குறளின் உணவு

விஜய் ஜனவரி 25, 2016 #குறிப்பு #குறள்

உணவு குறளில் கல்வியோடு எப்போதும் தொடர்புபடுத்தப்படுகிறது. அக்காலத்தில் கல்வி என்பது செவியாலேயே நுகரப்பட்டது ஆகையால் கேள்விச்செல்வத்தைக் குறள் மிகவும் போற்றுகிறது. வயிற்று உணவுக்கு முக்கியத்துவம் இரண்டாம் இடம்தான். முதலில் செவிக்கு உணவிட்ட பின்பே வயிற்றுக்கு. காலையெழுந்தவுடன் கல்வி என்பதே பாரதி இதிலிருந்து எழுப்பும் கவிதை. செவி பாட்டுக்கும் கூட பயன்தரும் என்றாலும், அந்தக் கனிவு தரும் பாட்டு, கல்விக்கு அப்புறம்தான். மூளையின் சுறுசுறுப்புமிக்க நியூரான்கள் துடிப்போடு இயங்கும் காலையிலேயே வாழ்வுக்கு மிகத்தேவையான கல்வியைப் பெற்றிடவேண்டும். இப்போது கல்வி என்பது கேட்டல் மட்டும் இல்லை; அது பார்த்தல் (காணொளி), விவாதித்தல் (நண்பரோடு, ஆசிரியரோடு) என விரிகிறது. ஆனால் ஒருவகையில் பார்த்தால், கல்வி கேட்டலே; நாம் உள்வாங்கும் கல்வியை நம் மனம்/மூளை நமக்குள்ளேயே ஏதோவொரு குரலோடு சொல்லிக்கொள்கிறது. இவ்வாறு நமக்குள்ளேயே பேசி, கேட்டு, விவாதித்து அறிந்துகொள்தலே நாம் படிக்கும் கல்வியை மேன்மேலும் செறிவாக்கும். மூளையைப் பொருத்தவரை கல்வி கேள்விச்செல்வமே. இதையே குறளாசிரியன் உணவினும் உண்டது அறல் இனிது என்கிறார். உணவை உண்பதைவிட செரிப்பதே இனிது. பாரதியின் ஜகத்தினை அழிக்கக்கோரும் உணவும் இதுவே. எல்லா குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கச்செய்யாவிட்டால் இவ்வரசின் பயன்தான் என்ன!


< பின்
⌂ முகப்பு