியுள்ளோம். வீரம் என்பது போரின் உன்னதப்படுத்தல் போல. அதேபோன்றுதான் ஆண்-ஆண் காதலும் ஆண்-ஆண் காமத்தை உன்னதப்படுத்தல். ஆகவே, உடலிலிருந்து மனம்தான் தன்பால்ஈர்ப்பு என்று சொல்வது ஒருவகையில் சரியே. ஆனால் அதற்கு நிகராக ஆண்-பெண் ஈர்ப்பும் உடலிலிருந்து மனத்துக்கான ஈர்ப்பே என்று கதையில் வெளிப்பட்டிருந்தால் அது ஒரு வாசகனை நோக்கி கேள்விகளை எழுப்பியிருக்கும். ராமச்சந்திரன் மூலமாக இக்கோணத்தை விரிவுபடுத்தியிருக்கலாம். அது இக்கதையில் நடக்கவில்லை.
தன் காதலன் இறந்தபிறகு தன்னின்பம் அடைவதாகச் சொல்வது, அவனுக்காக இவன் சேர்த்துவைத்திருந்ததை இழப்பதாகக் கொள்வதற்கு இடம் அளிக்கிறது. தாலியை அறுப்பதை இதற்கு இணையாகக் கொள்ளலாம். ஆனால் கதாபாத்திரங்கள் சரியாக விவரிக்கப்படாமையால் இப்படி பொருள்கொள்வதற்கு சிறிதளவே இடம் இருக்கிறது. சிறுகதையில் இறுதி ஆச்சரியம் ஒன்று வைப்பதற்காகச் செயற்கையாக எழுதப்பட்டதாகவே கருதுவதற்கு இடம் அதிகம்; நான் அப்படித்தான் கருதுகிறேன்.
தன்பால் ஈர்ப்பு, இருபால் ஈர்ப்பு போன்றவைப் பற்றி வாசகரிடையே தெளிவு மிகவும் குறைவு. ஆகவே, தகுந்த விரிவு இல்லாமல் மறைப்பிரதியாகச் சொல்கிறேன் என்று கதை எழுதுவது, குழப்பமாகவே முடியும். இக்கதையில் கதாபாத்திரங்களின் ஆழமின்மை இறுதிமுடிவிற்கு அப்பால் ஒரு வாசகன் சிந்திப்பதற்கு இடம் அளிக்கவில்லை.
–
பொருள்: