யுவன் சந்திரசேகரின் படைப்புலகம்

விஜய் ஏப்ரல் 12, 2024 #யுவன் சந்திரசேகர் #கட்டுரை


இந்தியாவில் ஒரு சந்தையிலோ பேருந்துநிலையத்திலோ கடற்கரையிலோ கடைத்தெருவிலோ, நடுவில் நின்றுகொண்டு ஒரு ஒலிப்பதிவுக்கருவி மூலம் பதிவது போன்றது யுவனின் கதைகள். ஒலிப்பதிவில் பல குரல்கள், பல சத்தங்கள், நாயின் குரைப்புகள், பஸ்ஸின் ஹாரன், சைக்கிளின் பெல், குழந்தையின் அழுகை, என ஒரு கலவையாக இருக்கும். அதற்கு அடியில் இருப்பதுதான் இந்திய மனம். ஒலிக்கொத்து. போலவே யுவனின் கதைகள் கதைக்கொத்து. பொறியியலில் independent component analysis என்று சொல்வார்கள், இந்த ஒலிகளைப் பிரித்துக் காண்பதற்கு. ஆனால் முழுமையாகவும் பிரிக்கமுடியாது. ஏனென்றால் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, அறிவியல் பூர்வமாக அதிர்வெண் நிறமாலை (frequency spectrum) ஒட்டிக்கொண்டு இருக்கும், தத்துவபூர்வமாக ஒன்றொக்கொன்று காரண-காரியம் இணைந்துகொண்டு இருக்கும். மேலோட்டமாக எல்லா ஒலிகளும் தனித்தனியாக இயங்குவதாக தெரியலாம். ஆனால் குழந்தை நாயின் குரைப்பைக் கேட்டு அழுகிறது. நாயை யாரேனும் உதைத்திருப்பார்கள். நிறுத்தசிக்னலில் தப்பாக யாராவது வண்டியோட்டி நடைபாதை பயணியை இடித்திருப்பான். நடந்தவன் நாயை உதைத்திருப்பான். பொதுவாக நவீனத்துவப் பார்வை இதில் ஒன்றோ இரண்டோ சரடை எடுத்துக்கொண்டு அதைச் சீரான முறையில் கதையாகச் சொல்ல முற்படும். அது எளிமையாக புரிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பார்வை. அதற்கான பயன் நிச்சயம் உண்டு. ஆனால் அது வட்டம் என்று சொல்வதை அது வட்டம் தானா, அதற்கு இன்னுமொரு பரிமாணம் உள்ளதா, அது ஒரு கோளமா அல்லது உருளையாக இருக்குமோ என பின்னிப்பின்னி விரிவாக்குவது இன்னும் பரந்தபார்வையை அளிக்கும்.

சுஜாதா தன் கணையாழி கடைசிப்பக்க கட்டுரை ஒன்றில் ஒரு கருதுகோளை முன்வைத்திருப்பார், சங்க இலக்கியம் எல்லாம் ஒரே ஆசிரியர் எழுதியவையோ என்று. ஏனென்றால் எல்லாம் ஒரே வார்ப்புரு (template) கொண்டிருக்கிறதே. தலைவன் தலைவி இருப்பார்கள், அவர்கள் இப்படித்தான் சந்தித்துக்கொள்வார்கள், இப்படித்தான் பேசிக்கொள்வார்கள், இப்படியே போகிறதே. ஆனால் கூர்ந்தாராய்ந்தால் செவ்வியலின் இயல்பு ஒரு பண்பாடு இயல்பாக கண்டடைந்ததை ஒரு வார்ப்புருவாக உருவாக்கி அதற்குள் உள்ள நுண்மைகளை கண்டறிந்துகொண்டே இருக்கும். இங்கு யுவன் எழுதுவதை நாம் தலைகீழ் வார்ப்புரு எனலாம். ஒரு நாவல் என்று சொல்வது ஒருவர் எழுதிய நாவல் தானா, அல்லது பலர் எழுதிய பல கதைகள் ஒன்றாக தொகுக்கப்பட்டு ஆசிரியர்பெயர் யுவன் என்று சூட்டப்பட்டிருக்கிறதோ. இதை மாற்றுச்செவ்வியல் என்று வரையறுக்கலாம். தான் சொல்லவந்த கதையை ஒரு பண்பாடே சொல்லும் பல கதைகளாக நுண்மைக்குள் பல நுண்மைகளாகச் சொல்வது. ஒரு கணித ஃப்ராக்டல் போன்று. இந்த வடிவம் இதேபோன்று பல வடிவங்களாய் ஆனது. அவ்வாறே ஒவ்வொரு உள்வடிவத்துக்கும் முடிவின்றி செல்லலாம். கதைக்குள் வருவதும் கதைக்குள் ஆன கதைதான்.

பள்ளியில் படிக்கும் போது ரஃப் நோட்டு என்றொன்று உண்டு. ஒவ்வொரு பாடத்துக்கும், ஆங்கிலம் கணிதம் அறிவியல் போன்று, ஒவ்வொரு குறிப்பிட்ட நோட் வைத்திருப்போம். அறிவியல் நோட்டில் அறிவியல் மட்டுமே எழுதுவோம், கணிதத்தில் கணிதம் மட்டும். ஒருவேளை அந்தக் குறிப்பிட்ட நோட் அன்றைக்கு கொண்டுவரவில்லையென்றால் ரஃப் நோட்டில் எழுதிக்கொள்வோம். ஒருவேளை ஒரு பாட ஆசிரியர் வராமல் அந்த நேரத்தில் வேறொரு ஆசிரியர் வந்து பாடம் எடுத்தால் அதையும் நாம் ரஃப் நோட்டில் எழுதிக்கொள்வோம். வகுப்புக்கு இடையே ரஃப் நோட்டில் படங்கள் வரைந்துகொள்வோம். பாட நோட் தீர்ந்துவிட்டால் ரஃப் நோடில் ஒரு பக்கத்தைக் கிழித்து அதில் எழுதிக்கொள்வோம். ஏதாவது முக்கியமான பொதுசெய்தி ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் அதில் குறித்துக்கொள்வோம். அதில் பக்கப்பிரிவுகள் கிடையாது. கணிதச் சமன்பாடு வந்த மறுபக்கத்தில் ஒரு மீனின் படம் வரைந்து வைத்திருப்போம். உடனே ஒரு ஷேக்ஸ்பியர் கவிதையும் வரலாம். ரஃப் நோட்டை ஒரு நோட்டாகவும் பார்க்கலாம். பல பாட நோட்களின் தொகுதி என்றும் பார்க்கலாம். நோட்டினுள்ள உள்நோட்களிலுள்ள உள்நோட்களாகவும் பார்க்கலாம். ஒரு வகுப்பு ஆண்டு முடிந்தவுடன் அந்நோட்டைப் புரட்டிப்பார்த்தால் நம்முடைய ஒரு ஆண்டு வரலாறு இருக்கும். ஆனால் ஸ்கேல்கொண்டு மார்ஜின்போட்டு முறைப்படுத்தி செப்பனிட்டு அடுக்கிய வரலாறல்ல அது.


< பின்
⌂ முகப்பு