(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய மே 4, 2025 அன்று நிகழ்ந்த டி.எஸ். எலியட் மாதாந்திர கூடுகையில் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்.)
ராமாயணத்தில் ராவணன் ஏன் இலங்கையில் இருக்கிறான்? புராண கதைகளை விட்டுவிட்டு ஒரு கதையாக பார்த்தால், ஏன் அவன் அங்கே இருக்கிறான்? இலங்கை என்ற சொல்லுக்கே தீவு என்று தான் பொருள். அது திராவிட மொழி வேர் இருக்கலாம் அல்லது பாலி அல்லது ஒரு பழங்குடி மொழி வேர் இருக்கலாம். கடல் சூழ இருக்கும் இடத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதுதான் ஒரு உச்சநிலை சிறைக்களம். சீதை ஒரு தீவில் மாட்டிக்கொண்டிருக்கிறாள். எங்கும் அவள் ஓட முடியாது. ராமனும் எளிதில் உடனடியாக சென்று மீட்க முடியாது. தீவே சிறையாக படிமமாக ஆகியிருக்கிறது. சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள அல்கட்ராஸ் தீவு போல.
நீலத்தழல் சிறுகதையில் இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு ஆசிரியராக செல்லும் பிரசாத் அத்தீவையே ஒரு சிறையாகத்தான் எண்ணுகிறான். அவன் எங்கும் தப்பித்து ஓட முடியாத தீவு. வேறு வழியில்லாமல், பிழைப்பிற்காக தானே வந்த ஒரு இடம். மாலத்தீவின் புவியியலைப் பார்த்தால் அது முழுவதும் ஒரு சமநிலை இடம்தான். உயரமான இடமே ஐந்து மீட்டர்கள் தாம். ஏற்ற இறக்கமே கிடையாது. பிரசாத்தின் வாழ்க்கையிலும் ஒரேமாதிரியோடும் சுழற்சி என்பதாகவே ஆசிரியர் காட்டுகிறார். சமணர்கள் இந்தியா முழுவதும் சென்று ஆசிரியர்களாய் விரிந்தது போல, மாலத்தீவு மக்களுக்கு அவர்கள் நிலம் சார்ந்த, பிழைப்பு சார்ந்த, வேலை தெரியும். பள்ளியாசிரியர் தரப்படுத்தப்பட்ட கல்வி கற்றுக்கொடுக்க வந்திருக்கிறார். சமணரான திருத்தக்கத்தேவர் தமிழ் இலக்கியமரபு சார்ந்து வளைந்து அகத்துறையையும் சீவகசிந்தாமணியில் கையாண்டதுபோல, இந்தச் சிறுகதை முடிவில் பள்ளியாசிரியருக்குத் தெரியாத ஒரு கல்வி அவருக்கு கிடைக்கிறது, மாணவர் மூலமாக.
பிறப்பொக்கும் மற்றும் பொற்குகை ரகசியம், இந்த இரண்டு கதைகளையும் லாட்டரி கதைகள் என்பேன். இரட்டைக் கதைகள். கோயம்புத்தூரின் உக்கடம் சிற்றுரில் நடக்கும் இக்கதைகளில் அந்தச் சிறிய இடமே தீவாகத் தான் இருக்கிறது. மனிதர் வாழும் தெருக்கள், கோயில், ஆட்டோ ஸ்டான்ட், லாட்டரி கடை, மெக்கானிக் ஷாப். ஒரு பந்தை நான்கு சுவர்களில் அடித்தடித்து விளையாடும் நிண்டெண்டோ கேம் போல, மக்கள் எல்லாரும் அங்கேயே தான் உழன்றுகொண்டிருக்கிறார்கள். உழல்வதைப் போக்குவதற்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியைக் கண்டுபிடிக்கிறார்கள்.
பொற்குகை ரகசியத்தில், சிறுவன் பாலுவுக்கு எந்நேரமும் புதிய இடங்களை பற்றிய நினைப்புதான். முதலில் அவன் சுவர் ஏறி ஜன்னல் பிடித்து தாவி, தன் காதல் ஈர்ப்புக்க்காக புதிய ஒரு இடத்தை அடைவது போல கனவு காண்கிறான். பின்னர் பொற்குகை ரகசியம் காமிக்ஸையே வாங்கி படித்து வேறொரு பொன்னுலகைக் கனவு காண்கிறான். பிறப்பொக்கும் கதையில பாலுவும் வீட்டை விட்டு ஓடிப்போகிறான். (ஒருவேளை கனவு காணும் சிறுவன் கதாபாத்திரம் தான், சின்ன சித்தப்பா, பாலுவா வருகிறதோ.) பாலு சித்தப்பா வீட்டை விட்டு ஓடிப்போகிறான், அடிக்கடி. எங்கு போகிறான், எதற்குப் போகிறான், என்ன வேலை செய்கிறான் என ஆசிரியர் சொல்லவில்லை. ஆனால் அவனுக்கு அவ்வபோது அந்த ஒருவித கசகசப்பான நிலத்தைவிட்டு சிற்றூரைவிட்டு ஓடுப்போகவேண்டும் அவ்வளவுதான்.
இதற்கு நேர்மாறாக அவனுடைய அண்ணன், பையனுடைய பெரிய சித்தப்பா, சோமு சித்தப்பா. சரியாக கால் நடக்க இயலாத மாற்றுத் திறனாளி. இவரே தான் முந்தின கதையில் ஆறுமுகம் சித்தப்பாவாக வருகிறார். இரண்டு கதையிலும் அவர் லாட்டரி டிக்கெட் விற்கிறார். அவருடைய உடல்நிலையாலேயே அவர் கட்டுண்டு இருப்பதாகத்தான் ஆசிரியர் புனைகிறார். ஆனாலும் அவர் லாட்டரி விற்பதே ஒருவித ஓட்டத்திற்காகத்தான். அந்தப் பணத்தின் மூலம் தன் நிலையிலிருந்து மேலெழுந்து ஓட முடியுமா என்று பார்க்கிறார். வீட்டை விட்டு எப்போதும் ஓடும் தன் தம்பியிடம் உச்சக்கட்ட கோபம் - தான் அந்த நிலத்தைவிட்டு ஓட முடியாது என்ற அங்கலாய்ப்பு என்று வாசிக்கலாம். கதையின் உச்சத்தில் அவரே அந்த வீட்டைவிட்டு ஓடி விடுகிறார். இவ்வளவு நாள் தன் தம்பியைத் திட்டிக்கொண்டிருந்தவர் அதே காரியத்தை அவரும் புரிகிறார்.
இந்த இரண்டு கதையிலும் வரும் பாட்டி கதாபத்திரம், கோடுபோட்டு வரையறுக்க இயலாத ஒன்றாக இருக்கிறது. இரண்டு பாட்டிகளையும் ஒன்றாக வைத்துக்கொண்டால், பொற்குகை ரகசியம் கதையில் வரும் பாட்டி, பேரன் பாலுவைப் பற்றி எதிர் வீட்டு மைதிலி அக்காவிடம் சொல்கிறார், ”படிக்காமலேயே பர்ஸ்ட் ராங்க் வந்துருவான். படிப்பிலே படு சுட்டி”. ஏதோ ஒரு விதத்தில்,பேரன் படித்தால் இந்த நிலத்தில் இருந்து உயர்ந்துவிடுவான் என்று அந்தப் பாட்டி வைத்திருக்கும் நம்பிக்கையாகக் கொள்ளலாம். அதே நேரம், பிறப்பொக்கும் கதையில் வருபவர், இரண்டு சித்தப்பாக்களையும் சமமாக மதிக்காமல் பாரபட்சம் காட்டுகிறார். சின்ன சித்தப்பாவைப் பற்றித்தான் அவள் கவலையெல்லாம். அதனால் தான் கதையின் தலைப்பே பிறப்பொக்கும் என்று வைக்கப்பட்டிருக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள், இயல்பானதா என்ற கேள்வி. புறனானூற்றில் உள்ள ஒரு பாடலையும் பொருத்திப்பார்க்கலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது.
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்.”
அவள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளே ஆனாலும், சிறப்பின் பாலால் தாயின் மனம் திரியும், சாய்வுகொள்ளும் என்று வருகிறது. பின்னர் அது,
”ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்,”
என்று முடிகிறது. அறிவுடையோன் வழி அரசும் செல்லும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கதையில் எந்தச் சிறப்பினால் அந்தத் தாயின் மனம், ஓடிப்போகும் பாலு சித்தப்பாவிடமே சாய்ந்து இருக்கிறது. அப்படியென்றால் தமிழ்நிலமே வரையறுத்துக் வைத்திருக்கும் தாய்மை என்கிற கருத்தாக்கம் முதலில் உண்டா என்று இந்தக் கதை கேள்வி எழுப்புகிறது.
பேராசிரியரின் கிளி கதை, ஒரு புதிய நிலத்தில் இரு வேறு பாதைக்கொண்டவர்களின் கதையாக வாசிக்கலாம். கதையின் மிக நுண்ணிய புள்ளியிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஸ்ருதி, கிளியை வாங்குவதற்காக தன் கையை நீட்டுகிறாள் - புன்னகை மாறாமல். கிளி தன் காலை வைக்கும் போது அவளுக்கு ஒரு கணம் சிராய்ந்து வலிப்பதுபோல உணருகிறாள். இதுதான் பேராசிரியருக்கும் அவளுக்கும் இடையே நடந்ததா - மெல்லிதாக ஆசிரியர் இங்கே கோடிழுத்துக் காட்டுகிறார். மேலும் தொடர்கிறார், கிளி அந்த வலியை ஸ்ருதியின் எண்ணத்தைப் புரிந்ததுபோன்று தன் காலை இழுத்துக்கொண்டது என்று. ஆனால் பேராசிரியர் ஸ்ருதியின் வலியை எண்ணத்தைப் புரிந்துகொண்டாரா, தன்னுடைய கைநீட்டலை பின்னிழுத்துக்கொண்டாரா - கைநீட்டல் என்பது ஒரு படிமமாகச் சொல்கிறேன் - ஒருவேளை பேராசிரியர் பின்னிழுத்துக் கொள்ளவில்லையா; கிளிக்கு தெரிந்திருக்கிறது, மனிதருக்குத் தெரியவில்லை. கிளி அவரை இடியட் இடியட் என விளிக்கிறது.அதே நேரம், ஸ்ருதிக்கு அந்த இடியட்டின் அங்கிகாரமும் தேவையாக இருக்கிறது.
ஒரே நிலம், இரு வேறு பாதைகள். ஸ்ருதி எப்பொழுதும் எதிலும் எந்த வழியில் விரைவாக விடை கிடைக்குமோ அதைத் தேர்வுச்செய்பவளாக இருக்கிறாள், அல்லது அவ்வாறு மாறியிருக்கிறாள். புதிய கார், அறிவியல் மாநாடுகளில் உரை என மேலும் மேலும் புகழின் உச்சியில் அவள் பாதை செல்கிறது - புதிய நிலம் புதிய பாதைகள். அதே வேளையில் இன்னும் பழைய மரவீடு, பழைய கார், பழைய இருக்கை என வாழ்ந்துகொண்டிருக்கும் ராமச்சந்திரன் உலகமெனும் கிளியின் பார்வையில் தனக்கே உண்டான பழைய நிலத்தில் பழைய இடியட்டாகவே இருக்கிறார்.
மறுபடியும் நாம் மாலத்தீவுக்கு வந்தால், ஊனுடல் கதையில், சங்கமேஸ்வரன் அந்தப் புதிய நிலத்தை ஒரு அடைப்பாக கருதாமல், தன்னைப் புதிதாகக் கண்டுகொள்ள முயல்கிறான். பொருள் வயின் பிரிதல் என்பது சங்க இலக்கியத்தில் பொதுவாக திருமணத்திற்குப் பிறகான உறவில் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று தலைவி காத்திருப்பதற்கு வடிவமைக்கப்பட்டது. இங்கு ஜெகதீஷின் சங்கமேஸ்வரன், பொருள் வயின் பிரியும் போதுதான் தன்னையே கண்டடைகிறான், தன் நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்குச் செல்லும்போது. புதிய நிலம் புதிய மனிதர்களைக் கொடுக்கிறது. அம்மா எதிர்கொண்ட அப்பாவின் கொடுமைகளைப் பார்த்து வளர்ந்தவன். அப்பாவும் ஓடிப்போய், அம்மா மெலிந்து வற்றிப்போனதைக் கண்டவன். புதிய நிலத்தில் எப்படி வெள்ளைக்காரர்கள் மட்டும் புதிய பெண்களிடம் சகஜமாக பேசுகிறார்கள் என வியக்கிறான். ஆனால் அவன் ஐனியிடம் தன்னையே கண்டுகொள்கிறான். நங்கூரமிட்ட அந்தப் படகு மெல்ல தளும்பிக்கொண்டிருந்ததாக ஆசிரியர் எழுதுகிறார். அவன் மனமுமே தளும்பிக்கொண்டிருக்கிறது.
இறுதியாக திரும்பவும் நாம் பள்ளியாசிரியர் பிரசாத்திடம் செல்வோம். முடிவில் அவன் கடலே நீல ஒளியில் பிரகாசிக்கும் தீயென கண்டுகொள்கிறான். ஆனாலும் என்ன செய்வது? இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை அவ்வளவு பிரகாசத்தைத் தொடர்ந்து எதிர்கொள்ளமுடியாது. கால் எப்போது வரும் என்று பிரசாத் கடைசியில் தன் செல்போன் இருக்கும் கையைத் தூக்கி வைத்திருக்கிறான்.கடலில் சிக்கிக்கொள்ளும்போது கையில் விசில் வைத்திருப்பார்கள் - மனிதர் யாரும் வந்தால் கேட்பதற்காக. ஆனால் இவன் கையில் செல்பேசி. அது அலைகள் வந்தால் வாங்கிக்கொள்ளும். ஆனால் அதே அலைகள் யாரையும் கூப்பிடுவதற்காகச் செல்கின்றனவா?
தமிழில் பெயர்ச்சொல் பெரும்பாலும் காரணப்பெயர்கள். அது பறப்பதால் பறவை என்கிறோம். மனிதர் நிற்பதால், நில் - நிலம் என்கிறோம். அப்படியென்றால், கடல் என்பது? கடல் என்பது கடப்பதற்கு – எதைக் கடப்பதற்கு, யாரிடம் இருந்து கடப்பதற்கு, யாரைக் காண்பதற்கு, எதைக் கண்டடைவதற்காக கடந்து செல்கிறோம்? இச்சிறுகதை தொகுப்பு இக்கேள்விகளை ஆராய்கிறது.