மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய வுவகையர் சாரற்
புனத்தினை யயிலு நாட சினப்போர்க்
கைவள் ளீகைக் கடுமான் பேக
யார்கொ லளிய டானே நெருநற்
சுரனுழந்து வருந்திய வொக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசி னிரங்கு மருவி
நளியிருஞ் சிலம்பிற் சீறூ ராங்கண்
வாயிற் றோன்றி வாழ்த்தி நின்று
நின்னுநின் மலையும் பாடா வின்னா
திகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையக நனைப்ப விம்மிக்
குழலினை வதுபோ லழுதனள் பெரிதே
கபிலன் எழுதிய புறநானூறு (143) பாடல்.
Poem by Kapilan in Purananooru collection (no. 143)
மலையை வான்மழை கொள்க என உயர்ந்த பலியைத் தந்து மழை போதுமென பெய்தபின் மேகம் மேலே செல்க எனக் கடவுளைப் போற்றிய குறவர் மக்கள் மழைநின்றபின் மகிழ்ந்து மலைச்சாரலின் புலத்திலுள்ள தினையை உண்பர் அம்மக்கள் வாழும் நாடனே சினத்தோடு போர் செய்யும் கைவண்மையால் கொடை அளிக்கும் விரைவான குதிரையை உடைய பேகனே யாரோ இவள் இரங்கத்தக்கவள் காக்கப்படவேண்டியவள் நேற்று துன்பப்பட்டு காடு கடந்து வந்த சுற்றத்தினர் பசித்ததினால் குறிந்தடியால் அடிக்கப்பட்ட முரசைப்போல ஒலிக்கும் அருவி இருக்கும் அகலமான பெரிய மலையில் உள்ள சிற்றூரின் வாசலுக்கு வந்து உன்னையும் உன் மலையையும் வாழ்த்தி நின்று பாடும்பொழுது விம்மிக்கொண்டு துன்பத்தோடு உதிர்த்த கண்ணீரை நிறுத்த முடியாமல் முலைகள் நனைய குழலிசை வருந்துவதுபோல அழுதாள் பெரிதாக |
The land whose mountain folk offer high sacrifice, praying for rain to bless their slopes, and then for the clouds to ascend once more. The people who then feast with joy on the millet from their terraced fields. You are lord of that land, O Pegan, of the swift stallion, fierce in war, and of the liberal, giving hand Who is she, this pitiable woman? Yesterday, my kin, tormented by hunger, crossed the harsh wilderness. They reached this small village on your great mountain, where the waterfall roars like a war drum struck by a heavy stick. Standing at the gate, they began to sing, praising you and your magnificent hill. She, overcome, could not stop the tears of sorrow that streamed down, soaking her breast. She wept with great, shuddering sobs, her cries like the mournful wail of a flute. |
கபிலன் காண்பது ஒரே ஒரு காட்சி. அவனும் அவன் சுற்றத்தாரும் காடு கடந்து பசியால் வாடி, பேகனின் நாட்டுக்கு வந்து அவன் வாசலில் பாடும்போது, வேறொரு பெண் அவ்வாசலின் முன் நின்று அழுகிறாள். எதற்காகவோ துன்பப்பட்டு உதிர்க்கும் கண்ணீர், நில்லாமல் அவள் முலையில் வழிந்து ஓடுகிறது. ஆனால், அது ஏன் என்று கபிலன் இப்பாடலில் சொல்லவில்லை.
யாரை நோக்கி அழுகிறாள்? மலைநாட்டை ஆண்டுகொண்டிருக்கும் பேகன். எல்லா வல்லமையும் கொண்டவன். வளங்கள் நிறைந்த மலையைக் கொண்டிருப்பவன். அதனால் வரும் செல்வங்களைப் பிறருக்குத் தரும் வள்ளல். போரில் வேகமாகச் செல்லும் குதிரையை வைத்திருப்பவன். இத்தகைய அரசனை, நாடனை நோக்கி அழுகிறாள்.
நியாயம் கேட்கிறாளா? எதற்காக?
மலையில் உள்ள குறவர் மக்கள் வேண்டினால் மழை வரும்.
போதும் என்று நினைத்து மறுபடியும் வேண்டினால் மழை நிற்கும்.
ஆனால், இந்தப் பெண்ணுடைய குழல் வழியும் துயரிசை அழுகை மட்டும் நிற்கவில்லை.