எண்ணும்பொழுது (ஜெயமோகன்)

விஜய் ஜனவரி 27, 2021 #வாசிப்பு #சிறுகதை

ஜெயமோகன்.இன் பிரசுரம்.

”எண்ணும்பொழுது” சிறுகதை வாசித்தேன். ஒரு தளத்தில், எப்போது கதைக்கால ஆண் எண்ணத் தொடங்கினானோ அன்றே காதலில் நம்பிக்கை இல்லாமல் ஆகிறது. காலை பகல் மாலை என்று தெரியாமல் புரிவதே காதல். conscious உணர்வு எப்போது தலையிடுகிறதோ அப்போது காதல் உடைய நேர்கிறது. வெண்முரசின் பீஷ்மன் அம்பையிடம் சொல்வதுபோல் எப்பொழுது கையை நீட்டுகிறோமோ காட்டுக்கிளிகள் அஞ்சி பறந்துவிடும்.

மறுதளத்தில் ”எண்ணும்பொழுது” என்பது எண் என்பதை விடுத்து எண்ணம் என்பதையே நாடியது. உங்களின் குறள் உரையில் நீங்கள் குறிப்பிட்ட எண்ணென்ப ஏனைய எழுத்தென்ப என்பதன் சாத்தியப் பொருளான எண்ணம் என்ப வந்துபோனது. லெக்சிகனிலும் எண்ணம் என்பதற்கு thought உடன் கடைசியாக mathematics என்றும் பொருள் தரப்படிகிறது. போலவே எண் என்பதற்கு calculation உடன் thoughtம் வருகிறது.

கதைக்காலத்தில் பெண் கவித்தன்மையோடு முல்லையைக் கொடுக்கிறாள், தான் காத்திருப்பேன் என்று. கடலைவிட பெரியதாக இருக்கப்போகும் பிரிவு எனும் கங்குல் வெள்ளத்தை காத்து இருந்து கடந்துவிடலாம் என்று. பொருள்வயின் செல்லும் ஆணோ ஒரு பொருளையே கொடுக்கிறான். ஒருவேளை வெகுநாட்கள் கழித்து பூக்கள் உதிராமல், அக்கணமே முல்லை உதிர்ந்துவிட்டதோ.

வள்ளுவன் சொன்னது போல் “பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை” — ஒருவர் ‘நான் உன்னைப் பிரிகிறேன்’ என்று சொல்லும் அளவுக்கு கொடுமையானவர் என்றால், அவர் திரும்பி வந்து என்னிடம் அன்புசெய்வார் என்று கொள்ளுதல் மிகுந்த முட்டாள்தனம் அல்லவா. உன்னைவிட்டுச் செல்கிறேன் என்ற எண்ணம் எழுந்தக்கணமே முல்லை உதிர்வதற்கான அறிகுறியா.

நிகழ்காலத்தில் ஆண் கவித்தன்மையோடு உள்ளான். அவள் எதிர்துருவம். இருவேறு துருவங்களைச் சேர்த்து வைத்திருப்பது காமம் ஒன்றே. சுடச்சுடவே பொன் மேலும் சுடரும். காதல், காமத்தால் சுட்டால் ஒழிய ஒளிராது. தங்கம் வெளிறியே போகும். எப்போது அவர்கள் காமமின்றி பிரிய நேர்கிறதோ அப்பொழுதே அவர்கள் எண்ணத் தொடங்கிவிடுவார்கள்; அப்பொழுதே நிரந்திர பிரிவு தொடக்கம்.


< பின்
⌂ முகப்பு