கார்ல் சேகனின் தொடர்பு

விஜய் நவம்பர் 29, 2015 #வாசிப்பு #நாவல்

விரிந்து செல்வது இரண்டு, பூமி மற்றும் வானம். இந்த இரண்டுமே உயிரினங்களுக்கு பிறந்த உடனேயே அறிமுகமாகின்றன. பூச்சிகள், பறவைகள், விலங்குகள் எல்லாவற்றுக்கும். மனிதன் குழந்தையாக பிறந்தவுடன் பூமி, வானம் இரண்டிடமும் தொடர்பு உண்டாகிறது. பூமி மீதான உடற்தொடர்பு, வானம் மீதான மனத்தொடர்பு. இத்தொடர்புதான் இரண்டின் மீதும் கேள்விகள் கேட்க வைக்கிறது. பூமி தட்டையானதா, வானம் முடிவற்றதா என பல கேள்விகள். மனிதனின் உயிரியல் வாகனங்களான கால்கள் மூலம் நிலத்தை அளந்து பார்க்கத்தொடங்கினான். படகுகள் தயாரித்து நீரை அளந்து பார்க்கத் தொடங்கினான். பிறகு விண்கலங்கள் மூலம் வானத்தை. மனிதனின் உள்ளுர இருக்கும் ஏதோவொரு தேடல் அவனை ஒவ்வொரு இடத்திற்கு நகர வைக்கிறது. அது என்ன தேடல்? தனிமைக்கான தேடல், அல்லது தனிமையின்மைக்கான தேடல். அவனைப் போன்று வேறு எவரேனும் உள்ளனரா என்ற கேள்வி. பூமியிலே தன்னைபோன்ற மனிதன் ஆனால் வேறு இனம் (species) யாரேனும் உள்ளனரா என்று தேட ஆரம்பித்தான். தற்போது பூமியல் உள்ள மனிதர் அனைவரும் ஒரே இனமே (ஹோமோ சேபியன்ஸ்) என்று தெரிந்ததும் ஒரு வருத்தம் உண்டானது (தற்பெருமையும் கூட). இன்னும் பின்னர் சென்று பல மனித (ஹோமினின்) இனங்களைத் தோண்டி எடுத்தான். ஆனால் இதுவும் போதவில்லை. பூமியில் இருந்து விசும்பிற்கு தன் எண்ணங்களைத் திருப்பினான். விசும்பானது பல கோடி வின்மீண் மண்டலங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மணடலத்திலும் பல கோடி நூறாயிரம் சூரியன்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சூரியனுக்கும் பூமியைப் போன்று வாழ்வதற்கு இயன்றதான கோள்கள் இருக்கலாம். அதில் உயிர்கள் தோன்றி பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம். எனவே மனிதன் அவ்வுயிர்களிடம் தொடர்பு கொள்ளத் தொடங்கினான். கார்ல் சேகனின் தொடர்பு (Contact) நாவல் இந்த இடத்திலிருந்து தொடங்குகிறது.

எல்லி ஆரோவே ஓர் இயற்பியல் விஞ்ஞானி தொலைதூர மின்காந்த அலைகளை அனுப்பி வேற்றுகிரக உயிர்கள் இருக்கின்றனவா என தன் குழுவோடு ஆராய்ச்சி செய்பவள். அண்டத்தில் வேறு ஏதேனும் ஒரு கிரகத்தில் உயிர்கள் தோன்றி பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தால், இந்த அலைகளை வாங்கி, அறிந்து திருப்பி செய்தி அனுப்பும். அவ்வுயிர்கள் மனிதருக்கு குறைவான வளர்ச்சி நிலையில் இருக்கலாம்; அப்படி இருந்தால் அவற்றால் நாம் அனுப்பும் செய்தியை பரிக்க முடியாது. அல்லது மனிதருக்கு மேலான வளர்ச்சி அடைந்திருக்கலாம். பிரபல விஞ்ஞான புனைவுகளும் திரைப்படங்களும், வேற்றுயிர்களை மனிதரைப் போன்று பொதுவாகச் சித்தரிக்கின்றன. முகம், உடல், கை, கால், கண், மூளை என மனிதரைப் போன்றே, சற்று உருவ மாறுபாடுகளுடன் (காது வளைந்து பெரிதாக) அல்லது மன மாறுபாடுகளுடன் (உணர்வு இல்லாமல், தருக்கத்தின்படி மட்டும் முடிவெடுக்கக்கூடிய). ஆனால் நம் கற்பனைக்கு முற்றிலும் எட்டாமல் மற்ற உயிரினங்கள் இருக்கலாம். உதாரணமாக, அவை மனிதனைவிட பலபடிகள் பரிணாம வளர்ச்சியில் முன்னேறி, உடலை உதறி மனமும் மூளையும் மட்டுமேயாக வாழ்ந்துகொண்டிருக்கலாம்.

எந்த வடிவில் உயிர்கள் இருந்தாலும், அவை மனிதனைப் போலவே இருந்தாலும், நாம் அனுப்பும் கதிர்களை அவை படித்து தெரிந்துகொள்ளும் என்று சொல்லமுடியாது. மறுபுறம் பார்க்கையில் மின்காந்த கதிர்கள்தான் இவ்வண்டம் முழுக்க உள்ளன, எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், ஏன் ஒளியும் ஒரு மின்காந்த கதிர்தான். அதனால், மனிததைப் போன்று வளர்ந்த உயிர்கள் இக்கதிர்களைப் பற்றி அறிந்திருக்கும் என ஒருவாறு நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எப்படி தொடர்புகொள்வது? அவர்கள் முற்றிலும் வேறு விதமாக இவ்வண்டத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கலாம் - மனிதனைப் போல் கண், காது, மூக்கு என அல்லாமல். உதாரணமாக பூமியிலேயே வேறொரு மனித இனம் (ஹோமோ சேப்பியன்ஸ் அல்லாமல், வேறு) நம்மிடையே இருந்தால், நாம் அவர்கள் பேச்சை, மொழியை கண்டறிந்திருப்பார்கள் என நிச்சயமாகக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் என்ன பேசுவார்கள், அதன் பொருள் என்ன என நமக்கு தெரியாது. உதாரணமாக ஒரு பெரிய மலை இருக்கிறது; ஒரு பக்கம் நாம், மறுபக்கம் அந்த மனிதயினம். இருவரும் எதிர்பக்கத்தைப் பார்க்க முடியாது என்று வைத்துக் கொள்வோம்; ஆனால் ஒலி எழுப்பினால் மட்டும் கேட்க முடியும். இப்போது நாம் அப்பக்கம் யாராவது இருக்கிறார்களா என கண்டறிய ஏதேனும் தற்போக்காக (random, ராண்டமாக) குரல் கொடுக்கலாம். ஆனால், நம்மோடும் அவர்களோடும் சேர்ந்து வாழ்கின்ற பரிணாமத்தில் கீழே உள்ள குரங்கு கூட்டமும் கூட அதேபோல் ஒலி எழுப்ப முடியும். எனவே புத்திசாலித்தனமாக நாம் சீரான இடைவெளியில் குரல் எழுப்பலாம். மற்ற உயிரினங்கள் எழுப்பும் இயற்கையான குரல்கள் தற்போக்காக இருக்கும். அதனால் சீரான ஒலி எழுப்பினால் இது செயற்கையாக ஏதோவொரு உயிரினம் ஒலி எழுப்புகிறது என்று கண்டறியலாம். இது ஓரளவு வேலை செய்யும் என்றாலும், இயற்கையிலும்கூட சீரான ஒலி எழுப்பும் உயிர்கள் உண்டு, மரங்கொத்தி பறவை போல.

இவ்வண்டமே கணக்கின் களியாட்டம் எனச் சொல்பவர்கள் உண்டு. இந்த அண்டத்தின் பொதுமொழி கணக்கு (math) என நாம் கருதமுடியும். எந்த ஒரு மேலான உயிரும் எண்ணையும் எழுத்தையும் இகழாது. அவர்கள் எழுத்து, அதாவது மொழி, நமக்கு தெரியாவிட்டாலும், எண் எல்லாருக்கும் பொது. உதாரணமாக பகா எண்களை (prime, ப்ரைம்) எடுத்துக்கொள்ளலாம். எந்த ஒரு எண் தன்னாலும், ஒன்று எனச் சொல்லப்படும் எண்ணாலும் மட்டும் வகுக்கப்படுகிறதோ அது பகா எண். எழு ஒரு பகாவெண். ஆறு பகாவெண் அல்ல. ஆகவே நாம் மற்ற உலகங்களுக்கு அனுப்பும் செய்தி தொடர் பகா எண்களாக இருக்கலாம். முதலில் இரண்டு சீரான ஒலித்துணுக்குகள், சிறிது இடைவெளிவிட்டு, மூன்று சீரான துணுக்குகள், அப்புறம், ஐந்து, ஏழு, பதினொன்று, இது போல், ஒரு ரயில்பெட்டிகள்போல் அனுப்பலாம். முதல் பெட்டிக்கு இரண்டு சன்னல்கள், இரண்டாவது பெட்டிக்கு மூன்று சன்னல்கள், மூன்றாவது பெட்டிக்கு ஐந்து, அப்புறம் எழு, பதினொன்று. இந்த ரயிலை வாங்கிக்கொள்ளும் உயினினம், இது நிச்சயம் இயற்கையான ரயில் அல்ல, செயற்கையாக மற்றொரு உயிரினம் படைத்த ரயில் எனத் தெரிந்து கொள்ளும்.

எல்லி ஆரோவேயின் குழு தொடர்ந்து வானுக்குச் செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் எந்தப் பதிலும் இல்லை. அவர்கள் குழுநிதி முடியப்போகிறது. அரசு இவ்வாராய்ச்சிக்கு மேலும் பணம் கொடுக்க மறுக்கிறது. இந்த பயனில்லா அராய்ச்சிக்குப் பதில் வேறேனும் நடைமுறை தொழில்நுட்பத்துக்கான ஆராய்ச்சிக்கு பணம் கொடுக்கலாம் என்று சொல்கிறது. இக்காலக்கட்டதில் ஒருநாள் எல்லி அச்செய்தியைக் கேட்கிறாள். வானிலிருந்து சீரான கதிரொலி. தொடர் பகா எண்கள். அவள் குழுவில் எல்லாரும் குதூகலிக்கிறார்கள். இந்த ஒலி வேகா என்றொரு கிரகத்தில் இருந்து வருகிறது என்று கண்டுபிடிக்கிறார்கள். இந்த எண்தொடரின் செய்தியோடு, ஒரு காணொளி செய்தியும் மறைந்திருப்பதைக் க்ண்டுகொள்கிறார்கள். அக்கணொளி, மனிதன் முதன்முதலில் மின்காந்த அலைக் கண்டுபிடித்து ஒளிபரப்பப்பட்ட ஜெர்மனி ஒலிம்பிஸின் தொடக்கவிழா. பெரிய அளவில் ஒளிபரப்பப்பட்டது என்பதால் பூமியில் இருந்து வெகுதூரம் சென்றிருக்கிறது. அதை வேகா உயிர்கள் வாங்கிக்கொண்டு, திருப்பி அனுப்பியுள்ளார்கள். வேகா கிரகம் பூமியில் இருந்து இருப்பத்தியாறு ஒளியாண்டு தொலைவில் இருப்பதால், ஐம்பத்தியிரண்டு ஆண்டுகள் கழித்து நாம் அச்செய்தியைத் திரும்பப் பெற்றிருக்கிறோம். ஆகவே இந்தச் செய்தி வெகு சமீபகாலமாக நாம் அனுப்பிக்கொண்டிருக்கும் சீரலை செய்திக்கு பதில் அல்ல என்று உணர்கிறார்கள். வேகா உயிர்கள் நம்மைப்போல அல்லது நம்மைவிட பரிணாமத்தில் உயர்வாக இருக்கவேண்டும் என்று உணர்கிறார்கள்.


< பின்
⌂ முகப்பு