[draft]
கருணையும், புலான்மறுத்தலும், கள்ளாமையும் கொல்லாமையும் இவைபோன்ற இன்னபோன்ற ஒழுக்கம் என்று சொல்லப்படுகின்றவற்றை குறள் எவ்வாறு சமூக தத்துவமாக இல்லறத்தாருக்கு முன்வைக்கிறது என்று பார்த்தோம். இவை துறவுக்கும் பொருந்தும். துறவுக்கு இன்றியமையாத ஒன்று அவாவின்மை. வீடுபேறு என்பதை முழுமுதற் அவாவறுத்தல் என்றே வரையறுத்தது பௌத்தமும் சமணமும். குறள் பௌத்தம் அல்ல என்று நாம் ஏற்கனவே கண்டுவிட்டதால் அவாவறுத்தலை இங்கு சமணப் பார்வையாய் கொள்ளலாம். அவாவே அடுத்த பிறப்பின் மூலம்; அவாவே சம்சாரத்தின் விதை என்பது சமணக் கோட்பாடு.
மெய்யுணர்தல் அதிகாரம் மூலம் குறள் துறவின் அறிவுத்தேடலின் சாராம்சத்தைப் பேசுகிறது. முதல் குறளிலேயே தவறான மெய்ப்பொருளை மெய்ப்பொருள் எனக் கொண்டால் மறுபடியும் துன்பப்பிறப்பில் தள்ளப்படுவோம் எனச் சொல்லப்படுகிறது.