நண்பர் ஒருவர் குழுமம் ஒன்றில் எழுதிய கட்டுரைக்குப் பின் எழுதியது:
எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுதிய “அக்கினிப் பிரவேசம்” நாவல் பற்றிய ஒரு குறிப்பு: இந்தச் சிறுகதையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் என் நினைவில் எழும் சில குறிப்புகளை எழுதியுள்ளேன். இது சிறுகதையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது, நாவல்களை அல்ல.
மனதளவில் முதிர்ச்சியடைவதற்கு முன், வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், பாலின பேதமின்றி எல்லோருமே இந்தச் சிறுகதையில் வரும் கங்காவைப் போல் இருந்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை ஆண்களுக்கு, பெண்களை விடச் சற்று முன்னதாகவே மனமுதிர்ச்சி நிலை ஏற்படலாம்.
மழையில் அந்த இளைஞன் தன்னைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிடுவான் என்று கங்கா நம்புகிறாள். அவள் மனிதர்களின் நற்குணத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறாள். வேறுவிதமாகக் கூறினால், மனிதர்கள் கெட்டவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
அவன் முன்னால் “நன்றாக” நடந்துகொள்ள வேண்டும் என்று கங்கா விரும்புகிறாள். அவள் எதைப் பற்றியும் புகார் கூறவில்லை.
அவன் அவளுடைய வீட்டிற்குச் செல்லும் பாதையை விடுத்து வேறு பாதையில் செல்லும் போதுகூட அவள் குறை கூறவில்லை.
“என்னடி இது வம்பாப் போச்சு” என்று அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்ட போதிலும், அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள்.
அப்படித்தான் அவள் வளர்க்கப்பட்டிருக்கிறாள். யாரையும் “காயப்படுத்தக் கூடாது”. தனக்கு உதவி செய்பவரை (இங்கே, அவளை வீட்டில் விடும் அவனை) காயப்படுத்தக் கூடாது.
அவள் அந்த இளைஞனால் ஈர்க்கப்படுகிறாள். அவன் அநேகமாக அவளது சுற்றுப்புறங்களில் உள்ள வழக்கமான ஆண்களை விட முற்றிலும் மாறுபட்டவனாக இருக்கிறான். ஜெயகாந்தன் பட்டியலிடுவது போல, அவள் அவனை ஒவ்வொரு அங்கமாகப் பார்க்கிறாள்.
அவன் அழகாகத்தான் இருக்கிறான்.
உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, ‘ஒட்டு உசரமாய்’.
குறுகத் தரித்த கிராப்புச் சிகையும் காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும்
புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன.
அவனது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது
அதே நேரத்தில் அவளது ஆழ்மனம் அந்த அபாயத்தையும் உணர்கிறது.
ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது
அவன் அவளுக்குச் சூயிங்கம் கொடுக்கிறான். அவள் தெளிவாக ‘வேண்டாம்’ என்கிறாள். அவன் அதை வலுக்கட்டாயமாக அவள் வாயில் திணிக்கிறான்.
“நோ!” - அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின்மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான்
இங்கே வற்புறுத்தப்பட்ட சம்மதம்கூட இல்லை. உண்மையில், சம்மதத்திற்குத் தெளிவான மறுப்பு இருக்கிறது.
அவன் அவளைத் தொடுகிறான். மீண்டும், சம்மதத்திற்கான மறுப்பாக “ப்ளீஸ் ப்ளீஸ்” என்ற கதறல் இருக்கிறது.
திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டதைப் போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, “ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி…
இறுதியாக, அந்தச் சூயிங்கம். ஒருவேளை அந்த இளைஞன் அவளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி வன்புணர்வு செய்வதற்குப் பதிலாக அவள் முகத்தில் குத்தியிருந்தாலும், அப்போதும் கூட அவள் வாயில் அந்தச் சூயிங்கம் இருந்திருக்கக்கூடும். அது இன்னமும் தன் வாயில்தான் இருக்கிறது என்பதைக்கூட அவள் அறியவில்லை, உணரவுமில்லை. அந்த நேரத்தில் அவள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒரு பெரும் அதிர்ச்சியில் இருக்கிறாள். அவள் முற்றிலுமாக நிலைகுலைந்து போயிருக்கிறாள். அதனால் அவள் அந்தச் சூயிங்கத்தைத் துப்ப மறந்தது இயற்கையானதே. சூயிங்கம் வாயில் வைத்திருப்பது அவள் விருப்பத்தாலோ ஆழ்மன மையலாலோ அல்ல.
~
எழுத்தாளர் பெருந்தேவி அக்கினிப் பிரவேசம் பற்றி தன் உடல் பால் பொருள் தொகுப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். https://perundevi.com/?mbdb_book=உடல்-பால்-பொருள்