இதுவே நான் வாசித்த முதல் கி.ராஜநாராயணன் எழுத்து. குறுநாவலாகச் சொல்லப்படுகிறது. சிறுகதையாகவும் வாசிக்கலாம்.
நாவலில் முதலிலேயே ஈர்ப்பது அது கண்முன் காண்பிக்கும் கிடை என்ற உலகத்தின் சித்திரம். ஆட்டு மேய்ச்சல் என்றால் என்ன, ஒரு ஊருக்குள் எவ்வளவு ஆடுகள் உள்ளன, மேய்ச்சல் வாழ்வின் எல்லாக் கூறுகளும் எப்படி ஆட்டோடு இயைந்திருக்கிறன என்பதை நாவல் அற்புதமாக விவரிக்கிறது. குழந்தைக்குப் பால் இல்லாதபோது ஆட்டின் பால் கொடுக்கப்படுகிறது. குழந்தை வயிறு சரியில்லையென்றாலும் ஆட்டுப்பால். ஒருவருக்கு கண்பிரச்சனை இருந்தால் ஆட்டுப்பால் பீய்ச்சி அடிக்கப்படும். குளிர்போக்குவதற்காக ஆட்டின் ரோமம். வீட்டின் அடுப்பை மெழுகுவதற்கு ஆட்டுச்சாணம். உண்பதற்கு ஆட்டின் ஊண். மேலும் எப்படி பல்வேறு நாயக்கர்கள் ஆட்டுப் பாங்குகளுக்கு பொறுப்பில் உள்ளார்கள், எப்படி எல்லா பாங்குகளும் சேர்ந்து ஒரு கீதாரியின் பொறுப்பில் வருகிறது என்று நூல் அளிக்கும் விவரிப்பு ஆட்டின் பாலையும் புழுக்கையையும் சேர்ந்தே நுகரவைக்கிறது. கீதாரி எப்போதும் ஒரு நாயக்கரே. அவரின் கீழ் உள்ள பாங்குபொறுப்பாளர்கள் கவுண்டரும் நாயக்கருமாக உள்ளனர். அவர்களின் கீழுள்ள ஆடுமேய்ப்பாளர்கள் சாதியடுக்கில் இன்னும் கீழே உள்ளனர்.
பழைய கீதாரியான வெங்கடராமானுஜ நாயக்கரின் அறிமுகத்தின்போதே அது ஒரு ஆணாதிக்கத்தின் உலகாகச் சொல்லப்படுகிறது. நாயக்கரின் மீசை சிலாகிக்கப்படுகிறது. அவர் சிறுவயதாக இருக்கும்போது எப்படி தனியாகப் போகும் பெண்களிடம் வம்பிழுப்பார் என்றுச் சொல்லப்படுகிறது. கதையின் கருவான அவருடைய பேரன் எல்லப்பனின் செய்த பெண்மீறலும் வன்புணர்வும் தலைமுறை தலைமுறையாக பொருளுடைமை நிலவுடைமை சமூகத்தில் எப்படி தழைத்தோங்கி இருக்கின்றன என்பதாகக் கொள்ளலாம். செவனியும் எல்லப்பனும் சேர்ந்து கிடைக்குப் போவது அவளின் பெற்றோருக்கு தெரிந்தேதான் இருக்கிறது. லகுவணக் கவுண்டர் அவர்கள்கூடவே செல்வது எல்லப்பனைக் கண்காணிக்கவே இருக்கலாம். எல்லப்பனுக்கும் இது தெரிந்தேதான் இருக்கவேண்டும். அதனாலேயே அவரை மயக்கிவிட்டு செவனியுடன் சென்றிருக்கவேண்டும்.
பொருளுடை நாயக்கர்களுக்கு ஊர்முழுதும் பின்னல் இருப்பதைக் காணலாம். திம்மய்ய நாயக்கர் வன்புணர்வு நடந்தது என்று அறிந்தவுடன் செய்தி எல்லப்பனின் தாத்தாவான வெங்கடராமானுஜ நாயக்கருக்கு தற்போதைய கீதாரியான ராமசுப்பா நாயக்கர் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பஞ்சாயத்திலும் திம்மய்ய நாயக்கர் குறிகேட்கப்படும் என்று தெரிந்தே ஊர் என்ன முடிவெடுக்கிறதோ அதுவே அவரின் முடிவு என்று கூறுகிறார். குறி சொல்பவர்களை மறைமுகமாக கட்டாயப்படுத்தி எல்லப்பனைக் காப்பாற்றுவதற்காக ஏற்கனவே ஊர் ஏளனமாகப் பார்க்கும் பொன்னுசாமி நாயக்கரின் பெயரைச் சொல்லச்சொல்லியிருக்கவேண்டும். பண்டைய கிரேக்க நிலத்தில் ஏதன்ஸ் ஸ்பார்டா காரிந்த் உள்ளிட்ட எல்லா நகரநாடுகளும் எப்படி ஆரக்கில் என்ற குறிசொல்பவருக்கு கட்டுப்பட்டிருந்தன என்பதை இணைத்துப் பார்க்கலாம். போர் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் கூட குறிபார்த்தே எடுக்கப்பட்டன. குறிசொல்பவரை மறைமுகமாகக் கட்டுப்படுத்துகின்றவர் ஒரு பெரும்சக்தியாக திகழ்ந்திருக்கவேண்டும். இதேபோல் பொன்னியின் செல்வன் நாவலிலும் கும்பகோணம் சோதிடர் எப்படி சோழவரசுக்கு ஓர் உளவாளியாகச் செயல்படுகிறார், எப்படி அரசாட்சிப் பற்றி மக்களின் பார்வையை கட்டுப்படுத்துகிறார் என்பதைக் காணலாம். இவற்றைப்போன்றே சிறிய அளவில் சிறிய ஊர்களில் நிலவுடைமையாளர்களும் பொருளுடைமையாளர்களும் குறிசொல்பவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று நாவல் உணர்த்துகிறது.
ஒரு பொருளுடைமையாள ஆண், சகோதரன் இல்லாக் குடும்பத்தில் பெண்பார்க்கும்போது, பொருள் பிரியக்கூடாது என்பதற்காக அப்பெண்ணின் எல்லாச் சகோதரிகளையும் சேர்ந்தே மணம்செய்துகொள்கிறான் என்பது நாவலில் ஒரு வரைத்தீற்றல்போல் சொல்லப்படுகின்றது. அடுத்து ஒரு மேய்ச்சல் பண்பாடும் ஒரு உழுப் பண்பாடும் எப்படி அடுக்கடுக்காக இருக்கிறது என்ற சித்திரம் வருகிறது. நிலவுடைமையாள ராக்காமாள் சொன்னச் சொல்லுக்கு கிடை மறிக்கப்படுவதும் அந்தப் பொழுதே ஊர் கூட்டப்படுவதும் நிலவுடைமையின் கீழ் பொருளுடைமை நிலவுவதைக் கோடிட்டுக் காட்டுகிறது. செவனியின் சாதியினர் பொருளுடைமைக்கும் நிலவுடைமைக்கும் அப்பால் தள்ளப்பட்டுள்ள மக்கள். அவள் என்ன பாடுபட்டால்கூட ஊரைக் கூட்டமுடியாது. எந்தக் கொடுமை அவர்கள் மீது திணிக்கப்படும்போதும் அவர்கள் பள்ளக்குடியிலேயே பேசாதிருக்கவேண்டும். காத்தோ கருப்போ அடித்துவிட்டது என்றுசொல்லித்தான் மந்திரிக்கவேண்டும். ஆனால் அந்த மந்திருப்பேதான் அவர்கள் கோபத்தின் வெயீடு. கோடங்கிகாரனின் உடுக்குத்தான் அவர்கள் ஆற்றாது அழுத கண்ணீர். உடுக்கு அடிக்க அடிக்க செவனி “தன்” கதையைப் பாட்டாகச் சொல்லத் தொடங்குகிறாள். அது “தன்” கதை மட்டுமேவா. தன் கதையும் ”கூடத்தான்.” ஒவ்வொரு ஒடுக்கப்பட்டவரின் கதை. இந்த சாதியாதிக்க ஆணாதிக்கச் சமூகத்தில் வாய்பேசமுடியாமல் வாழும் ஒவ்வொரு பெண்ணின் கதை. ஒரு பெண் சாமியாடி உரக்கச் சொன்னால்தான் இவ்வுலகம் சிறிதளவேனும் காதுகொடுக்கிறது. #metoo