குறத்தி முடுக்கு - ஜி. நாகராஜன்

விஜய் மே 16, 2024 #ஜி. நாகராஜன் #கட்டுரை

குறத்தி முடுக்கு - குறுநாவல், ஜி. நாகராஜன்

குறத்தி முடுக்கு பெண் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் ஒரு தெரு. அங்கு வாடிக்கையாகச் செல்லும் ஒரு பத்திரிக்கையாளன் பார்வையில், அவனே கதைசொல்லியாக, அவனுக்கும் அத்தெருவில் வசிக்கும் தங்கம் என்பவளுக்கும் உள்ள உறவு பற்றி குறுநாவலின் ஒரு சரடு ஓடுகிறது. அதோடு சேர்ந்து, அத்தெருவில் வசிக்கும் மற்ற தொழிலாளர்களான செல்லம், மீனாட்சி, செண்பகம், மரகதம், தேவயானை ஆகியோர் பற்றி நாவலாசிரியரே மூன்றாம் நபர் பார்வையில் சொல்கிறவாறு மற்றொரு சரடு ஓடுகிறது.

நாவலின் முதற்பத்தியில் குறத்தி முடிக்கின் வரைவு ஒரு சம்பவத்தால் விவரிக்கப்படுகிறது. ஒருவன் அத்தெருவில் நுழைகிறான். தெருவின் நடுவில் நடந்து ஒருமுறை நோட்டம் விடுகிறான். மீண்டும்வந்து ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு இப்போது நடுவிலல்லாமல் ஒருபுறமாக நடந்து ஒரு வீட்டில் நுழைகிறான். அவள் ஐந்து ரூபாயில் ஆரம்பித்து இவன் ஒரு ரூபாய்க்கு ஆரம்பித்து முடிவாக இரண்டு ரூபாயில் பேரம் முடிகிறது. அவன் முத்தமிட்ட இடங்களை உடனுக்குடனேயே அவள் துடைத்துக்கொள்கிறாள். அவன் அதைக் கண்டுக்கவில்லை, அல்லது கண்டுகொண்டமாதிரி காட்டிக்கவில்லை. இச்சிறிய செயல் ஒரு மனிதருக்கு பெரும் அவமானம். அதாவது அவள் சொல்லவருவது, அன்பைப் பொழியும் முத்தங்களெல்லாம் வேண்டாம், வந்த வேலையைச் செய்துவிட்டு நீங்கு என்பதே. பின் அவள், அவன் வயிற்றருகே தன் கையைக் கொண்டுசெல்கிறாள். அவன் என்ன அவசரம் என்று கேட்க, அவள் நேரமாகுது என்று சொல்ல, ஐந்து நிமிடங்களில் செயலாற்றிவிட்டு அவன் நீங்குகிறான். பக்கத்து வீட்டில் இருக்கும் சற்று முதியவள் இதைப் பார்த்துவிட்டு அவள் இளையவள், கொடுத்துவைத்தவள் என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள்.

தற்போதுள்ள டிண்டர் போன்ற செயலிகளெல்லாம் இணையைத் தேடுவதற்கென்று உள்ளன. அலைபேசிலேயே பார்த்துத் தேர்வுசெய்து, பின்பு ஒரு தேதி முடிவுசெய்து, இருவரும் சந்தித்து, பெரும்பாலும் காதல் என்ற நோக்கத்திற்காக சிலநாட்களோ பலநாட்களோ நாட்குறி (dating) சென்று உரையாடி, காமம் வந்து இடையூடி, காதல்நோக்கம் முழுமையடைந்தால், பின்பு திருமணம் என்ற குறிக்கோளுக்குத் தாவி - இப்படி இந்த முழு நிகழ்வுதொடர் திரும்பத்திரும்ப நடந்துகொண்டிருக்கும். ஆனால், இச்செயலி மூலமாக மற்றொரு சரடும் சமூகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது – காதல் என்பதைத் தற்காலிகமாகவோ முழுமையாகவோ தவிர்த்து, காமத்திற்காக இன்னொருவரைத் தேடுவது. தன் ஈர்ப்புக்கு ஏற்ப சரியானதாகத் தெரிந்தால், சந்திப்பு ஏற்பாடு செய்து, மிகக் குறைவாக உரையாடி, உடைமை என்ற உணர்வோ கட்டுப்படுத்தல் என்ற உணர்வோ வராமல் பார்த்துக்கொண்டு, காமத்தை மட்டும் தீர்த்துக்கொள்வது. தன் வாழ்வுக்கென்று படிப்போ வேலையோ தொழிலோ கனவாகக்கொண்டு தீர்க்கமாக உழைப்பவருக்கு சமூகம் ஏற்படுத்தியிருக்கும் காதல் என்ற நெறிமுறைக்கு நேரமும் மனமும் மூளையும் பணமும் செலவழிப்பது வீண் என்று கருதும் பலர் இப்போது செயலிகளைக் காமத்தைத் தீர்க்க மட்டும் முன்னெடுக்கின்றனர். இதிலிருக்கும் அறைகூவல் தன் மனத்தைக் காதல் என்ற நிலைக்குச் செல்லாமல் எவ்வளவு கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியும் என்பதுவே. சிலருக்கு இம்மனக்கட்டமைப்பு இயல்பாக அமையலாம். சிலருக்கு அமையாதிருக்கலாம்.

இக்கதையில் காதல் என்ற ஒன்று வேண்டாமென்று காமத்தை மட்டுமே நாடி கதைசொல்லி பத்திரிக்கையாளன் செல்கிறான். அக்காலத்தில் இதற்கான ஒரே வாய்ப்பு பாலியல் தொழிலாளிகளை நாடுவதுதான். அவர்கள் காதல் என்ற ஒன்றோ திருமணம் என்ற ஒன்றோ காமத்தின்மீது படராமல் பார்த்துக்கொள்ள சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டவர்கள். ஆனால், மனிதமனம் காமம் என்பதை, தன் பண்பாட்டுச்சூழலாலும் தனக்கேயுரிய அகம்பாவத்தாலும் பொருத்தமுள்ள மற்றொருவரைக் கண்டுகொள்ளும்போது ஏற்படும் உடைமைத்தனத்தாலும், காதல் என்ற ஒன்றுடன் சேர்த்து விரித்துக்கொள்கிறது. அவன் குறத்தி முடுக்கிறகு நெடுங்காலமாக சென்றுகொண்டிருந்தாலும் ஏதோ ஒருநாளில் தங்கத்திடம் மட்டுமே இவ்வுணர்வு ஏற்படுகிறது. அது ஏன் என்று தெளிவாக கூறப்படவில்லை. அது அவள் கொடுக்கும் இயல்பான அன்பால் இருக்கலாம். அவள் உடல் தனக்கு மிகச் சரியாக உகந்ததாயிருக்கிறது என்று அவன் கருதுவதால் இருக்கலாம். என்னதான் தனக்குள்ளே தர்க்கம் பேசினாலும், இன்னொருவரோடு சேர்ந்து வாழும் உணர்வு அவனுள் இயல்பாக படிந்திருப்பதால் இருக்கலாம்.

அவனுக்கும் தங்கத்துமான உறவு கதைசொல்லியின் பார்வையிலேயே சொல்லப்படுவதால் தங்கம் ஏன் அவனிடம் இயல்பாக நடந்துகொண்டாள் ஏன் அவனிடம் அன்பைக் கொட்டினாள் அதுவும் முதன்முறை சந்திக்கையிலேயே, என்று நாவலில் இல்லை. இரண்டாம் முறை சந்திக்கும்போது வெகுநாள் பழகிய ஒருவரைப்போன்று அவள் மிகுந்த முகமலர்ச்சியுடன் வரவேற்கிறாள். அவள் குணமே அப்படியாக இருக்கலாம். அல்லது அந்தச் சமயத்தில் அதுவே உகந்தது என்று நினைத்திருக்கலாம். அல்லது அவள் உண்மையிலேயே அவனை முதலில் பார்த்தவுடன் ஏதோவொரு ஈர்ப்பால் அவன்மீது அன்பை அளித்திருக்கலாம்.

அவன் பலமுறை அவளைக் காணச்செல்கிறான். காமம் என்பது தாண்டி இது நாட்குறி இரவுக்குறி என்றே செல்கிறது. அவள் தனக்கு மட்டுமே வேண்டும் என்று நினைக்கிறான். மற்றவர்களிடம் அவள் நேரம் கழிக்கக்கூடாது என்று நினைக்கிறான். முதலில் அவளிடம் ஆசை இல்லை, ஆனால் வேறு பெண்கள் கொடுக்கமுடியாத இன்பத்தை அவள் கொடுக்கிறாள் என்று நினைக்கிறான். ஆனால், அவனுள் இருக்கும் கல்யாணம் காதல் பற்றிய வரைகள் மெல்லமெல்ல கரைகின்றன; முழுமையாக இல்லாவிடினும், கல்யாணம் என்பதுவரை போகாமல், காதல் என்று அறிவிக்காமல், தாமிருவர் மட்டும் சேர்ந்து வாழலாமா என்று தங்கத்திடம் முன்மொழிகிறான். அவள் இயல்பாக மறுக்கிறாள். தனக்கு ஏற்கனவே நடராஜன் என்பவருடன் திருமணமாகிவிட்டது என்கிறாள். தான் பாலியல் தொழிலாளியானாலும் தான் தாலி கட்டப்பட்டிருப்பவள் என்று சொல்கிறாள். பின்னர் அவள் சொல்லிக்கொள்ளாமல் ஓடியேவிடுகிறாள்.

கதையின் மற்றொரு சரடு நாவலாசிரியர் பார்வையில் சொல்லப்படுகின்றது. அதில் மற்ற பாலியல் தொழிலாளி கதாபாத்திரங்கள் மூலம் இவ்வுலகம் விவரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓர் அத்தான் இருக்கிறான். அத்தான் என்பவன் பெண் பாலியல் தொழிலாளிகளைப் வழிநடத்தும், எங்கிருந்தோ அவர்களைப் பணம் கொடுத்து வாங்கும், தொழிற்பணத்தைப் பராமரிக்கும், கோர்ட் கேஸ் வந்தால் போலீசிடம் பேசி பணம் கொடுக்கும், பொதுவாக இப்பெண்களிடம் உடலுறவு வைத்துக்கொள்ளாமலிருக்கும் ஒரு ஆள்.

பதினாறு வயது பாலியல் தொழிலாளியான மரகதம் ஒரு மாதமாக அங்கு இருப்பவள். அவள் தொழில்நிர்பந்த உடலுறவுகள்போக, ஒரு இளைஞனிடம் காதல் வயப்பட்டு இருக்கிறாள். அவன் அவளிடம் தன் இன்பத்திற்காகவும் இலாபத்திற்காக மட்டுமே உறவில் இருக்கிறான். இதுவே அவள் முதற்காதலாக இருக்கலாம். அவ்வளவு சிறிய வயது. மற்ற முதிய தொழிலாளிகள் பொறாமைப்படுகிறார்கள். அது காதல் என்றோ அப்பருவத்தின் இயல்பு என்றோ அதை நீட்டிக்கவும் அதில் மட்டுமே உலாவவும் முடியுமென்றோ அவளுக்குச் சொல்லப்படவில்லை.

மற்றொருத்தி செண்பகம், குழந்தை வேண்டி ஆசைப்பட்டு உண்டாக்கி, பின் அது தொழிலில் ஈடுபடும்போது கலிந்துவிடுகிறது. அந்நேரத்தில் அவள் “வேண்டாம்” என்று சொல்வதற்கு அவளிடம் அதிகாரம் இல்லை.

ஒருநாள் பின்னிரவு, இளையள்கள் உறங்கியபிறகு வாடிக்கையாளன் ஒருவன் வருகிறான். முதியவள் செல்லத்துடனே அறைக்குச் செல்கிறான். அவளுக்கு வயதானாலும் நேரம் நன்றாக கழிந்தது என்கிறான். செல்லத்துக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

குறத்தி முடுக்கிற்கு வள்ளிக்குறத்தி முடுக்கு என்றும் பெயருண்டு எனவும் அங்குதான் தேவயானையும் கூட இருக்கிறாள் என்று நாவலாசிரியர் கிண்டலாகச் சொல்கிறார். பதினைந்து வயது தேவயானை வெள்ளை பாவாடையும் வெள்ளை ரவிக்கையும் (ஜம்பர்) அணிந்திருக்கிறாள். மேலாக்கை எதுவும் அணிந்திருக்கவில்லை. கயிறுதொங்கி தற்கொலைக்கு முயல்கிறாள். கயிறு அறுந்து அவள் கீழே விழுந்து தலையிலும் பின்பக்கத்திலும் பலத்த அடி. [இந்த ஒரு சம்பவத்தை சற்று விரிவாக்கி ஜி. நாகராஜன் “டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர்” என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார்.]

இவ்வாறு வெவ்வேறு பெண் கதாபாத்திரங்கள். அவர்களுக்கே உண்டான மகிழ்ச்சிகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சிற்றின்பங்கள் என கதை தீட்டிச்செல்கிறது.

இக்கதை பாலியல் தொழிலைக் களமாகக் கொண்டிருக்கிறது என்ற “அதிர்ச்சி” இதை எழுதியகாலத்தில், 1960களில், இருந்தது என்று அறியமுடிகிறது. பிறழ்வான வாழ்க்கைமுறையைப் பற்றி பேசியிருக்கிறது என்றும் அக்காலத்தில் கருதியிருக்கலாம். ஆனால் இந்தப் பிறழ்வுகிறழ்வு என்பதற்கான வரைகள் அழிந்துவருகின்றன அல்லது மாறிவருகின்றன. இதில் சொல்லப்பட்டிருக்கும் வயதுவிவரனைகளே தற்காலத்தில் வாசிக்கும்போது ஆச்சரியமளிக்கின்றன. அப்போது நாற்பது வயது கடந்தாலே முதிய முத்திரை விழுந்துவிடுகிறது. இக்காலத்தில் நாற்பதெல்லாம் இளமைதான். பாலியல்தொழில் என்பதை தகவல் தொழில்நுட்பத்துறை என்று போட்டுக்கொண்டு இக்கதையில் என்ன மிஞ்சுகிறது என்று பார்க்கலாம். எல்லா தொழில்களைப் போன்றே பாலியல்தொழிலும் உள்ள பொறாமைகள், ஏமாற்றல்கள், குட்டியின்பங்கள், மகிழ்வுக்கணங்கள், சுரண்டல்கள் என பலவற்றை இந்நாவல் சொல்லிச்செல்கிறது. அதற்கும் மேல், காமம்-காதல்-திருமணம் என்ற ஒருகோட்டுவழியைக் கேள்விகேட்கிறது. அம்மூன்றில் ஒன்றோ பலதோ தேவைதானா என்று கேட்கிறது. காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என அவ்வை சொன்னது சமூகம் கட்டமைத்த ஒன்றா அல்லது மிருகவேட்கையிலும் கூட இது இயல்பாக அமைகிறதா என்று கேட்கிறது.


< பின்
⌂ முகப்பு