பிடித்ததைச் சாப்பிடல்

விஜய் டிசம்பர் 22, 2017 #குறிப்பு

ஒருவர் ஊன் உண்பதும் மறுப்பதும் அவருடைய வளர்ப்பின் காரணமாக அமையுமா? முயன்றும் கூட என்னால் ஊன் உண்ணமுடியவில்லை. ஆனால், சிலர் அச்செயலுக்கு என் சாதிதான் காரணம் என்கின்றனர். அதாவது என் சாதி, சாத்திரமாக ஊன் உண்பதை மறுக்கிறது, அதனால்தான் நான் உண்ணமாட்டேன் என்கிறேன், என்கின்றனர். ஆனால் அது தவறு. நான் முட்டை சாப்பிடுகிறேன். அதையும்தான் என் சாதி மறுக்கிறது (சமூக ரீதியாக, எழுத்து வடிவமாக எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை). என் சாதியை என் குடும்பத்தை எதிர்த்து நான் முட்டை சாப்பிட்டாலும், ஊன் உண்பதில்லை. ஏனென்றால் அது எனக்கு பிடிக்கவில்லை. நான் ஊன் உண்ண முயற்சித்தாலும், என்னால் முடியவில்லை. காரணம் என்னவென்று யோசித்தால், என் நரம்பு பின்னல்கள் இருபது ஆண்டுகளாக ஊன் உண்ணாமல் இருக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. அத்தொடர்ப்பயிற்சியை மீற நரம்பு அமைப்புகளால் இயலவில்லை.

எப்படி மீறுவது? நரம்புப்பின்னலுக்கு மறுபயிற்சி அளிக்கவேண்டும். புதிய பயிற்சியை நரம்புப்பின்னல் எளிதாக கற்றுவிடும். அப்போது அது சுழியத்திலிருந்து (அல்லது random மிலிருந்து) ஆரம்பிக்கிறது. அதனால்தான் குழந்தையைப் பயிற்றுவிப்பது எளிது. ஆனால் மறுபயிற்சி கடினம். நரம்புப்பின்னல் கற்பிக்கப்படுவதற்கு gradient descent முறைமையைக் கையாள்கிறது. அதாவது தனக்கு ஓவ்வொரு data (தரவு) அளிக்கப்படும்போதும் அது சிறிதளவு கற்கிறது. புதிய பயிற்சியாக கற்கப்படும்போது இச்சிறிய அளவே பெரியதாக இருக்கும். ஆனால், மறுபயிற்சியின்போது பெரிதளவு கற்கவேண்டுமானால் அதற்கு நிறைய தரவுகள் தேவைப்படும்.

மூளைக்கு ஊன் உண்ண மறுபயிற்சி அளிக்கப்படுவதற்கு ஒருவர் தினமும் ஊன் உண்ண முயற்சிக்கவேண்டும். ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. இதே நரம்புப்பின்னல் சுவை என்றொரு பண்பாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே ஊன் உண்ணாமலிருக்க நெடுங்காலமாக பயிற்சி அளிக்கப்பட்ட ஒருவர் அதை உண்பதற்கு மறுபயிற்சி பெற்றுக்கொள்ள மிகவும் கடினமாக இருக்கிறது. இந்தப் புதிய சுவை தனக்கு ஏற்புடையது அல்ல என்று மூளை வெளியே தள்ளுகிறது. அதனால் அவருக்கு அதைச் சாப்பிட கடினமாக உள்ளது.

முடிவாக, அவர் ஊன் உண்ண மூளை எப்போதும் அனுமதிக்காதா? அனுமதிக்கும். சுவையைத் தாண்டி வேறொரு பண்பு பெரியதாக உருவம்கொள்ளும்போது. அவர் கடலில் தன்னந்தனியே ஒரு படகில் எந்தவொரு உணவும் இல்லாமல் சிக்கிக்கொண்டால், அவர் தன் உயிரைக் காத்துக்கொள்ள மீனைச் சாப்பிடுவார். அங்கே மூளை சுவையைவிட உயிரைப் பிரதானப்படுத்துகிறது. தினப்படி சந்தர்ப்பங்களில் இப்படி நடப்பதில்லை.


< பின்
⌂ முகப்பு