இணையர் சேர்ந்து வாழ்வதைத் தற்போது திருமணத்துடன் இணைத்துப் பார்ப்பதில்லை. இருவர் காதலித்து கருத்தொருமித்துக்கொண்டால் சேர்ந்து வாழ்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பும் கூட தமிழ்ச்சூழலில் இது பெரும்பாலும் சாத்தியப்படாததாகவே இருந்திருக்கிறது. ஆனால் அப்போது காதல் என்பது சாத்தியம், பின்பு அது கல்யாணத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்ற விதி இருந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, காதல் என்பதே அறவே இல்லை. முக்கியமாக அடுக்கில் மேலேயுள்ள சாதிகளில் பதினெட்டு வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்யப்பட்டுவிடும். ஆணும் பெண்ணும் பெரும்பாலும் வயதிற்கு வருவதேகூட அதன் பின்பாகவே இருக்கலாம். கு. ப. ராஜகோபாலனின் சிறுகதைகள் பலவும் இக்களத்தில் எழுதப்பட்டவை. தலைவனும் தலைவியும் பெட்டிக்கடக்கமாக சந்திக்க வாய்ந்த அக்காலச் சூழலை ஒரு மெல்லிய கீறல் மூலமாக ஆராயமுற்படுவதே இச்சிறுகதைகளின் வடிவம்.
நூர் உன்னிஸா, கு. ப. ரா. எழுதிய முதல் கதை (பிரசுரிக்கப்பட்டது அல்ல). முதல் கதையே காதல் பற்றியது தான். நண்பனின் தங்கை நூர் உன்னிஸ்ஸா. பெண்களில் ஒளி போன்றவள். கதைசொல்லி தன் சிறு வயதில் ஒருமுறை நண்பன் வீட்டில் அவளைப் பார்க்கிறான். அப்பொழுதே ஈர்ப்பு. பின் வெகு ஆண்டுகள் கழித்து, நண்பனின் திருமணத்திற்குச் செல்கிறான். இன்னும் நூருன்னிஸ்ஸாவின் ஒளி தன் மனத்தைவிட்டு அகலவில்லை எனக் காண்கிறான். ஆனால் அதை அவன் அவளிடம் தெரிவிக்கவில்லை. பேச்சுவாக்கில் நண்பனின் தாயிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்கிறான். அவன் புறப்படும்முன் யாருக்கும் தெரியாமல் நூருன்னிஸ்ஸா அவனுக்கு ஒரு கடிதம் கொடுக்கிறாள்.
தான் நித்திய இளமையோடு அவனோடு விளையாடுவது போல கனவு காண்கிறேன் என்கிறாள். அவனை இன்னொருமுறை காணும் அவா நிறைவேறிவிட்டது என்கிறாள். அவுரங்கசீப்பின் மூத்த மகள் ஜெப் உன்னிஸா போன்று கல்யாணம் செய்துகொள்ளாமலேயே இருக்கப்போவதாக கூறுகிறாள். அது மட்டுமல்லாமல், அவனும் திருமணம் செய்துகொள்ளாமல் தன் மனத்தோடு மட்டும் லயித்துக் கழிப்பான் என தனக்குத் தெரியும் என்றும் கூறுகிறாள். சரீர இச்சை வேண்டாமல் நிலவுக்கு நாம் களங்கம்செய்யாதிருப்போம் என்று சொல்கிறாள். இளவரசி ஜெபுன்னிஸ்ஸாவின் கவிதை ஒன்று:
“மறைபொருளே,
காதலுக்கான பாதை அது,
தனித்துச் செல்க அவ்வழி.
நட்பிற்கு உகந்தவர் யாருமிலர்,
கடவுளாக இருந்தாலுமே.”
அக்காலத்தில் சேர முடியாத உறவு. அல்லது சேர முடியாது என்றே சமூகத்தால் மனம் பழக்கப்பட்டதால் சேர்வதைப்பற்றிய நினைப்பே இல்லாத உறவு. இதில் கதைசொல்லி எந்த மதம் என்று கூறப்படவில்லை. அவனும் முஸ்லிமாகவே இருந்தாலும் இதுதான் நிலைமையோ?
திரை. அக்காலத்தில் முன்சொன்னதுபோல இளவயதிலேயே (பதினைந்து இருக்கலாம்) கல்யாணம் முடித்துவிடுவார்கள். கணவன் அவ்வபோது தன் மனைவி வீட்டுக்கு வந்து பார்த்துச்செல்லலாம். பெரும்பாலும் ஆணும் பெண்ணும் வயதடைவதே தன் திருமணத்திற்குப்பின் தான். இக்கதையில் கணவனும் மனைவியும் பேசிக்கொண்டதேயில்லை. கடிதங்கள் எழுதிக்கொள்கிறார்கள். மனைவி எழுதிய கடிதங்களில் அவன் கிறங்கியிருக்கிறான். அவற்றில் பொங்கப் பொங்க அவ்வளவு உணர்ச்சி. கடிதத்தை மட்டும் பார்த்தே தன் மனைவியின் மீது காதல் பொங்குகிறது.
அப்போதுதான் முதன்முதலில் அவள் வீட்டிற்கு வருகிறான். ஆனால் அவள் மனைவி அவனைச் சந்திப்பதைத் தவிர்க்கிறாள். ஒருமுறை யாரும் வீட்டில் இல்லாதபோது வீணையிசை கேட்கிறது. கிறங்குகிறான். தன் மனைவியின் திறமையை இசையின் பாவங்களை மெச்சுகிறான். ஆனால் அது அவள் அல்ல அவளின் அக்கா என்று தெரிகிறது. அவன் மனத்தில் ஏதோ ஒரு மின்னல். இப்பொது புலப்படுகிறது. அவளே தன் தங்கை எழுதினாற்போல் அவனுக்கு கடிதம் எழுதியிருக்கிறாள். அவள்தான் தன் தங்கையிடம் மாடிக்குச் சென்று கணவரைப் பார்க்கவேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள். அவள்தான் தற்போது யாரும் வீட்டில் இல்லாதபோது அவனுக்காக வீணை வாசிக்கிறாள். அவள் இள விதவை.
தன் தங்கையின் மூலமாகவே, தான் வாழ்கிறாள். தனக்கென்று ஒரு வாழ்க்கை அவளுக்கு இனிமேல் இல்லை. தன் தங்கையே அவர்கள் இருவருக்கும் இடையில் திரையாக இருக்கிறாள். அல்லது அக்காவே தன் தங்கையைத் திரையென பயன்படுத்துகிறாள். வேறென்ன செய்யமுடியும் அவளால்?
கனகாம்பரம். அக்காலத்தில் பெண்களைவிட ஆண்களுக்குப் நவீன படிப்பும் நாகரிகமும் அறிமுகமாவதற்கு சாத்தியம் அதிகம். அதும் கிராமபெண் என்றால் படிப்பைத் தாண்டி நகர பழக்கவழக்கங்களும் அவர்களுக்கு முற்றிலும் புதியனவாக இருக்கும். அக்காலம்தான் ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்குப்பின் தனியே நகரத்திற்கு நகர்ந்து வாழ்ந்துவரும் சூழலும்கூட. முற்போக்கு என்று சொல்லிக்கொள்ளும் ஆண்கள், தங்கள் மனைவிகளுக்கு நவீன நகர நாகரிகத்தைக் கற்பிக்கமுற்படுவார்கள். அதில் அவர்களுக்கு மகிழ்ச்சி பெருமையொடல்லாமல் ஓர் அன்னியூன்யமும் கிடைக்கும்.
கிராமத்திலிருந்து வரும் தன் மனைவிடமிருந்து கட்டுப்பெட்டித்தனத்தை ஒழிக்கவிரும்புகிறான் அவன். தான் வீட்டில் இல்லாதபொழுது யாரும் வந்தால், அவர்கள் யார் என்ன என்பதைக் கேட்டுக்கொள்ளவேண்டும் என்கிறான். கிராமத்தில் உள்ளதுபோல் அமைதியாக வீட்டின் உள்ளேயே அடங்கியிருக்ககூடாது என்று கூறுகிறான். ஒருநாள் அவன் வீட்டில் இல்லாத போது அவனுடைய நண்பன் வீட்டுக்குவந்து அவன் இருக்கிறானா என்று கேட்கிறான். மனைவி வெளியில் வந்து அவர் இல்லையெனவும் உள்ளே வந்து உட்காருங்கள், வந்து விடுவார் எனவும் கூறுகிறாள். நண்பனுக்கு பதட்டமாகி ஓடுவிடுகிறான். அவன் திரும்பியவுடன் அவள் இதைச் சொல்கிறாள், அவன் தன்னை மெச்சுவானென்று. அவனோ அவள் “உள்ளே வந்து உட்காருங்கள்” என்று கூறிவிட்டதற்காகக் கடிந்துகொள்கிறான். தன் நண்பன் என்ன நினைத்துவிடுவானோ என்று அஞ்சுகிறான்.
மல்லிகை, கிராம பெண்கள் அணிவது. கனகாம்பரமோ, நகரப் பெண்கள். கனகாம்பரம், மெல்லிய செம்மை நிறம் கொண்டிருக்கும், வாசனையற்றது. கணவன் சொல்வது இதுவே; இதோ பார், நீ நகரத்துக்கு வந்துவிட்டதனால் வாசனையில்லாத கனகாம்பரமே சூடிக்கொள்ளவேண்டும், அதுவே நாகரிகம். மனைவியோ புதிதாக வாசனையுள்ள ஒரு கனகாம்பரத்தைக் கண்டுபிடித்தோ உருவாக்கியோ சூடிக்கொண்டால், கணவனுக்கு அச்சம்.
சிறிது வெளிச்சம். தனக்குப் பொருத்தமில்லாத கணவனிடம் மாட்டிக்கொண்ட மனைவியின் வாழ்வில் வந்த சிறிது வெளிச்சம், சிறிதே காலமிருந்த வெளிச்சம், சிறிதே ஒளிர்மையிருந்த வெளிச்சம். கணவன் தன்னை அடிக்கிறான். கணவன் பாலியல் தொழிலாளியிடம் செல்கிறான். கணவன் தனக்குண்டான சுகத்தை அளிக்கவில்லை. தன் வீட்டின் ஓர் அறையில் குடிகொண்டிருக்கும் ஒருவனிடம் அவள் ஈர்க்கப்படுகிறாள். அவன் அவளுக்காக கணவனை எதிர்த்துப் பேசுகிறான். ஒரே ஓரிரவு அவள் அறையில் இருக்கிறாள். விளக்கு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அவள் அவன் படுக்கையில் உட்காருகிறாள். அவன் தன் மேல் சாய்த்துக்கொள்கிறான். அவளைப் படுக்கவைக்கிறான். அவள் இதழ் திறந்தபடி இருக்கிறது. அப்போதுதான் நிம்மதியாக உணர்கிறாளா? “அம்மா, போதுமடி” என்கிறாள். அதுவே அவளுக்குப் போதும். அவன் முகத்தோடு முகம் வைக்கிறான். கிளம்புகிறாள். நாளை அவனை வீட்டைவிட்டுக் கிளம்பும்படி கூறுகிறாள். சிலநாள் கழித்து இறக்கிறாள்.
அவன் தாங்கள் இருவரும் வாழலாம் என்று விருப்பம் தெரிவித்தும், அவள் மறுக்கிறாள். எல்லா ஆண்களும் ஒன்றுதான் என்கிறாள். சிறிதுகாலம் மிருக இச்சைக்கு ஆட்பட்டு ஆசைகொள்வீர்கள், பிறகு முகம் திருப்பிக்கொள்வீர்கள் என்கிறாள். ஒருவேளை அவள் இப்படி எண்ணாமலிருந்தால், அவனுடன் மகிழ்வாக இருந்திருக்கமுடியும், பெருவெளிச்சம் கிட்டியிருக்கலாம். ஆனால் ஏனோ, சிறிது வெளிச்சமே போதும் என்று நினைக்கிறாள். வாழ்வு முழுவதும் பெருவெளிச்சம் தருவதற்கு ஆண்களுக்கு லாயக்கு இல்லை என்று நினைக்கிறாளா?
ஆற்றாமை. இரு பள்ளிநண்பர்களுக்கிடையே எவ்வளவு பிரியம் இருந்தாலும் தனக்கு இல்லாதது நண்பருக்கு இருக்கிறதே என்று என்னசெய்வது என்னசெய்வது என்று தெரியாமல் ஏதோ ஒரு கணத்தில் அட்ரினலின் தலைக்கேறி தன்னிடம் உள்ள பேனாவால் சுருக்கென்று குத்துவது போன்றது இக்கதை. சமீபத்தில் திருமணமான இரு பெண்கள், பக்கத்து பக்கத்தில் ஒண்டிக்குடித்தன வீடுகளில் வசிக்கிறார்கள். சாவித்திரியின் கணவன் மிலிட்டரியில் வேலை பார்க்கிறான். நாலுபேர் ஏதாவது சொல்வார்கள் என்பதற்காக சாந்தி முகூர்த்தம் மட்டும் நடத்தி, மூன்று நாட்களுக்குப் பின்பு அவன் போய்விட்டான். ஆனால் அந்த சாந்தி முகூர்த்தம் சாவித்திரிக்கு யமனாகத் தான் தோன்றிற்று. கமலமும் அவள் கணவன் ராகவனும் நெருக்கமாக இருக்கிறார்கள். இவளுக்கு அதைப் பார்க்க, அதைக் கேட்க, பொறாமையாக இருக்கிறது.
ஒரு முன்னிரவு, அவர்கள் இருவரும் அவ்வாறு இருக்கும் சமயத்தில், அவர்களைக் காண ஒரு நண்பன் பொது கதவைத் தட்டுகிறான். சாவித்திரி கதவைத் திறந்து, அவர்கள் கதவைத் தட்டலாம் எனச் சொல்கிறாள். அக்கால பழக்கத்தில், வீட்டுக் கதவை எப்போதும் திறந்தேதான் வைத்திருப்பர். மூடியிருந்தால் தொந்தரவு செய்யவேண்டாம் என்று பொருள். அந்நண்பன் சிறிது தயக்கதிற்குப் பிறகு, கதவைத் தட்டியதும், கணவன் அவசரமாக யோசிக்காமல் ஒருபக்கக் கதவைத் திறக்கிறான். அந்த ஒரு கணம், கமலம் ஆடை நெகிழ்ந்திருப்பதை அந்நண்பன் பார்க்கவேண்டியதாகியிருக்கிறது. கணவனுக்கு இது எதுவும் உரைக்கவில்லை. மானம் போய்விட்டது என்று கமலம் சொன்னதற்கு, எவ்வளவு போய்விட்டது என்று சீறுகிறான்.
சாவித்திரியும் அக்கணத்தை நன்றாகப் பார்த்துவிட்டாள். அதற்காகத்தான் காத்திருந்தாள். பேனாவால் குத்தியாகிவிட்டது. ஆனால், மறுகணமே அவளுக்கு கமலம் மேல் வருத்தமும் பச்சாதாபமும் வந்துவிட்டது. திருப்திதானா பேயே என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறாள்.
விடியுமா? சூரியனிலிருந்து பூமிக்கு ஒளி பயணத்து வருவதற்கு எட்டு நிமிடங்கள் (ஐநூறு விநாடிகள்) ஆகும். அதாவது நாம் பார்க்கும் இப்போதைய சூரியன் எட்டு நிமிட பழைய சூரியன். இதோ இந்தக் கணத்தில் சூரியன் மாயமாக மறைந்துவிட்டால் நாம் எட்டு நிமிடங்கள் அறியாதிருப்போம். சூப்பர்நோவா விண்மீன் எப்பொழுதோ வெடித்துவிட்டது, ஆனால் நூற்றாண்டுகளாக நாம் நம் பார்வையில் வெடிக்காத விண்மீனைக் கண்டு குதூகலித்துக்கொண்டிருக்கிறோம்.
செய்தி பரிமாற்றத்தின் வேகத்தைக்கொண்டு நுணுக்கமாக காலத்தின் சூட்சுமத்தைச் சொல்லும் கதை இது. கணவனுக்கு அபாயம் என்று மருத்துவமனையிலிருந்து தந்தி வந்து இரவு இரயிலில் பயணிக்கும் ஒரு பெண். ஒன்றும் ஆகியிருக்காது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள். அல்லது இரவு முழுவதும் பெட்டிக்குள் இருக்கும் ஹைசன்பர்க் பூனை உயிரோடு உள்ளதா இல்லையா என்பதைப் போன்று தவித்துக்கொண்டிருக்கிறாள் எனக் கொள்ளலாம். காலை விடிந்துவிட்டது. கடைசியாக பெட்டி உடைந்துவிட்டது. அவளுடைய காத்திருப்பும் தவிப்பும் மறைந்துவிட்டன.
சங்க கால அகத்திணை கவிதைகள் எல்லாம் ஒரே மாதிரியைக் கொண்டிருக்கும். தலைவன், தலைவி, தோழி, பார்ப்பனத் தோழன், செவிலித் தாய் என ஒரே கதாபாத்திரங்கள். இவற்றை வைத்து காதலின் காமத்தின் அகச்சூழலின் பல்வேறு கணங்கள். அக்கணங்களும் ஆயிரக்கணக்கானவை அல்ல. சில துறைகளே வகுக்கப்பட்டுள்ளன. அத்துறைகளுக்குள்ளேயே எவ்வளவு நுணுக்கமாக எவ்வளவு பூடகமாக எவ்வளவு படிமக்குறிகளாக அதே அன்பும் அதே காதலும் அதே பிரிவும் அதே ஆற்றாமையும் உணர்த்தப்பட்டிருக்கின்றன என்பதிலேயே சங்க இலக்கியத்தின் அழகியலும் முக்கியத்துவமும் இருக்கின்றன. அல்லது அக்காலத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட மக்கட்குழுவின் வாழ்வின் சில குறிப்பிட்டக் கணங்களைப் பல்வேறு கவிஞர்கள் எழுதியெழுதி பல்வேறு பாணர்கள் பாடிப்பாடி, திணைத்துறை பின்னால் வகுக்கப்பட்டது எனவும் கொள்ளலாம். கு. ப. ராஜகோபாலனின் சில சிறுகதைகளை இவ்வாறு வகுக்கலாம். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கட்குழுவில் இருக்கும் ஆண்-பெண் குடும்ப உறவுகளின் நுணுக்கமான உணர்வுகளைக் கடத்தும் கதைகள். அவை கச்சிதமானவை. பெரும்பாலும் சில (மூன்று நான்கு) பக்கங்களில் முடிபவை. ஒரே ஒரு நிகழ்ச்சியை விவரிப்பவை. அவற்றின் பேசுபொருளுக்கு எல்லைகள் உண்டு; காலச் சமூகச் சூழலுக்கேற்ப அமைந்தவை. ஆனால் அவை எல்லைக்குட்பட்டவையாலேயே நுணுக்கமாக இருக்கின்றன. அவ்வுணர்வுகளை விரித்துக்கொள்வது வாசகரின் விருப்பம்.