பறக்க வழிதேடும் கூண்டுமைனா - புத்தம் வீடு நாவல் வாசிப்பு

ஆகஸ்ட் 4, 2025 ஹெப்சிபா ஜேசுதாசன் வாசிப்பு

புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன் (1964)

ஹெப்சிபா ஜேசுதாசன் இருபதாம் நூற்றாண்டின் நடுவாண்டுகளில் திருவனந்தபுரம் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கிய வரலாற்றை Countdown from Solomon: The Tamils down the ages through their literature என்ற தொகுப்பில் நான்கு பாகங்களாக எழுதியிருக்கிறார். புத்தம் வீடு, ஹெப்சிபா எழுதிய முதல் நாவல். இதில் வரும் ஒரு கதாபாத்திரத்தை விரித்து அவரின் அடுத்த நாவலையும் (டாக்டர் செல்லப்பா) எழுதியிருக்கிறார்.

புத்தம் வீடு நாவல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பனைவிளை என்ற கற்பனை ஊரில் வாழும் லிஸி என்ற பெண்ணைப் பற்றிய கதை மட்டுமன்றி, பழைய சமூக அடுக்கில் ஏற்படும் மாற்றத்தையும், உறவுகளின் சிக்கல்களையும், ஒரு தனிமனிதரின் அகவிடுதலையையும் நுட்பமாக விவரிக்கும் ஒரு முக்கியமான படைப்பு. நிலமும் வீடும் வைத்திருப்பது நிலவுடைமை காலத்தின் முக்கிய அந்தஸ்தும் அதிகாரமும். இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளத்திலும் ஒருவருடைய பெயரின் பின்பாகம் வீடு என்றோ புறத்து என்றோ முடிந்தால் அவர் குடும்பம் தற்பொழுதோ முற்காலத்திலோ நிலவுடைமையாளராக இருந்திருக்கிறது என்று கணிக்கலாம். அப்படியான ஒரு வீட்டில் வளரும் சிறுமிதான் லிஸி. வீட்டின் பெயர், புத்தம் வீடு. நாவல் நமக்கு காண்பிப்பவையோ அவ்வீட்டில் உள்ள பழைய மனிதர்களை. இன்னும் பழைய விழுமியங்களைப் பிடித்துக்கொண்டிருக்கும் புதிய மாற்றங்களை ஏற்க மறுக்கும் அல்லது கடினப்பட்டு ஏற்கும் பழைய மனிதர்கள்.

நாவலின் நேரடித்தன்மையுள்ள எழுத்து அதன் மிகப் பெரிய பலம் (அல்லது பெலம், நாவலின் எழுத்துவழக்கில்!). வாசகர் பெரும்பாறையையும் தூக்கவேண்டாம் ஒற்றைக்காலிலும் நின்று சிரமப்பட வேண்டாம். ஒரு வாரயிறுதியில் பல மணிநேரங்களில் வாசித்து முடித்துவிடக்கூடிய நாவல். தெளிவான சிக்கலற்ற எழுத்து. நவீனத் தமிழிலக்கியத்தில் ஒரு வட்டார வழக்கை கதையின் உரையாடல்களில் மட்டுமன்றி கதையாடல் விவரிப்பிலும் இயல்பாக பயின்று வரும்படி கொண்டிருக்கும் எடுத்திக்காட்டு நாவல். ஆனால், புதிய சொற்கள் கதையின் வாசிப்பியல்பிலேயே புரிந்துவிடுகின்றன. ஓர் எழுத்தாளரின் முதல் நாவல் என்கிற விதத்தில் இனிய வாசிப்பனுபவத்தைத் தருதல் ஆசிரியரின் தெளிவான சிந்தனையையும் எழுத்துவலிமையையும் காட்டுகிறது.

காலமாற்றத்தை விவரிக்கும் எழுத்துகள் முக்கியமானவை. ஓர் அபுனைவில் அவ்வாறான மாற்றத்தை வாசிக்கும்போது, நமக்கு ஒரு புறவய பார்வையே கிடைக்கும். பொருளாதாரம் இப்படி மாறியது, இந்த ஊர் இந்த இந்த கட்டுமான மாற்றங்களை அடைந்தது, இந்த நாட்டில் இவ்வாறான ஆட்சிமாற்றம் நிகழ்ந்தது, என்பவைப் போன்றே நம் மனம் உள்ளிழுத்துக்கொள்ளும். ஒரு புனைவு படைப்பு, அதிலிருந்து மேலெழுந்தும் உள்சென்றும் மனிதர்களை விவரிக்கிறது. மாற்றம் என்ன என்பதை வாசிப்பதைக் காட்டிலும், ஒரு மனிதர் கூடவே பயணித்து நாமும் அகவுணர்வாக அதை அடைகிறோம். அதை புத்தம் வீடு நாவல் லிஸி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அற்புதமாகக் காட்டுகிறது. கூடவே, நாவலுக்குப் பெரும்வலிமையைச் சேர்ப்பது, லிஸியைச் சுற்றி இருக்கும் பலவித மனிதர்கள். வெவ்வேறு தலைமுறை மனிதர்கள். அவள் வீட்டிலேயே வாழும் மனிதர்களையும், வீட்டிற்கு வெளியே இதுவரை வீடே இல்லாத புதிய வீடு கட்டும் மனிதர்களையும் காண்கிறோம்.

நாவல் காட்டும் மனிதர்கள், ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள், ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், எப்படி காலங்காலமாக ஊர்ந்துவந்துகொண்டிருக்கும் சமூக அடுக்குநிலையும் வேலைசார்ந்த பாகுபாடும் இன்னுமேகூட நிலைத்திருக்கிறது என்று பார்க்கிறோம். புதிய காலத்தின் வாய்ப்புகள் எப்படி இந்த அடுக்கில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது என்பதையும் இந்த நாவல் வாசிப்பில் விரித்து எடுத்துக்கொள்ளலாம்.

எழுத்தின் எளிமையுடன் கூடிய அடர்த்தி நம்மை உடனேயே உள்ளிழுத்துக்கொள்கிறது. நாவலின் முதல் அத்தியாயம் மிக அழகான இயற்கைச்சூழல் விவரணைகளுடன் ஆரம்பிக்கிறது. பனைவிளை ஊரை நம் உள்கண்களில் காண ஆரம்பித்துவிடுகிறோம். ஊர்மக்கள் இன்னும் பழமையை மரபாக பாவித்துவருவதை, ஹெப்சிபா, அரணையை விஷ உயிரினம் என எல்லாரும் நம்பி ஒதுங்கியே இருக்கிறார்கள் என்று கூறி உணர்த்திச்செல்கிறார். தொடர்ந்து புத்தம் வீடு அறிமுகமும் நேற்றைய தலைமுறையான கண்ணப்பச்சி தாத்தாவும் நாளைய தலைமுறையான பேத்தி சிறுமி லிஸியும் அறிமுகமாகின்றனர்.

இயல்பாக நாம் லிஸியைப் பின்தொடர்கிறோம். அவள் சற்றே கறுப்பாக இருப்பதும் அவள் சித்தியும் சித்தியின் பெண், லிஸ்ஸியின் சகோதரி, லில்லியும் சிவந்த மேனியுடன் இருப்பதும், அதனால் கிராமத்தில் அவர்களையே அழகென காண்பதும் நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. சித்தி திருவனந்தபுர பட்டணத்திலிருந்து வந்தவள், அவளுக்கு அங்கே குடும்பம் இருக்கிறது, அவள் அவர்களுக்கு கடிதம் போடுவாள். இதுவே லிஸிக்கு காந்தமாக இழுக்கிறது. சித்திதான் வீட்டில் எல்லோர் எதிர்ப்பின் மத்தியிலும் லிஸி பள்ளிக்குச் செல்ல வாதாடி அனுப்பி வைக்கிறாள். லிஸியின் தாய் வீட்டிற்கு மூத்த மருமகள், லிஸியின் தந்தை குடிகாரர். லிஸியின் அப்பன் வீட்டிற்கு வருவதே அகால நேரத்தில்தான். இதை லிஸி சித்தப்பாவிடம் கூறும்போது அவர் சிரிக்கிறார். லிஸிக்கு தன் அப்பாதான் ஒட்டவில்லை என்பதால் சித்தப்பாவை எதிர்பார்க்கிறாள். ஆனால், அவரும் அப்படியே.

லிஸியின் ஒரே சிநேகம் மிஷன் வீட்டில் உள்ள எட்டாவது படிக்கும் மேரி அக்கா. மிஷன் வீடு புத்தம் வீடு போல் விசாலமல்ல என்றாலும் மிக அழகானது. லிஸிக்கு அந்த வீடு பிடித்திருக்கிறது. தாயிடம் மேரி பழகுவதும் தந்தையிடம் வளைய வருவதும் புத்தம் வீட்டில் காணக் கிடைக்காதது. காலத்தின் அடுத்தக் கட்டத்திற்கான குடும்பம் இது. ஆனால், புத்தம் வீடோ தொடாமல் பேசாமல் விலகியிருக்கும் அம்மா-அப்பா-குழந்தை என்ற பழைய அமைப்பையே மாறாமல் வைத்திருக்கிறது. மேரி, லிஸியை விட மூத்தவள். ஆனால், லிஸியுடன் சிநேகமாய் இருக்கிறாள். புத்தம் வீட்டுக்கு வந்து விளையாடுகிறாள். அவள் குடும்பம் வறியது, ஆனாலும் அவளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பிறகு, கல்லூரிக்குச் செல்கிறாள், லிஸியைப் போலன்றி. ஒருமுறை லிஸி மேரி வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவளுக்கு ஒரு மைனாவைக் கூண்டுடன் பரிசளிக்கிறாள். லிஸிக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அது ”லிஸி லிஸி” என்று குரலெழுப்புகிறது. லிஸி மேலும் மகிழ்ச்சியுடன் அதற்கு “லிஸி லில்லி” என்று கற்றுத்தரச்சொல்லி கேட்கிறாள்.

லில்லி குழந்தையாக அறிமுகப்படுத்தப்படுகிறாள். லிஸியிடமும் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்கப்படுகிறது. அவள் பல பெயர்களைப் பரிந்துரைத்தாலும், சித்தியே லில்லி என்று வைக்கிறாள்; லிஸி-லில்லி பொருத்தமாக இருக்கும் எனச் சொல்கிறாள். குழந்தைக்கு இன்னொரு குழந்தை என்பது போல, லிஸி லில்லியின் மேல் பேரன்பு வைத்திருக்கிறாள். இரு பிள்ளைகள் ஒரு வீட்டில் இருந்தால், ஒன்று மற்றொன்றை வால் போல் தொடரும் என்பது உலக நியதி. சரி, சில உலகங்களின் நியதி என்று வைத்துக்கொள்ளலாம். புத்தம் வீட்டில், நியதியிலிருந்து அடுத்த நியதிக்குத் தாவல் நடக்கிறது. முதலில் ஓர் ஆணின் மீது லிஸி கொண்டுள்ள ஈர்ப்பு, குழந்தையான லில்லிக்கு புரிவதில்லை. பின்னர், இந்தியா சுதந்திரம் பெறுகிறது, பனைவிளைக்கு மின்சாரக் கம்பிகள் வருகின்றன. லில்லி வளர்ந்து லிஸியின் காதலைக் கண்டுகொள்கிறாள்.

இந்தப் பெண்களின் வயதிற்கு இரட்டிப்பு வயதில் இருக்கும் வைத்தியன் ஒருவன், கண்ணப்பச்சி தாத்தாவிடம் கல்யாணம் ஆகாமல் இருக்கும் லிஸியை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டுப்போகிறான். புத்தம் வீட்டில் எல்லோருக்கும் மிகைமகிழ்ச்சி. லிஸிக்கு ஒருவிதத்தில் தனக்கு ஏதோ நடக்கிறதே என்ற ஆனந்தம். ஆனால், அந்த வைத்தியன் திரும்பவும் வந்து “பிராமணக்குட்டி” போல் இருக்கும் லில்லியைதான் மணந்துகொள்ளப்போகிறேன் என்கிறான். மனமுடைதலும் நடக்கிறது, மண ஏற்பாடும் நடக்கிறது. கல்யாண நாளில் யார் கண்ணிலும் படாமல் இருளறைக்குள்ளேயே இருக்கிறாள் லிஸி. யாரும் அவளைக் கண்டுகொள்ளாமல் இருக்க, முகூர்த்த நிமிடத்திற்கு முன்பு, லில்லி போய் கதவைத் தட்டி அழைக்கிறாள். அங்கு லிஸியும் லில்லியும் அணைத்துக்கொள்ளும் தருணம், நமக்கு பெருமூச்சு உண்டாகி டம்ளர் நிறையும் போது எழும் ஒலிமாற்றம்போல் ஒரு நிறைவுணர்ச்சி.

பொதுவாக, பெண்களைப் பற்றி ஆண்கள் கதையெழுதும்போது, அவர்களின் முதல் மனமுடைவு காதல் சார்ந்து எழுதுவார்கள்; அல்லது பெண்களின் மனமுதிர்ச்சியை காட்ட அவர்களுடைய கல்யாணத்திற்குப் பிறகான மாற்றத்தைக் காண்பிப்பார்கள். ஆனால், ஹெப்சிபா இக்கதையில் காட்டும் லிஸியின் முதல் மனமுடைவு ஓர் ஆணின் பிரிவை எண்ணி அல்ல. காலம் ஓடி, பள்ளிக்காலம் நிறுத்தப்பட்டு, லிஸி வீட்டிலேயே அடைபட்டுக்கிடக்கிறாள். புத்தம்வீட்டின் பனையேறி அவள் தாத்தாவால் வெளியேற்றப்படுகிறான். அதனால் அவன் ஊரைவிட்டே கிளம்ப வேண்டியதாய் இருக்கிறது. கூடவே அவன் தாய், பேத்தி என்றழைக்கப்படும் கிழவியும் கிளம்புகிறாள். லிஸிக்கு லில்லியிடம் இருப்பது மழலைமகிழ்நிலை என்று சொல்லலாம்; தன்னை அக்காவாக பெரியவளாக லில்லியிடம் காட்டுகிறாள். தோழியான மேரியிடம் ஒரு தங்கையாகவும், அதே சமயம் பள்ளிக்குச் செல்லும் வளர்ந்த சக தோழியாகவும் பிரதிபலிக்கிறாள். ஆனால், இந்தக் கிழவியிடம் தன்னை எல்லாமுமாக முன்வைக்கிறாள் - குழந்தையாக மகளாக பேத்தியாக சக-கிழவியாகக்கூட. கிழவி ஊரைவிட்டுக்கிளம்பும் அந்தக் கணமே லிஸி சந்திக்கும் முதல் இழப்பு, முதல் மனமுடைவு. “வருவேன் வருவேன், கல்யாணத்துக்கு முந்தியா சாகப் போகிறேன். எழுத்தனுப்பம்மா” என்கிறாள் கிழவி. லிஸிக்கு “உலக வாழ்க்கை இதுவா” என்று மனத்தில்படுகிறது. மைனாவால் ஒன்றும் செய்ய இயலாமல் கூண்டிற்குள்ளேயேதான் இருக்கமுடிகிறது.

நாவலில் ஆண்கள் இல்லாமல் இல்லை. லிஸியின் குடிகார அப்பா உண்டு. சித்தப்பா பட்டணத்தில் வியாபாரம் செய்ய முயன்று தோல்வி. கண்ணப்பச்சி தாத்தா உயர்ந்து நெடுந்து வளந்திருந்தாலும் இப்போது அடிச்சுக்கூடு எனப்படும் வராண்டாவில் எப்போதும் படுத்திருப்பவர். நிலபிரபுத்துவத்தில் செழித்துக் கொழித்த நாடார் வீடு, இப்போது நலிந்துகொண்டிருக்கிறது. நலிந்தாகிவிட்டது. எல்லா ஆண்களுக்கும் காலமாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமோ அதற்கேற்ப மாறும் திறனோ இல்லை. மாறாக, பனையேறி நாடார்கள், வீட்டு ஜமீந்தார்களால் இழிவாகப் பார்க்கப்படுபவர்கள், புதிதாக வியாபாரம் செய்கிறார்கள். தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்குப் படிக்க அனுப்புகிறார்கள். அன்பையன் சேர்த்து வைத்துள்ள பணத்திலிருந்து, சிறிது நிலம் வாங்குகிறான், வீட்டைக் கட்டுகிறான். பையன் தங்கராஜுடன் புளி வியாபாரம் செய்கிறான். அவன் சிறிய மகன் செல்லப்பாவும் பள்ளிக்குச் செல்கிறான். நாவலில் அழகான விவரிப்பு ஒன்று வருகிறது. பனையேறிகள் எல்லாரும் கான்ஃபரன்ஸ் காலில் பேசுகிறார்கள். எப்படி? இந்த வீட்டில் இருக்கும் பனையின் உச்சியில் இருக்கும் ஒருவன், மறுமூலை வீட்டுப்பனையுச்சியில் இருக்கும் பனையேறிக்கு குரலொலிகள் மூலமாக செய்தி அனுப்புகிறான். இப்படியே எல்லா பனையேறிகளும் உரையாடுகிறார்கள். அபாரமான காட்சியுவமை இது. நிலவுடைமையாளர்கள் எல்லாம் இன்னும் கீழேயே இருக்க, பனையேறிகள் வானத்தில் ஏறி அடுத்தக் கட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

லிஸியை புத்தம் வீட்டிலிருந்து, அந்தப் பழைய மனிதர்களிடமிருந்து விடுவிக்கும் நபர்கள் யாரும் அங்கு இல்லை. அந்த வீட்டில் இருக்கும் எந்தப் பெண்களுக்கும் இல்லை. சென்ற தலைமுறையைச் சேர்ந்த லிஸியின் பாட்டி, தன் கணவனுக்கு வேலைசெய்தே மாண்டுவிடுகிறாள். லிஸியின் அம்மாவுக்கோ, தனக்கு உற்ற இழப்பு என்னவென்றே தெரியாத ஆற்றலின்மை. லிஸியின் சித்தி பட்டணத்தில் வளர்ந்து படித்தவள், ஆனால் அவளும் காலத்தின் பின்னே வருவதுபோல் இந்த வீட்டில் வந்து சிக்கிக்கொள்கிறாள். சித்தியின் மகள், லில்லியோ தன்னை விட வயதான வைத்தியனிடம் திருமணம் செய்விக்கப்படுகிறாள். ஆனால், அந்த வைத்தியன் கூட சென்ற தலைமுறை பனையேறி குடும்பம் என்று நமக்குத் தெரியவரும்போது, கண்ணப்பச்சி கிழவருக்கு வரும் அதிர்ச்சியைப் போலல்லாமல் அமைதியான நிறைவுப்புன்னகை ஏற்படுகிறது. கடைசியாக லிஸி - அவளே ஓர் ஆணைக் கண்டுகொள்ளவேண்டியிருக்கிறது.

இந்த நாவலின் பிற்பாதியை வாசிக்கும்போது, நமக்கு இது ஒரு காதற்சிறுகதை போல தெரியலாம். முடிவை நோக்கி நேரோட்டமாக ஓடுகிறது நாவல். இதுவே நாவலின் பலவீனமும் கூட; முதற்பாதியில் பல்வேறு கதாபாத்திரங்களின் ஆழங்களை நம்மைக் கண்டடைய வைக்கும் எழுத்து, பின்னர் ஒற்றைப் பாதையில் பயணிப்பது சோர்வே. உதாரணமாக, புத்தம் வீட்டில் வாழும் சித்தியின் வாழ்க்கை, நாவலில் விவரிக்கப்படும் அவரைப் பாதிக்கும் சம்பவத்தால் எப்படி மாற்றமடைகிறது, புத்தம் வீட்டிற்கு வெளியில் இருக்கும் மேரியின் வாழ்க்கை எந்தப் பாதையில் செல்கிறது, அவர்களின் மனப்போக்கு என்னென்ன என்பதை ஆழமாக விசாரணைக்கு உட்படுத்தியிருந்திருக்கலாம். இந்த நாவல், லிஸியின் பார்வையில் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையை விரிக்க ஆரம்பித்து, பின்னர் லிஸியின் சொந்த வாழ்க்கையோடேயே முடிந்துவிடுகிறது. ஒருவேளை அதனால்தான் இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு Lizzy’s Legacy (லிஸியின் அரிச்சுவடு) என்று தலைப்பிடப்பட்டிருக்கிறதோ என்னவோ. ஒருவிதத்தில் பூமிப்பந்தின் ஈர்ப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள லிஸிக்குக் கிடைத்திருக்கும் ராக்கெட், காதல் ஒன்றுதான். அதுவும் கூட, திட்டம் போட்டு அமையவில்லை. வானில் ஒழுகிச்செல்லும் நிலாக்கப்பல் போல, லிஸிக்கு ஏற்படும் முதல் குறுகுறுப்பிலிருந்து மலர்ந்த காதல் இந்த நாவலில் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஐம்பதறுபதெழுபதுகளில் எழுதிய எந்த ஆண் எழுத்தாளர்களிடம் இல்லாத ஏதோவொன்று இதில் சாத்தியப்பட்டிருக்கிறது.

லிஸியின் பள்ளியில் குழந்தைகள் மரக்கிளையில் பஸ் ஏறி விளையாடுகிறார்கள். அப்போது தங்கராஜ் என்ற பதினான்கு வயது பையன் லிசியை ஆசான் என்று கிண்டலாக அழைக்கிறான், பதிலுக்கு அவள் மண்டூகம் என அழைக்கிறாள். ஆசிரியையிடம் தானே முதலில் சொல்ல வேண்டும் என்று லிஸி ஓடிச் செல்கிறாள். கடைசியில் தங்கராஜ் என்கிற ராசாவுக்கு கையில் அடி கிடைக்கிறது. ஆனால், அவளையறியாமலேயே அவளுக்கு மகிழ்ச்சியல்லாமல் வருத்தம். அவனிடம் கேட்கிறாள், உனக்கு என்னிடம் டூவா என்று. ஆனால் அவனிடம் வன்மம் இல்லை, சிரிக்கிறான். அவள் ஒரு மயிற்பீலியின் கண் ஒன்றைத் பரிசாகத் தருகிறாள்.

பள்ளிசெல்வது நின்று, வீட்டிலேயே அடைந்து கிடக்கும் லிஸிக்கு, ஏதோ ஒரு மாய நாளில், ஒரு நிழல் தெரிகிறது, ஒரு குரல் கேட்கிறது. அவள் சிரித்து மறந்துபோன சிரிப்பைச் சிரிக்கிறாள் என்று எழுதுகிறார் ஹெப்சிபா. என்றுமில்லாத ஒளி நிறைந்த சிரிப்பு, என்றுமில்லாத குதூகலம். எந்த ஆணும் தராத ஒன்றை, தங்கராஜ் லிஸிக்குத் தருகிறான் - லிஸியின் உள்ளத்துக்கு மதிப்புக்கொடுக்கிறான், விருப்பத்தைக் கேட்கிறான், சம்மதத்தைக் கோருகிறான். மயிற்பீலி என லிஸி தன் உள்ளத்தை ஒப்படைக்கும் தருணம் அதுவே. மைனாவின் முதல் சிறகடிப்பு, கூண்டைவிட்டு வெளியே பறக்கமுனையும் முதல் தருணம்.

பெண் எழுத்தாளர்கள் எழுதினாலே, “ஓ இதுவா, இது வெறும் பெண்ணெழுத்து” என்று பெட்டிக்கட்டுவது எழுத்துலகில் வாடிக்கை. பெண் எழுதினாலே அது காதலையும் காமத்தையும் வீட்டுவாழ்க்கையும் மையப்படுத்தியிருக்கும் என நிர்ணயிப்பதும் அவ்வாறே. நம்மாழ்வாரை ஆழ்வார் என்றுமட்டும் குறிப்பிடும் சமூகப்போக்கு, ஆண்டாளை ஆழ்வார் என்று மட்டுமன்றி, அவர் பெண் ஆழ்வார் என்று குறிப்பிடத் தவறுவதில்லை. பெண்மை எனக் கூறப்படும் கூறுகள் ஆண்டாளின் எழுத்தில் பயின்று வருகிறது என்றே வைத்துக்கொண்டாலும் கூட, மறுபக்கத்தில் மற்ற ஆண் ஆழ்வார்களின் பாடல்களில் எவ்வாறு ஆண்தன்மை பயின்றுவருகிறது என்று யாரும் வாசிப்புக்கு உட்படுத்துவதில்லை. புத்தம் நாவல் எழுத்தாளராகிய ஒரு பெண் எழுதியது, லிஸி என்ற பெண் முக்கிய கதாபாத்திரம்; ஆனால், இதைப் பெண்ணெழுத்து நாவல் என்று சுருக்கவியலாது. மங்கிய இருளில் தனக்கென ஓர் ஒளிமூலம் இல்லாமல், ஒளியின் தோற்றுவாயை நோக்கி ஓடும் ஒரு மனிதரைப் பற்றியது. பழைய அடுக்குகளின் ஒளிகுன்றி புதிய அடுக்கின்மையை நோக்கி நகரும் சமூக மாற்றத்தின் கீற்று தென்படும் நாவல். நெஞ்சில் எப்போதும் இருக்கும் முதல் உமிழ்நீர்ப்பரிமாற்றத்து இனியசுவையின் நினைவுபோல மென்சிறகாய் காதலைக் காண்பிக்கும் நாவல்.

-

< பின் ⌂ முகப்பு