க. நா. சுப்ரமணியத்தின் Tiruvalluvar and His Tirukkural என்ற நூல் 1987ல் வெளியானது. திருக்குறள் பற்றிய விரிவான ஆராய்ச்சி தொடர்கட்டுரைகளைக் கொண்டது. அந்நூலிருந்து நான் பெற்றுக்கொண்டதை சுருக்கமாக இங்கே தொகைக்குறிப்புகளாகக் கொடுக்கிறேன்.
குறளைப் பயில்வதற்கு கநாசு குறிப்பிடும் இரண்டு காரணங்கள்: ஒன்று, அப்பழுக்கற்ற திறனாய்வு ஒன்றும் இல்லாமலேயே தமிழர்கள் திருக்குறளுக்கு விடும் வெறும் வாய்ப்புகழ்ச்சி; இரண்டு, திருக்குறள் அறமுற்போக்கு கற்பிக்கும் நூலாகவே இருந்துகொண்டு பேரிலக்கியமாகவும் திகழ்வது. முதலில் திருக்குறளின் இலக்கியத்தகுதியை உலகிற்கு எடுத்துச்செல்லவேண்டுமானால் அதை நம்மிடையே சொல்லவேண்டும். தமிழ்மக்களுக்கே குறளின் தன்மை என்னவென்று தெரியாதபோது எப்படி ஜப்பானிய சீன மொழி இலக்கியம் போன்று உலகம் முழுவதும் கொண்டுசேர்ப்பது? கல்விபுலம் சார்ந்து சேர்ப்பது ஒருபுறம், ஆனால் படைப்பாற்றல் மிக்க நுண்ணுணர்வோடும் புரிதலோடும் முன்வைத்தால், குறள் உலக கவிதை ரசிகர்களிடையே ஓர் அங்கமாகும். இரண்டாவது புள்ளி குறிப்பிடும் தகுதி உலக இலக்கியத்திலேயே மிக மிக குறைவான ஆசிரியர்களுக்கே அமையும். லியோ டால்ஸ்டாய் ஒரு நவீனகாலத்து எடுத்துக்காட்டு, திருவள்ளுவரோ மரபுகாலத்து.
பண்பாட்டுப் பின்புலத்தை விளக்க பேராசிரியர் அப்பாசுவாமி சக்ரவர்த்தியின் கட்டுரைகளைக் கநாசு முன்வைக்கிறார். இந்திய நிலத்தில் ஆரியர்கள் எனச் சொல்லப்படுபவர்கள் வருவதற்கு முன்பு ரிஷப மரபு இருந்தது. அதன் முக்கியக் கோட்பாடு அகிம்சை. அதனாலேயே ஆரியர்களின் வேதங்களில் பெரும்பாலும் யாகமும் உயிர்ப்பலியும் பேசப்பட்டாலும் மிகச்சில இடங்களில் அகிம்சைபற்றி சொல்லப்படுகிறது. அதுவே உபநிடதக் காலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ரிஷப மரபே பின்பு சமண (ஜைன) மதமாக உருவானது. ரிஷப மரபு வேளாண்மை சமூகத்தை முன்னிறுத்துகிறது. உணவைப் பரவலாக்குவதற்கு வணிகம். அதைப் பாதுகாப்பதற்கு போர்த்தொழில். இம்மூன்றுமே இல்லறத்தாரின் கடமைகள். இவர்கள் இக்கடமைகளை நிறைவேற்றி துறவறத்தாரை ஆதரிக்கவேண்டும். ஆரியர்களின் வருணாசிரம தருமம் நால்பிரிவுகளைக் கட்டமைக்கிறதென்றால், ரிஷப மரபு இருபிரிவுகளைக் கட்டமைக்கிறது. வருணாசிரமத்தில் உழவுதொழில் கடைசிப்பிரிவாக சூத்திரர்களுக்கு வழங்கப்படுகிறது. ரிஷபமரபில் உழவே முதன்மை. குறளிலும் இதுவே பிரதிபலிக்கிறது.
குந்தகுந்தாச்சாரியார் பிராகிருத மொழியில் பஞ்சஸ்திகாயம், பிரவசனசாரம், சமயசாரம் முதலான நூல்களை இயற்றியுள்ளவர். அவர் இயற்றிய ஒரே தமிழ்நூல திருக்குறள். பிராகிருத நூல்களில் நான்கு மங்கலங்களைப் பேசுகிறார்: அருகர், சித்தர், சாது, முழுமையறம் (கேவல தம்மோ). அருகர்கள் முழுமையாளர்கள், அவர்களே அகிம்சையறத்தை மற்ற மனிதர்களுக்கு உரைப்பவர்கள். அறவுரையாளர்கள். தீர்த்தங்கரர்கள். இப்போதுள்ள இருபத்துநான்கு அருகர்களில், முதலில் வந்தவர் ரிஷபர், கடைசியில் வந்தவர் மகாவீரர் வர்த்தமானர் (கௌதம புத்தருடைய சமகாலத்தவர்). சித்தர்கள் தீர்த்தங்கரர்களின் கடைசி நிலையான உடல்பிரிந்த தூய “தன்”னாலான பரமாத்ம ஸ்வரூபம். சாதுக்கள் யோகங்களால் தன்-தெளிந்தவர்கள். பிராகிருதத்தில் சொன்னதை அப்படியே தமிழில் திருக்குறளாக குந்தகுந்தாச்சாரியார் சொல்கிறார் என்று பேராசிரியர் சக்ரவர்த்தி கூறுகிறார். ஆனால் கநாசுவோ குறள், மீயியற்பியற் கேள்விகளையோ தத்துவார்த்த மெய்மை நோக்கிய அனுமானங்களையோ விவாதிக்காமல் உலகளாவிய மனிதம் என்ற பொதுவான நடைமுறை உண்மையைத் துழாவுகிறது என்கிறார்.
இந்த நான்கு மங்கலங்களே குறளின் ஆரம்பத்தில் பேசப்படுகின்றன. முதல் அதிகாரம் “கடவுள் வாழ்த்து” அருகர்களையும் சித்தர்களையும், மூன்றாம் அதிகாரம் “நீத்தார் பெருமை” சாதுக்களையும், நான்காம் அதிகாரம் “அறன் வலியுறுத்தல்” கேவலன் தம்மோவைப் பற்றியும் பேசுகின்றன.
கடவுள் வாழ்த்து என்ற பெயர் பின்னால் போடப்பட்டிருக்கலாம், அல்லாது வள்ளுவரே அவர் காலத்தில் இருந்த வழக்கம் காரணமாக போட்டிருக்கலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் கடவுள் மற்ற சமயங்களின் கடவுட்கள் அல்லர். ஆதிபகவன், மலர்மிசை ஏகினான் (ஏகினவன்), எண்குணத்தான், வாலறிவன் (முழுமைஞானி) என்பவையெல்லாம் சமணச் சொற்கள்.
ஆதிபகவன் என்பது ரிஷபதேவர் என்று சமண உரையாசிரியர் கவிராஜ பண்டிதர் கூறுகிறார். பிற்கால சமண நூல்களான மஹாபுராணமும் ஸ்ரீபுராணமும் இச்சொல்லைச் சமணமுறைகொண்டு விளக்குகின்றன. மேலும் காசியப கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர் ஒருவர் எழுதிய பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கயாதர நிகண்டு என்ற நூல் ஆதிபகவன் சொல்லை சமண மரபாகவே பட்டியலிடுகிறது.
வாலறிவன் என்பது கேவலின் என்ற பிராகிருதச் சொல்லின் தமிழ் வடிவம்; முழுமைஞானி, முழுமை அறிவாளன் எனக் கொள்ளலாம். சிலப்பதிகாரத்தில் கடவுள்கள் வைத்த தாமரை மலர்களின் மீது நடந்து வருபவன் என்று அருகனைக் குறிப்பிடுகிறது; இதுவே மலர்மிசை ஏகினான். தனக்குவமை இல்லாதான் என்ற சொல்லாட்சியின் பிராகிருத வடிவமான அணோவமம் குந்தகுந்தாச்சாரியாரின் சமயசாரம் நூலில் வருகிறது. அந்தணன் என்பதற்கு எல்லிஸ் அம்+தண்+அன் என்று அழகிய கருணையாளன் என்று கூறினாலும், மற்ற அகராதிகளிலெல்லாம் பிராமணன், அருகன் என்றே குறிப்பிடப்படுகிறது.
எண்குணத்தான் என்பதை அஷ்ட குண சம்யுக்தா என்ற சமஸ்கிருத சொல்லாட்சியைக்கொண்டு மற்ற சமயங்கள் பயன்படுத்தினாலும், சமணமே முதன்முதலில் கையாண்டது. முடிவிலா ஞானம், முடிவிலா அறிவு, முடிவிலா ஆற்றல், முடிவிலா மகிழ்ச்சி கொண்டவன், பெயரிலான், இனமிலான், முதுமையிலான், தடையிலான், என எட்டு குணங்கள் கொண்டவன் அருகன்.
அடிகள் என்ற சொல் சமணத்துறவிகளைக் குறிக்கும். சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தியடிகள் ஓர் எடுத்துக்காட்டு. சமணத்துறவிகளுக்கு ஓர் நிலையான குடியிருப்பு இருந்ததில்லை. அவர்கள் நிலம் முழுவதும் அலைந்து அவ்வபோது அரசரோ வணிகரோ கொடுக்கும் குகைகளில் வசிப்பார்கள். தங்கள் அறவுரைகளை இந்திய நிலம் முழுவதும் நடந்து நடந்தே பரப்பியவர்கள்; ஆகவே அடி (பாதம்) என்ற படிமம் அவர்களைக் குறிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சமணமும் பௌத்தமுமே தங்கள் வழிபாட்டுக் குறியீடாக பாதத்தை வைத்தன. முதல் அதிகாரத்தின் பத்தில் ஏழு குறள்கள் அடியைப் பயன்படுத்துகின்றன. நற்றாள் தொழாஅர் எனின், மாணடி சேர்ந்தார், வேண்டுதல் வேண்டாமை இலானடி, தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க், அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க், எண்குணத்தான் தாளை, இறைவன் அடிசேரா தார் என ஏழு இடங்களில் குறிக்கப்படுவது சமண சமய அருகனல்லாமல் வேறியாராயிருக்கமுடியும்.
இரண்டாம் அதிகாரம் வான்சிறப்பு. பேராசிரியர் சக்ரவர்த்தி இவ்வதிகாரம் நான்காம் இடத்திலிருந்து இரண்டுக்கு பிற்காலத்தில் மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார். ஆனாலும் வள்ளுவர் மழையை ஏன் நான்கு மங்கலங்களோடு சேர்த்துவைக்கிறார்? ஆதிபகவன் ரிஷபதேவரால் அகரமாய்த் தொடங்கிவைக்கப்பட்ட இந்தப் பண்பாடு வேளாண்மை சார்ந்தது. உணவில்லையேல் உலகில்லை. உழவில்லையேல் உணவில்லை. நீரில்லையேல் உழவில்லை. தென்னகத்தில் மழையில்லையேல் நீரில்லை. மழையே உணவிற்கு முதல். சமணத்தில் இல்லறத்தாரின் நான்கு அறங்களில் உணவறத்திற்கே முதலிடம். (மற்றவை, மருந்து, பாதுகாப்பு, பண்பாடு.) துறவிகளுக்கு ஆதரவும் இல்லறத்தாரே கொடுத்தனர். ஆகவே மழையமிழ்தம் இல்லையேல் இப்பண்பாடே இல்லை.
வேத சமயத்தின் மையக்கூறு பலிமூலம் தேவர்களை வரவழைத்து வரம் கேட்பது. தீயில் மிருகங்களையிடுவற்கே யாகம் வளர்க்கப்பட்டது. இது நாடோடி வேட்டை சமூகத்தின் பண்பாடு. இந்தியாவில் வேளாண் பண்பாட்டோடு கலந்தபின்பும் பலியாகம் நடந்துகொண்டிருந்தது. ரிஷப சமயம் உடலல்லா ஊணற்ற உணவே உணவு என்ற கோட்பாட்டினால் ஊண் பலியையும் ஊண் உண்பதையும் அருளற்றதாகவே (கருணையற்றதாகவே) பார்த்தது. ஆகவே சமணத்தின் மையநெறியான அகிம்சையில் புலால் பலியும் உண்ணுதலும் சமரசமின்றி கடுமையாக மறுக்கப்பட்டன. வேத சமயத்தின் யாகம் வேட்டலுடைய குரூரத்தை அடிக்கோடிடும் இக்குறளை மனுதர்மசாஸ்திரத்திலிருந்து வள்ளுவர் எப்படி வேறுபடுகிறார் என்பதன் முக்கியச் சான்றாக கநாசு முன்வைக்கிறார். அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று. ஆயிரம் யாகம் வளர்த்து பல்லாயிரம் உயிர்களைக் கொன்று பெறும் தர்மம்-என்று-கூறப்படுவதை விட ஓர் உயிரையும் கொல்லாமல் இருப்பது நன்று என்று கூறுகிறார்.
மறுபக்கம் பௌத்தம் உயிரைக் கொல்வதைத்தான் தடைசெய்கிறது, உண்ணுவதை அன்று. என்னிடம் காசு இருக்கிறது, எனவே கொன்ற-ஊணை வாங்கி உண்ணமுடியும். ஆனால் நான் உயிரைக் கொல்லமாட்டேன். வேறாரோ கொல்கிறார்கள். ஆகவே நான் தர்மத்தைவிட்டு வெளியேறவில்லை. இதுவே பௌத்தர்கள் சொல்வது. (ஜி. யு. போப்பும் இதைச் சொல்கிறார்.) வள்ளுவர் இந்தத் தர்க்கத்தில் உள்ள பாசாங்கின் முகத்தில் அப்பட்டமாக அறைகிறார். தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். உலகத்தில் ஊண்தின்பவர்கள் இல்லையென்றால் ஊண்விற்பவர்களும் இருக்கமாட்டார்கள். ஒருவர் ஊண் தின்பதற்காகவே மற்றொருவர் உயிரைக் கொல்லவேண்டியிருக்கிறது. இது பௌத்தத்தின் மிகப்பெரிய மாய்மாலம்.
அழகிய புள்ளிகளையுடைய கனசதுர வடிவம்கொண்ட தாயங்கள் ஹரப்பாவிலிருந்து கீழடி வரை அகழாய்வில் கிடைத்துள்ளன. நகர பண்பாட்டில் கேளிக்கை ஒரு தவிர்க்கமுடியாத அம்சம் என்றுதான் வரலாறு சொல்கிறது. சூது மகாபாரதக் கதையின் மைய நிகழ்வு. போலவே கள்ளும் வரைவின் மகளிரும் (திருமணத்திற்கு வெளியேயான பெண்கள்) சங்க இலக்கியப் பாடல்களில் விரவியுள்ளார்கள். இம்மூன்றையுமே வள்ளுவர் தவிர்க்கப்பட வேண்டியவை என்று வலியுறுத்துகிறார். இருமனப் பெண்டிரும் கள்ளுல் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. இருமனம்கொண்ட மகளிருடனும் கள்ளுடனும் சூதுடனும் தொடர்பிருந்தால் செல்வம் நீங்கிவிடும். இதுவே சிலப்பதிகாரக் கதையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மெய்யான மகிழ்வும் அறிவும் நிறைநெஞ்சமும் செல்வமும் வேண்டுபவர் மகளிரிடம் செல்லமாட்டார் என்று உரைக்கிறார். போலவே கள்ளுணுபவர்களை பகைவரும் அஞ்சமாட்டார் சான்றோரும் மதிக்கமாட்டார் ஊரும் சிரிக்கும். கள்கொடுக்கும் அறிவுமயக்கம் நஞ்சுகுடிப்போன்றது; மயங்கினவரைத் தெளிவித்தல் நீரில் மூழ்கிய ஒருவனை தீகொண்டு தேடுவது போன்றது; இவ்வாறு குடியினால் தனக்கு வரும் சமூகக்கேடுகளை அடுக்கிக்கொண்டு செல்கிறார் வள்ளுவர். உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் அடையாவாம் ஆயங்கொளின் என்று சூதினால் மானமும் செல்வமும் உடலும் புகழும் கல்வியும் மறைந்துவிடும் என்று தொகுக்கிறார்.
தெய்வம் காணப்படவில்லை. ஒழுக்கம் சொல்லப்படவில்லை. நோன்பும் கூறவில்லை. தர்மத்தையும் இழுக்கவில்லை. இம்மூன்று செயல்களால் தனிமனிதன் சமூகத்தின் முன் வெட்கப்படவேண்டியிருக்கும், தன் செல்வமும் மானமும் பறந்துவிடும், சான்றோர்முன் தலைகுனிந்து நிற்கவேண்டியிருக்கும், ஊரார் தனக்குப்பின்னால் நகைப்பார்கள். மெய்ஞான தத்துவங்கள் அல்லாது சமூக தத்துவத்தையே வள்ளுவர் முன்னிலைப்படுத்துகிறார்.
சமணத்தின் தலையாய கொள்கை அகிம்சை. இம்சை என சமணர்கள் சொல்வது மேம்போக்காக மற்றவர்க்குச் செய்யும் இன்னல் என்று கருதினாலும் அது அறுதியாக தனக்குத்தானே நிகழ்த்தும் வீடுபேறு அடையவிடாமல் தடுக்கும் துன்பம். ஒருவர் ஆன்மீக முழுமை நோக்கிச்செல்வதற்கு மற்றவர்மீது இன்னல்செலுத்தாமல் தன் உள்ளைத் தூய்மையாக பேணவேண்டும். திருக்குறளிலோ அகிம்சை என நேரடிப்பெயருள்ள அதிகாரம் இல்லை. கநாசு திருக்குறள் முன்வைக்கும் அகிம்சையாக இரண்டு அதிகாரங்களைச் சொல்கிறார்: இன்னா செய்யாமை, கொல்லாமை.
இன்னா செய்யாமை மாசற்றார் கோள் என்றே முதலிரு குறள்களைத் தொடங்குகிறது. தனக்கு செல்வம் கிடைத்தாலும் இன்னாசெய்யாமலிருத்தலும் தனக்கு மற்றவர்செய்த இன்னலை எதிர்த்து மறுபடி இன்னாசெய்யாமலிருத்தலுமே உள்தூய்மையுடையோரின் மாசற்றவர்களின் கொள்கை எனச் சொல்கிறது. கொல்லாமை அதிகாரம் உச்சத்திலிருந்தே தொடங்குகிறது. அறச்செயல் என்றால் என்ன? அறவினை யாதெனின் கொல்லாமை. மனிதரைக் கொல்வதுதான் கொலையா? நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை. எந்த உயிரையும் கொல்லாமையே நல்வழி. சமணத்தின் முழுமுதல் கோட்பாட்டை இவ்வளவு கையடக்கமாக இவ்வளவு நேரடியாக வேறெப்படியும் உரைக்கமுடியாது.
உயிரை யாரெல்லாம் கொல்வர்? ஊணுண்பவரோடும் போர்புரிபவரோடும் வரிசையில் வருபவர் சமணக்கொள்கையின் எதிர்தரப்பில் நிற்கும் வேதவேள்வியில் உயிர்ப்பலி இடுபவர். இக்கொலைசெயல்புரிபவர்கள் எல்லோரையும் வள்ளுவர் இழிசெயல்புரிபவராகவே கூறுகிறார். கொலைவினையராகிய மாக்கள் புலைவினையர் . அப்படியா சரி, என்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கொலைபுரியலாமா? தன்னுயிர் நீப்பினும் செய்யற்க.
[தொடரும்]