கரிச்சான் குஞ்சின் பசித்த மானிடம் - நாவல் குறிப்பு

ஆகஸ்ட் 14, 2025 கரிச்சான் குஞ்சு வாசிப்பு

எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு எழுதிய “பசித்த மானிடம்” நாவல் பற்றிய ஒரு குறிப்பு:

ஒரு கதை எழுதப்படும்போது அதில் காலம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது மிக முக்கியமானது. உலகில் ஒரு நிமிடத்தில் நடக்கும் சம்பவங்களைப் பல பக்கங்களில் ஒரு மணிநேர வாசிப்பாக எழுதலாம். அதேசமயம், ஓர் ஆண்டை ஒரே வரியிலும் கடந்து செல்லலாம். எழுத்தாளர் எந்தச் சம்பவங்களுக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகும்.

இந்த நாவலில், கணேசன் என்கிற பையன் ஆறாம் வகுப்புக்குப் (ஃபார்ம்-1) புதிதாகச் சேர்ந்தவுடன், சில மாதங்களிலேயே அவனுக்கு சிங்க ராவுத் என்கிற நாற்பது வயதைக் கடந்த ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்படுகிறது. அவர் அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று உடலுறவுக்காகத் தன்னோடிருக்க வைத்துக்கொள்கிறார். கணேசன் அதற்கு இல்லை (No) என்று சொல்லாததானால், எதுவுமே சொல்லாமல் இருந்ததனால், கணேசனுக்கும் அதில் விருப்பம் இருப்பதாகக் கருதி, தொடர்ந்து பத்து ஆண்டுகள் அவருடன் அவன் இருந்ததாக கதை செல்கிறது. அதாவது சிங்க ராவுத் sugar daddy (சீனியப்பன்) ஆக இருக்கிறார். இந்த முக்கியமான காலகட்டத்தைக் கரிச்சான் குஞ்சு சில வரிகளில் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால், கணேசனின் எதிர்காலத்தையும் அவனது முதிர்ச்சியையும் மாற்றியமைக்கும் ஒரு காலகட்டமாக இது எனக்குத் தோன்றுகிறது.

மேல்நிலைப்பள்ளியின் (high school) போது, பொதுவாக மாணவர்களுக்குப் பதினொரு வயதிருக்கும். அவன் இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்டதால், அவனுக்குப் பதிமூன்று அல்லது பதினான்கு வயதுதான் இருக்கும். இந்த வயதில் அவன் இன்னும் முதிர்ச்சியடையாதச் சிறுவன். அதைப் பற்றி ஆசிரியர் சிறிதும் பேசவில்லை. கணேசனின் மன ஓட்டங்களையும் கோடிட்டுக் காட்டவில்லை. வாசகர் நிரப்பிக்கொள்ள எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. நிச்சயமாக அவன் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பான். கணேசனுக்குப் பதிலாக அந்த இடத்தில் ஒரு சிறுமி இருந்திருந்தால், வாசகர்களாகிய நாம் ஒரு வயதான ஆணோ பெண்ணோ அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று வைத்துள்ளார் என்றே விவாதித்திருப்போம். ஆனால், பதினெட்டு வயதுகூட நிரம்பாத, ஏன், பதினாறு வயதுகூட நிரம்பாத ஒரு பையன் என்று வரும்போது நாம் அதைக் கடந்துபோய்விடுகிறோம். இந்த நாவலில், கணேசனின் வயதை விட உடல் வளர்ந்திருக்கிறது என்று ஆசிரியரும், கதாபாத்திரங்களும் தொடர்ந்து குறிப்பிடுகிறார்கள். ஆனால், உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் வெவ்வேறானவை என்று நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பசித்த மானிடம் நாவலுக்கு ‘பிறழ்வெழுத்து’ என்ற முத்திரை குத்திவிட்டார்கள். முதலில், ‘பிறழ்வெழுத்து’ என்ற தமிழ்ச் சொல்லே ஒரு எதிர்மறைத்தன்மையைக் கொடுக்கிறது. Transgressive என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் ‘கடந்துசெல்லுதல், தாண்டிச் செல்லுதல்’ என்றுதான் பொருள். ஆகையால் ‘மீறல் எழுத்து’ என்பதே பொருத்தமானச் சொல். தமிழ் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் ‘பிறழ்வெழுத்து’ என்ற சொல்லைத் தவறாகத் தொடர்ந்து பயன்படுத்தி, அதற்கு ஓர் இருள் தன்மையை வழங்கிவிட்டார்கள்.

இரண்டாவதாக, தன்பாலுறவு இந்த நாவலில் காட்டப்பட்டிருப்பதாலேயே இது ‘பிறழ்வு’ என்று கட்டமைத்திருக்கிறார்கள். இந்தியச் சட்டம் தன்பாலுறவுத் திருமணத்தை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதால்தான் அதைப் ‘பிறழ்வு’ என்கிறார்களா? நாளை இந்தியாவில் திருமணச் சமநிலை ஏற்பட்டால், ‘பிறழ்வு’ என்ற பெட்டியிலிருந்து இந்த நாவலைத் தூக்கி விடுவார்களா? இலக்கியப் படைப்பு ஒரு நாட்டின் சட்ட விதிகளால் வகுக்கப்படுகிறதா என்ன? அவ்வாறென்றால், அது பெரும் துயரமே. திருமணம் கடந்த உறவு வருவதால் இதைப் ‘பிறழ்வெழுத்து’ என்று சொல்கிறார்கள் என்றால், தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவல் அவ்வாறு வகைப்படுத்தப்படாதது ஏன் என்று எளிதாகக் கேட்கலாம்.

-

< பின் ⌂ முகப்பு