மஹாநகர் - சத்யஜித் ராய்

விஜய் ஏப்ரல் 5, 2018 #குறிப்பு #திரைப்படம்

மகாநகரம். நகரங்கள் எப்போதும் மாற்றத்தின் விளிம்பில் நிற்கின்றன. பல்வேறு மக்களின் சங்கமம், பல்வேறு பண்பாடுகளின் கலவை, பல்வேறு சிந்தனைகளின் ஊற்று, நகரங்கள். பெண்ணுரிமைக்கான முகம், மாற்றுப்பாலினத்துக்கான முகம், மாற்றுப்பாலீர்ப்புக்கான முகம் என பலமுகங்களை நகரங்கள் சூட்டிக்கொள்ளும். எதுவும் முகமூடி அல்ல, முகமேதான்.

ஆரத்தி அறுபதுகளின் கொல்கத்தாவின் ஒரு மத்தியமக் குடும்பத்தின் மறும்பெண். கணவனும் அவன் தந்தையும் வெளிப்படையாகவே தாங்கள் பழமைவாதிகளாக அறிவித்துக்கொண்டவர்கள். குடும்ப வறுமை காரணமாக ஆரத்தி வேலைக்குப்போக முடிவெடுக்கிறாள். கணவனுக்கும் அவன் தந்தைக்கும் இது முழுவதுமாகப் பிடிக்கவில்லை. ஆனால் கணவன் பணத்தேவைக்காகச் சம்மதிக்கிறான். அவன் தந்தையோ மனதிற்குள் எப்போதும் புழுங்கிக்கொண்டே இருக்கிறார்.

முதன்முதலில் ஒரு உலகத்திலிருந்து வேறொரு உலகத்தைப் பார்க்கும் யாருக்கும் சிறு துணுக்குறல் இருக்கும். இந்தப் பழைய உலகம் தான் இல்லாமல் செயல்படமுடியுமா என்ற மிகையான கேள்வியும் எழும்பும். ஆனால் தான் இல்லாவிட்டாலும் இவ்வுலகம் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கும் என்ற புரிதல் அப்போதுதான் நிகழும். ஆரத்தி முதல்நாள் வேலைக்கு தன் கணவருடன் டிராமில் போகும்போது சிறுபிள்ளைக்கு உடல்நிலை சரியில்லையே, அவன் சரியாக சாப்பிடுவானா, மருந்து உட்கொள்வானா எனக் கேட்கிறாள்.

ஆரத்தியின் வேலைநண்பர் அவளுக்கு உதற்சாயமும் குளிர்கண்ணாடியும் தருகிறாள். அவற்றை வேலையின்போது அவள் அணிந்துகொள்கிறாள். இவற்றைக் கணவன் பார்க்கும்போது துணுக்குறுகிறான். அவனைப்பொறுத்தவரை பெண்ணுக்கென்று எந்த தன்னாசையும் இருக்கக்கூடாது, கணவன் வாங்கிக்கொடுக்கும் வெறும் சேலை, பொட்டைத் தவிர எதுவும் அணியக்கூடாது. அவ்விரு சாதனங்களும் பெண் விடுதலையின் சின்னங்களாய் காட்டப்பட்டுள்ளன. அதேநேரம், கணவன் எப்போதும் புகைப்பிடித்துக்கொண்டிருக்கிறான். யாரும் அதைக் கேள்விக்குட்படுத்தமாட்டார்கள்.

சமூகம் நேர்மறையான மாற்றம்கொள்ளும்போது அச்சமூகத்தில் உள்ள சிலர் – பழமைவாதிகள் – எப்போதும் அதை எதிர்த்துதான் கொண்டிருப்பார்கள். ஒரு நகரமே இம்மாற்றத்துக்கான வாசலாக அமைய முடியும்.


< பின்
⌂ முகப்பு