https://www.youtube.com/watch?v=ubk_MzyPVrY
https://www.youtube.com/watch?v=4zkZbyN4Jgo
இம்மாதம் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல். கிறங்கடிக்கும் இசை. துறுத்தாத வரிகள். வயலின் இசை அலையலையாக வந்து மோதுகிறது. வயலின் அலைகளுக்குமேல் ஷான் ரோல்டனின் குரல் சர்ஃப்பிங் (அலைக்கூத்து) செய்வதுபோல் சமநிலை எப்போது விழுந்துவிடுமோ என்பதுபோல் செல்கிறது. தேன்சுடர் என்ற சொல் காதலின் இனிமையையும் ஆனால் அதுவே கசந்துபோனால் நிகழும் தவிப்பையும் அழகாகக் கூறுகிறது. காதல்முறிவின் விளிம்பில் உள்ள பாடல். குடிக்கக்குடிக்க இனிமை, பருகப்பருகக் கசப்பு. ஆடு நெல்லிக்கனியைத் தின்பதுபோன்ற உணர்வு. இனிமை என்று வாயில்போட்டுவிட்டு புளிப்பதால் வைத்திருக்கவும் முடியாது, சிறிது எச்சில் சேர்ந்து இனிப்பதால் துப்பவும் முடியாது.
இரண்டு வயலின் கோர்வைகள் (வயலினும் செல்லோவும்) இப்பாட்டு முழுதும் விரவுகின்றன. ஒன்று, மெல்லிசையானது. ராகம் இழைந்தோடுவது போன்று இரைஞ்சல் இல்லாமல் வந்துசெல்கிறது. மற்றொன்று பேரிசையாக அலையலையாக வந்துபோகும் ரம்பம் அருப்பது போன்றது. வயலின் இழைப்பதே ரம்பம் போன்று உருவகப்படுத்தி மனதிற்குள் எங்கெங்கோ கிழிக்கிறது. என் உயிரை உண்ணும் தேன்சுடரே என்று பாடும்போது வேகம் ஆரம்பித்து, என் உறக்கம் கொல்லும் தேன்சுடரே எனும்போது உச்ச வேகத்தில் விரைகிறது.
அதிசயமாக பிரதீப் குமாரின் பாடலைவிட ஷான் ரொல்டன் - சக்திஸ்ரீ பாடலே பிடித்திருக்கிறது.