தாயம்மாப் பாட்டியின் நாற்பத்தோரு கதைகள் (ஒளிவிலகல் தொகுப்பு) - யுவன் சந்திரசேகர்
கீக் (geek) எனச் சொல்லப்படும் குழந்தைகளுக்கு புதுவாக லெகோ (lego) விளையாட பிடிக்கும். ஒருவேளை லெகோ விளையாடும் குழந்தைகள் தன் வாழ்க்கையில் ஒரு கீக்காக வருவதற்கு சாத்தியக்கூறு அதிகம் இருக்கிறது எனலாம். லெகோ கொத்தில் வெவ்வேறு அளவிலான சின்னச் சின்ன அடுக்குத்துண்டுகள் இருக்கும். நாம் கோத்துக் கோத்து அடுக்கி எந்த பெரிய வடிவத்தில் வேண்டுமானாலும் கட்டலாம். சில சமயம் வடிவயின்மையேகூட இறுதி வடிவமாக அமையக்கூடும். தாயம்மாப் பாட்டி கிருஷ்ணனுக்கு நாற்பது கதைகள் சொல்கிறாள். ஒவ்வொன்றும் ஒரு லெகோ துண்டு போல. அடுக்கிவருவது பாட்டியின் வாழ்க்கை நினைவுகள் என்ற பெரிய துண்டு; வேறொருவரால் சொல்லப்பட்ட நினைவுக்குறிப்பு புனைவு.
முதல் முப்பது கதைகளில் மொட்டையடித்த விதவைப் பாட்டி தன் குழந்தை வயது திருமணம் முதல் கணவனின் இறப்புவரை நடந்த அபாரமான சம்பவங்கள் வருகின்றன. தாயம்மாப் பாட்டி என்று படித்தவுடன் என் மனத்தில் தோராயாமாக ஓர் உருவம் கற்பனையில் ஓடியது. நிறப்புடவை அணிந்த சுருக்கங்கள் விழுந்த வெண்மயிர்கொண்ட பாட்டி. விதவை என்று தெரியும், ஆனால் மொட்டைத்தலை எனக் கற்பனை செய்யவில்லை. படிக்கும்பொழுது அவ்விவரம் வரும்போது நாம் அவரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிர்ணயம்செய்யமுடிகிறது. இப்படி கதையை நிலைக்குத்தல் அவசியமா என்று கேட்டால் பொதுவாக இல்லை என்று கருதினாலும் இந்த முடியிழப்பு அவர் சொல்லும் கதைகளில் ஒன்றாக வருவதால் முக்கியமாகிறது.
ஒரு மனிதர் தன் சாகும்தருவாயில் தன் உடலால் இனி எதுவும் செய்யப்போவதற்கில்லை என்று உணரும்போது தன் நினைவுகளையே மீட்டி தன் வாழ்க்கையை மறுபடிவாழ்வது ஒன்றே சாத்தியமாகிறது. அவ்வாறு மீட்டுதலில் என்னென்ன பக்கங்கள் திருப்பப்படுகின்றன; புக் கிரிக்கெட் ஆடுவதுபோன்று ராண்டமாக பக்கங்கள் வருமோ, அன்றி இன்றையமையாத நினைவுகள் என சொச்சம் நினைவுகள்தாம் தன் மனம் சேகரித்தே வைத்திருக்குமோ. பாட்டி எவற்றை மீட்டுகிறாள்?
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப்பெண்ணிற்கு தன் திருமணமும் அதனால் ஏற்பட்ட சம்பவங்களும் தன் கணவனோடுகொண்ட மகிழ்ச்சிகள் போராட்டங்கள் கேலிகள் அழுகைகள் எனத் தெறிப்புகள் வருகின்றன. இளங்கணவன் பாடகர் எம்.கே.டி.யின் பாடலை ரசிக்கும்போது, மனைவி அவர் அழகையும் ரசிப்பதாகச் கொள்வது கணவனுக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. அதே கணவன் இறக்கும்போது பாட்டி அழவில்லை. ஆனால் பதினொன்றாம் நாள், தான் மொட்டையடிக்கப்படும்போது கதறி அழுகிறாள். அது தன் கணவனை நினைத்த அழுகையா, தான் கூந்தலை இழந்த அழுகையா, அல்லாமல் இரண்டும் சேர்ந்த ஒன்றா என்று நாம் வியக்கிறோம். மற்றொருநாள் சொல்லப்பட்ட கதையில், தனிமையில் தெருவின் இரவிருளை வெறித்து நோக்கும் பாட்டி இருளே பொங்கி தன் இறந்துபோன கணவனாய்வருவதாக உணர்கிறாள். ஏதோ ஒரு நிகர்வாழ்தருணத்தில் இந்தக் கருங்கடல் இருளலை ஒன்று தன் உடலுக்குள் புகுவதை உணர்கிறாள். ஒருகணம் இதை உணர்ந்து மறுகணம் இந்த வாழ்வுக்குத் திரும்பி, பயந்து, படுக்கையில் ஒட்டிக்கொள்கிறாள். அவள் சொன்ன கதைகளின் உச்சம் தன் மாதசுழற்சி நிற்கும் சமயத்தில் கண்ட கனவை விவரிக்கும் கதை. வாழ்க்கையில் ஒரேயொரு முறையே பெண் சந்திக்கும் இந்த வாழ்வுத்தருணத்தை, தன் நுண்ணுணர்வைக் காட்சியனுபவமாக நிறைத்து ஒரு மயிர்க்கூச்செறியும் கதையைக் கூறுகிறாள்.
அவ்வபோது தன் ஊரில் நடந்த வெவ்வேறு நிகழ்வுகளையும் மனிதர்களையும் பற்றி அடுக்கடுக்காக சொல்கிறாள், ஏதோ புலிநகக்கொன்றை போன்ற ஒரு நாவல் எழுதுவதற்கு குறிப்பெடுக்கின்றதுபோல் – தன் மகள் செட்டிப் பையனோடு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டது; இன்னொரு மகள் திருமணத்திற்கு ரஹீம் பாய் செயினைக் கழட்டித் தருவது; தன் பையன், கணவரால் சாதி காரணமாக நிராகரிக்கப்பட்ட அதனால் வேறொரு ஆணைத் திருமணம் செய்துகொண்ட அவன் முன்னால் காதலிக்கு, மனைவி பிரசவத்தில் இறந்தவுடன் குழந்தையைக் கொடுப்பது; ஊர்க்கார இல்லிலி இறந்துகிடக்கும்போது அவள் பையில் உள்ள ஊர்க்காரர்களின் நகைகளும் பொருட்களும் கண்டு அனைவரும் அவைத் தம்முடையது என அடித்துக்கொள்வது;
தன் கதையையும் ஊர்க்கதையையும் சொல்லும் பாட்டி மேலும் மரபுக்கதைகளையும் சொல்கிறாள். தான் பெண்ணாக இருப்பதால் அல்லது சிந்திக்கும் நபராக இருப்பதால் மரபைக் கேள்விக்கு உட்படுத்துவதையும் தவறுவதில்லை. சூதாடி தோற்பதோ ஆண்கள், ஆனால் ஒரு பெண்தான் நிர்வாணமாக நிற்கவைக்கப்படுகிறாள். அதுவும் அவள் மாதாந்திர நேரத்தின்போது என்கிறாள் பாட்டி. அபிமன்யு அளவுக்கு கடோத்கஜன் போற்றப்படுவதில்லை.
பாட்டி தன் வாழ்க்கையைவிட்டு குழந்தைக்கதையாய் சொன்ன பத்துக்கதைகள் வருகின்றன. குழந்தைக்கதைகளின் பிரதான அம்சம் அது மிகைபுனைவு தளத்துக்குச் செல்லும் என்பதே. பாட்டி சொல்லும் விலங்குகளின் கதைகளும் அவ்வாறே. ஒருவரிக்கதையிலிருந்து சில பத்திகள் வரை. இதில் காலத்தின் வெளியின் சார்புத்தன்மையைப் (ரிலேட்டிவிட்டியைப்) பாட்டியும், யுவனும், நம்மிடையே ஊடுருவச்செய்கிறார்கள். அண்ணாந்து வானைப் பார்க்கும் நம்மிடம் ஒரு வவ்வால் ஏன் தலைகீழாய் உலகத்தைப் பார்க்கிறாய் என்று கேட்கிறது. ஈக்கு வாழ்நாளே ஒருநாள்தான். நேற்று நாளை இல்லை. அவை இல்லையாகையால் இன்று என்ற ஒன்றும் கிடையாது. ஈயின் மெய்மைக்கு நம்முடைய ஒவ்வொரு நொடியும் அதனுடைய நாள்போல நீண்டது. நாம் வனையும் நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பதெல்லாம் நம் வாழ்நாள் ஆண்டுக்கணக்காய் விரிவதால் பொருள்கொள்கிறது. ஒவ்வொரு உயிரினத்துக்கும் உள்ள காலச் சார்பு அதனதன் தத்துவங்களை உருவாக்கிக்கொள்கிறது. நத்தை சென்றுசேர்வதற்குள் வற்றிய குளம் நீர்பெருக்காகிவிடுகிறது. ஆனால் மனிதர் சென்றால் அது இன்னமும் வற்றியேயிருக்கிறது. நம்முடைய ஒரு நடைக்கும் நத்தையின் ஒரு நடைக்கும் வெவ்வேறு காலப்பரிமாணங்கள். செயல் ஒன்றே, ஆனால் செயலின்முடிவில் காணும்உலகங்கள் வெவ்வேறு.
சிறுகதையின் தலைப்பு தாயம்மாப் பாட்டியின் நாற்பத்தோரு கதைகள் (ஒளிவிலகல் தொகுப்பு). யுவன் சந்திரசேகர் வேற்றுமை உருபான “இன்” மீது சிறு பொருள்மயக்கத்தைப் போட்டுப்பார்க்கிறார். பாட்டியின் கதைகளான இச்சிறுகதையில் பாட்டிசொன்ன நாற்பது கதைகளையும் அதன் வழியாகவே பாட்டியுடைய கதையையும் விவரிக்கிறார் எனலாம். சாலையில் நடக்கும்போது பக்கச்சுவரில் வரிசையாக ஒட்டப்பட்ட சினிமா போஸ்டர்களை ஒவ்வொன்றாக தொடர்ந்து கண்டுச்செல்வதுபோல், ஒவ்வொரு வாழ்க்கைச் சம்பவத்தையும் பழைய புகைப்படக்கருவியின் ஒற்றை ஃபில்ம்களாக கொடுத்திருக்கிறார். விரிவான படத்தை நாமே ஓட்டிக்கொள்ளவேண்டும்.