அ. முத்துலிங்கம் - சிறுகதைகள் வாசிப்பு

மாதம் ஒருமுறை கூடும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் - வளைகுடா குழுமத்தில் தமிழிலக்கியத்தின் சிறந்த சிறுகதையாளர்கள் வரிசையில், இந்த முறை எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் மூன்று சிறுகதைகளை (ரி, கொழுத்தாடு பிடிப்பேன், கறுப்பு அணில்) விவாதித்தோம். (கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் vishnupurambayarea@gmail.com முகவரியை தொடர்புகொள்ளலாம்.) நான் மேலும் மூன்று சிறுகதைகளையும் (ராகு காலம், பூமாதேவி, மஹாராஜாவின் ரயில் வண்டி) வாசித்தேன், அவரின் சிறுகதை தொகுப்புகளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

அ. முத்துலிங்கத்தின் எழுத்துலகம், புவியியல் எல்லைகளைக் கடந்து விரியும் ஒரு பரந்த களம். ஈழத்தில் வேர்கொண்டு, ஆப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா எனப் பல கண்டங்களில் கிளைபரப்பும் அவரது கதைகள், புலம்பெயர் வாழ்வின் நுட்பமான அடுக்குகளைத் தொட்டுச் செல்பவை. அவரது சிறுகதைகள் வெறும் நிலவியல் இடப்பெயர்வுகளை மட்டும் பேசுவதில்லை; அவை பண்பாட்டு மோதல்களையும் தலைமுறை இடைவெளிகளையும் மனித மனத்தின் மாறாத தேடல்களையும் ஆழமாகப் பதிவு செய்கின்றன.

“ரி” சிறுகதையில் இந்தியத் தத்துவத்தின் சுழற்சித் தன்மை கூற்றை விரித்து வாசிக்கலாம். “கறுப்பு அணில்” மற்றும் “கொழுத்தாடு பிடிப்பேன்” ஆகியவற்றில் புலம்பெயர்ந்தோரின் இருப்பிற்கான போராட்டத்தையும் அடையாளச் சிக்கல்களையும் கூர்ந்து கவனிக்கலாம். “ராகு காலம்”, “பூமாதேவி” ஆகிய கதைகளில் பண்பாட்டுத் தழுவல்களையும் தலைமுறை முறிவுகளையும் அவர் மெல்லிய அங்கதத்துடனும், கூர்மையான அவதானிப்புகளுடனும் முன்வைக்கிறார். துயரத்தின் விளிம்பிலும் புஞ்சிரிப்பை வரவழைக்கும் அவரது எழுத்து நடை, வாசகரை உலகெங்கும் அழைத்துச் சென்று, இறுதியில் தன் சொந்த அகத்தை நோக்கியே திரும்பச்செய்கிறது.

“மஹாராஜாவின் ரயில் வண்டி” சிறுகதையில் நினைவுகள் புலன்களோடு பின்னிப்பிணைந்திருக்கும் அற்புதத்தை வாசிக்கும்போது, யாருமில்லா பேருந்தின் சன்னல் இருக்கையில் அமர்ந்து மழைத்தூரலை ரசிக்கும் உணர்வு ஏற்படுகிறது. வாசித்து முடித்த நாளின் ஓர் இனிய தருணத்தில் அது ஒரு குறுந்தொகைப் பாடலையும் எனக்கு நினைவூட்டியது.


ரி

இந்திய தத்துவத்திலுள்ள மையக் கூறுகளில் ஒன்று, இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சித் தன்மை. அதாவது, ஒருவர் உண்மையில் இறப்பதில்லை, மாறாக மற்றொரு வாழ்க்கையில், மற்றொரு வடிவத்தில் மீண்டும் வருகிறார் என்ற நம்பிக்கை. இந்தக் கூற்று, இந்தியச் செவ்வியல் இசையிலும் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் நேர்கோட்டு அமைப்பில் அல்ல, மாறாகச் சுழற்சி அமைப்பிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அது பல்லவி (தொடக்க வரி), அனுபல்லவி (மாறுபட்ட தொடர்ச்சி), மற்றும் சரணங்கள் (விரிவாக்கங்கள்) ஆகியவற்றைக் கொண்டது. ஒவ்வொரு சரணமும் பாடி முடிந்ததும், பாடகர் மீண்டும் பல்லவிக்கே திரும்புவார். இது ஒரு தொடர்ச்சியான வளையத்தை உருவாக்குகிறது. ஒரு ராகம் (ஒரு குறிப்பிட்ட இசைத் தன்மை வெளிப்பாடு) என்பது அதன் ஆரோகணம் (ஏறும் வரிசை) மற்றும் அவரோகணம் (இறங்கும் வரிசை) ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது. இது வெறும் சுவரங்களின் நேர்கோட்டு வரிசை அல்லாமல், “படிகளின் மீது ஏறிச் செல்வது” போல, அடிப்படை சுவரமான ‘ச’ விலிருந்து அடுத்த ‘ச’ விற்குச் சென்று, பின் மீண்டும் “கீழே இறங்கி வருவது”, என ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது. ஒருவர் தன் வீட்டை விட்டுப் புறப்பட்டு, ஒரு பயணத்தை மேற்கொண்டு, மீண்டும் வீடு திரும்புதலின் தத்துவ எதிரொலியாகும். இந்த “வீடு” என்பதைப் பிரபஞ்சமாகவே காணலாம்; இந்தப் பயணம், பிரபஞ்சத்தின் எப்போதுமுள்ள, சுழற்சித்தன்மையை உள்ளடக்கியதாகிறது.

அ. முத்துலிங்கத்தின் “ரி” சிறுகதை பல அடுக்குகளில் இயங்குகிறது. இளமைக்கால காதலின் புதிய உணர்ச்சிப்பிடிப்பை, விலங்குகள் மீதான ஆழ்ந்த அன்பெனவும், இசையின் நுட்பமான அழகெனவும் தெய்வீக உணர்வெனவும் விரிக்கிறது.

பத்து வயதான ஒரு சிறுவன் இக்கதையைச் சொல்கிறான். அவன் தன் பகுதியில் புதிதாக குடிவந்திருக்கும் வத்ஸலா என்ற ஏழைச் சிறுமியிடம் மனத்தைப் பறிகொடுக்கிறான். அவளது அன்பைப் பெறுவதற்காக, அவளுடைய வயதான, மெலிந்துபோன காளையான “ராமு”வைப் பராமரிக்க அவன் உதவுகிறான். பின்னர், அந்தக் காளை இறைச்சிக்காக விற்கப்படவிருக்கிறது என்கிற கொடூரமான உண்மையை தன் தாயிடமிருந்து அறிகிறான். இந்த உண்மையை வத்ஸலாவிடம் சொல்ல அவனுக்குத் துணிவில்லை. வத்ஸலாவின் தந்தை காளையை தன் மகளிடம் கூறாமல் ரகசியமாக விற்கிறார். அது வெறுமனே மேய்ச்சலுக்காக (“எருக்கு கட்ட”) அனுப்பப்பட்டதாக அவள் தவறாக நம்புகிறாள். அது திரும்ப வரும் என ஒவ்வொரு நாளும் வாசலில் காத்திருக்கிறாள். இந்தத் தனிப்பட்ட சோகம் நிகழும் அதே வேளையில், கதைசொல்லும் சிறுவன் தன் மாமாவிடமிருந்து “மார்க ஹிந்தோளம்” என்ற ராகத்தைப் பற்றியும் அறிகிறான். அந்த ராகத்தின் ஆரோகணத்தில் (ஏறும் வரிசை) ‘ரி’ என்ற சுவரம் இருந்தாலும், அதன் அவரோகணத்தில் (இறங்கும் வரிசை) அந்த சுவரம் நீக்கப்பட்டுள்ளது என்று அவனுக்குச் சொல்லப்படுகிறது. வத்ஸலா தன் ராமுவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும்போது, அந்த ராகத்தைக் கேட்கும் சிறுவன், இசைக் கோட்பாட்டையும் தன் வாழ்க்கையையும் இணைத்துப் புரிந்துகொள்கிறான். ‘ரி’ - அதாவது ரிஷபம், அந்தக் காளை - இனி திரும்பி வராது என்பதை அவன் உணரும் தருணத்தில் கதை உச்சம் கொள்கிறது. “சலமேலரா சாஹேத ராமா, சலமேலரா” என்று தியாகராஜர் ராமரைப் பற்றி பாடியதை மாமா பாடுகிறார். “ராமா, ஏன் இந்த உதாசீனம்?”

ஆனால் இது உண்மையிலேயே அந்த சுழற்சித் தத்துவத்தை உடைக்கிறதா? என் கருத்தில், கதையின் முக்கிய மையம் வேறொரு இடத்தில், சிறுவனுக்கும் அவனது தாய்க்கும் இடையிலான உரையாடலில் உள்ளது. அந்த உரையாடல் வேறு வகையான ஒரு சுழற்சியைச் சுட்டிக்காட்டுகிறது. காளை, மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பங்கேற்கிறது என்று அவனது தாய் விளக்குகிறார். மனிதர்கள் தாங்கள் உண்பதன் ஒரு பகுதியிலிருந்தே காளைக்கு உணவளிக்கிறார்கள், கழனித் தண்ணியாகவும் தவிடாகவும் புண்ணாக்காகவும். கடைசியாக அந்தக் காளை எருக்கு விடுதல் என வயலுக்கு அனுப்பப்படுகிறது, அது நமது உணவை வளர்க்கும் நிலத்தை உரமாக்கி, நமக்கு நெல்லைத் தருகிறது. காளை இறந்த பிறகும் கூட, அதன் தோல் காலணிகளாகப் பயன்படுத்தப்படும். ஆக, காளை தொலைந்து போகவில்லை. ‘ரி’ என்ற சுவரம், அந்த ரிஷபம், மறையவில்லை. அது வெறுமனே பல்வேறு வடிவங்களில் மீண்டும் திரும்பி வருகிறது.


கொழுத்தாடு பிடிப்பேன்

கடித வடிவில் அமைந்த இச்சிறுகதை, கிங்ஸ்டன் சிறையில் இருக்கும் சண்முகலிங்கம் கணேசரட்னம், கனடாவின் குடிவரவு அதிகாரிக்கு எழுதும் ஒரு கோரிக்கை மனு. கதையின் மைய முரண், கனடாவின் குடியுரிமைச் சத்தியப் பிரமாணத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் அதே சண்முகலிங்கம்தான், தன்னை எப்படியாவது பத்தாயிரம் மைல் தொலைவிலுள்ள தன் சொந்த கிராமத்திற்கே “திருப்பி அனுப்பும்படி” கெஞ்சுகிறார். இந்த விசித்திரமான முரணுக்கான காரணத்தை அலசுவதே கதையின் களமாகிறது.

இந்தக் குழப்பத்திற்கு இரண்டு சாத்தியமான விளக்கங்களை கதை முன்வைக்கிறது. ஒருபுறம், அகதியாக வந்த தன்னை, தன் மனைவியின் தங்கை, மைத்துனி விஜயாவின் குடும்பமே தனது ஆறாயிரம் டாலர் சீட்டுப் பணத்திற்காக சதி செய்து சிறையில் தள்ளிவிட்டதாக சண்முகலிங்கம் வாதிடுகிறார். இந்தப் பார்வையில், அவர் ஒரு அப்பாவி. மேலும், தன் மனைவி தான் இல்லாமலேயே ஐந்தாவது குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்ற செய்தியால் மனமுடைந்து, எல்லாவற்றையும் துறந்து ஊர் திரும்ப விரும்பும் ஒரு துயரமிக்க மனிதர். விஜயாவின் குடும்பம் சண்முகலிங்கத்தைக் கொழுக்க வைத்து பலி கொடுக்கும் ஆடாக திட்டம்போட்டு அழிப்பதாக வாசிக்கலாம்.

மறுபுறம், தன் மைத்துனி விஜயா மீது தனக்கிருந்த ஈர்ப்பையும், அவர்கள் மகள் பத்மலோசனியுடன் விளையாடிய “கொழுத்தாடு பிடிப்பேன்” விளையாட்டையும் அவர் விவரிக்கும் தொனி, சந்தேகத்தை எழுப்புகிறது. கடைசியில், அந்தப் பிள்ளையை “கொழுத்தப் பிள்ளை” என்று அவர் குறிப்பிடுவதும், அது விளையாட்டின் தலைப்புடன் ஒத்துப்போவதும், அவர் அந்த விளையாட்டை ஒரு காம விளையாட்டாக அணுகியிருக்கலாமோ என்ற ஊகத்தைத் தோற்றுவிக்கிறது.

கதையின் வடிவமே அதன் மிகப்பெரிய பலம். இது சண்முகலிங்கத்தின் ஒருபக்க வாக்குமூலம் மட்டுமே. இதில் எது “உண்மை” என்று வாசகரால் ஒருபோதும் அறிய முடியாது. நாம்தான் அந்த அதிகாரி; நாம்தான் தீர்ப்பெழுத வேண்டும். குறிப்பாக, கடிதத்தின் இறுதியில், “இந்தக் கொழுத்த பிள்ளையின் வயது பத்து என்பது எனக்கு தெரியவே தெரியாது” என்று அவர் குறிப்பிடும்போது, அதுவரை கட்டமைக்கப்பட்ட அத்தனை அனுதாபங்களும் நொறுங்கிவிடுகின்றன.

ஆனால், இந்தக் குற்றமா-அப்பாவித்தனமா என்ற இருமைக்கு அப்பால், கதை ஆழமான ஒரு பண்பாட்டுச் சிக்கலைப் பேசுகிறது. ஒரு பண்பாட்டிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும்போது, பழைய பண்பாட்டுக் கூறுகளைப் புதிய சூழலில் எப்படிப் புரியவைப்பது? அவை எவ்வாறு தவறாகப் பொருள்படுத்தப்படுகின்றன?

இக்கதையின் மையப் படிமமே “கொழுத்தாடு பிடிப்பேன்” என்ற அந்த விளையாட்டுதான். அது தோன்றிய நிலத்தில் ஒரு பொருளைத் தந்திருக்கலாம். ஆனால் புலம் பெயர்ந்த ஒரு நாட்டில், ஒரு புதிய சூழலில், அது முற்றிலும் வேறொன்றாக, ஒரு குற்றச் செயலாகப் பொருள்படலாம். (கொழுத்தாடு பிடிப்பேன் என்பதற்கு மாற்றாக மஞ்சள் தண்ணி ஊற்றி விளையாடுதல் என்று போட்டுப் பார்க்கலாம்.) இந்தப் “பொருள்படும் சிக்கலை” (problem of interpretation) கதை நெடுகிலும் காண்கிறோம். ஆப்பிரிக்க சிறைவாசி, “சிவப்பு மாட்டுக்கு ஒரு சொல், கறுப்பு மாட்டுக்கு இன்னொரு சொல்” எனக் கூறுவதிலும், புத்த பிக்குகள் அணியும் காவி அங்கி, கனடாவில் கைதிகளின் உடையின் நிறமாக இருப்பதிலும் இதே பண்பாட்டு இடப்பெயர்ச்சிச் சிக்கல்தான் வெளிப்படுகிறது.

இறுதியாக நம்மை யோசிக்க வைப்பது, சண்முகலிங்கம் கனடா பிரமாணத்தை மனப்பாடம் செய்ததுபோல, புதிய பண்பாட்டுக் கூறுகளை நம்மால் மனப்பாடம் மட்டுமே செய்ய முடியுமா? அவற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ளாமல், வெறும் விதிகளை மட்டும் பின்பற்றுவது பண்பாடாகுமா?


கறுப்பு அணில்

இந்தச் சிறுகதை, ஆழமான கறுப்பு நகைச்சுவை நிறைந்த, மிகவும் தீவிரமான ஒரு கதை. கதையின் தலைப்பே அதன் மையப் படிமம். மற்ற அணில்களைப் போல் அல்லாமல் கறுப்பு நிறம் கொண்ட ஓர் அணில், வெண் பனிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது. பனியின் பரந்துபட்ட அளவை அதனால் தாங்க முடியவில்லை. அதனால், அது பனியின் வெண்மையால் தன்னை மூடிக்கொள்ள விரும்பியோ என்னவோ, அதற்குள் தன்னையே மூழ்கடிக்க முயல்கிறது. ஆனால் இறுதியில், அந்த முடிவு எங்கும் கொண்டு செல்லாது என்பதையுணர்ந்து, அது பனியில் சறுக்கி விளையாடி மகிழ்கிறது.

கதையின் நாயகனான லோகிதாசன், ஒரு குளிர்ச்சியான மேற்கத்திய நாட்டில் கொடும் வறுமையிலும், யாருடைய கண்ணுக்கும் புலப்படாமலும் வாழும் ஒரு துப்புரவுத் தொழிலாளி. அவனது மேலாளர் லோரா, அவனை ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை. லோகிதாசன் அவளது தோற்றத்தை வெறித்துப் பதிவு செய்துகொண்டிருந்தாலும், அவள் ஒருமுறை கூட அவன் முகத்தைப் பார்ப்பதில்லை. அவன் எலிகள் நிறைந்த, குளிரான அடித்தள அறையில், காலி குளிர்சாதனப் பெட்டியுடன் வாழ்கிறான். நோய்வாய்ப்பட்ட தாயிடமிருந்து வந்த கடிதத்தைப் பிரிக்கவும் பயப்படுகிறான்.

அவன் ஆடம்பரமான வீடுகளைச் சுத்தம் செய்யும்போது, செல்வச் செழிப்பான கற்பனை உலகில் தஞ்சம் புகுவான். அவன் கற்பனையில் செல்வ வாழ்க்கை என்பது வெள்ளை சோபாவில் அமர்ந்து, ஜன்னலுக்கு வெண்திரைச்சீலை அமைத்து, தொலைக்காட்சியில் சானல்-55 பார்ப்பது.

மேலும், தன் பணக்கார சீன அண்டை வீட்டுப் பெண் மீது ஒரு அமைதியான ஆவலை வளர்த்துக்கொள்கிறான். அவள் அவன் முகம் பார்த்து ஒரு ஹாய் கூட சொல்வதில்லை என்று எரிச்சல் கொள்கிறான். அவள் தன்னைக் கவனிக்கமாட்டாளா என்ற ஏக்கத்தில், தாய்க்கு அனுப்ப வைத்திருந்த பணத்தைக்கூட ஒரு புதிய கோட் வாங்கச் செலவழிக்கிறான். மிகுந்த பனியில், ஓவர்கோட் மூலம் தன் உடல் முழுவதும், முகம் பெரும்பாலும் மறைத்து நடக்கும் போது, அவன் கண்ணும் மூக்கும் வாயும் மட்டுமே தெரியும்போது, அவள் அவனைத் திரும்பிப் பாராமலேயே ஒரு ‘ஹாய்’ சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறாள். அது கூட, அவள் தன் நாயிடம் பேசிச் சென்றாளா அல்லது தன்னிடம் ஹாய் சொன்னாளா என்கிற சந்தேகம் முளைக்கிறது.

அவனுடைய ஒரு அந்தரங்கப் பழக்கம், கார் நிறுத்துமிடத்தில் ஓட்டுநர்கள் தவறவிடும் சில்லறைக் காசுகளைப் பொறுக்கி, ஒரு போத்தலில் சேகரிப்பதுதான்.

இக்கதை புலம்பெயர்ந்தோர் அனுபவத்தின் தனித்திருத்தலின் அடக்க முடியா வேதனையை, அவர்களுக்குள் இருக்கும் வர்க்கப் பிரிவுகளைக் கூர்மையான விமரிசனத்தை முன்வைக்கிறது. கூர்மை என்று சொல்வது முகத்தில் அறைந்து சொல்வதாகவல்லாமல் இயல்பான விவரிப்பில் எழுந்து வரும் கூர்மையாக உறைகிறது.

லோகிதாசன் பணக்கார வர்க்கத்தினருக்கு (தனது சீன அண்டை வீட்டுப் பெண் போல) மட்டும் புலப்படாதவனாக இல்லை, மாறாகத் தனது மேலாளர் லோராவால் இழிவுபடுத்தவும் படுகிறான். லோராவின் பூர்வீகம் மெக்சிகோவாக இருக்கலாம் என அவனது சக ஊழியன் டேனியல் குறிப்பிடுகிறான். அவள் அதிகார வர்க்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டவள். லோரா, லோகிதாசனின் ஆவணங்களைக் கையில் தராமல் மேசையிலிருந்து தள்ளிவிடுவது போன்ற செயல்கள் மூலம், மேல்தட்டு வர்க்கத்தினரைப் போலவே அவமதிப்புடன் அவனை நடத்துகிறார்.

கதையில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம், பனி எங்கும் நிறைந்திருக்கிறது என்பதுவே. வெள்ளை நிறத்துடையோர் எங்கும் இருக்கிறார்கள் - ஒன்று அவர்களே இருக்கிறார்கள், அல்லது மற்றவர்கள் அவர்களைப் போல நகலெடுத்து வலம் வருகிறார்கள். அவனிடம் ஒட்டுணர்வைக் காட்டும் ஒரே நபர், கயானாவிலிருந்து வந்த சக புலம்பெயர்ந்த தொழிலாளியான கறுப்பு மனிதரான டேனியல் மட்டுமே. அவரும் லோகிதாசனைப் போலவே குறைந்த அந்தஸ்திலும், ஆபத்தான வாழ்விலும் இருக்கிறார்.

இறுதியாக, பனிப்புயலில் சிக்கியிருக்கும் அவன், அந்த கறுப்பு அணிலின் அபத்தமான போராட்டத்தைக் காண்கிறான். ஒரு கார் வாங்க 83 ஆண்டுகள் ஆகும் என்பதை உணர்ந்து தன் பயனற்ற சேமிப்புப் பாதையை எண்ணி தன்னைத் தானே கண்டு சிரித்துக்கொள்கிறான். அந்த அபத்தமான யதார்த்தத்தையே ஒரு “விசேட தினமாகக்” கருதி, தான் சேமித்து வைத்திருந்த ஒற்றைப் பீரைக் குடித்துக் கொண்டாடுகிறான்.

எவ்வளவு தனிமைப்பட்டும், எவ்வளவு இகழப்பட்டும், எவ்வளவு அழுதும், எவ்வளவு துன்பப்பட்டும், கடைசியாக நம்மிடம் உள்ளது இந்தத் தருணம் மட்டுமே. அதை ஒரு தேன்துளிபோல் நம் நாக்கிலிட்டு இனிமையைக் கொண்டாடுவது மட்டுமே நாம் செய்யக்கூடியது.


ராகு காலம்

இந்தியச் சூழலில், சடங்குகள் சம்பிரதாயங்களின் பரவலும் தழுவலும் பெரும்பாலும் சமூகப் படிநிலையின் அனைத்து மட்டங்களிலும் நிகழ்கின்றன. வரலாற்று ரீதியாக, கொலு போன்ற சில உயர் சாதியினரின் பழக்கவழக்கங்கள் சமூக அமைப்பில் ஊடுருவிப் பரவ முயல்கின்றன. இதை அதிகார இயக்கவியலுடனும் இணைத்துப் பார்க்கலாம்; உதாரணமாக, நாயக்கர்கள் தமிழகத்தை ஆண்ட காலத்தில்தான் இதே கொலு முறை பிரபலப்படுத்தப்பட்டது. அண்மைக் காலங்களில், மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின், சக்திவாய்ந்த பரப்பியல் பண்பாடு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் ஹாலோவீன் போன்ற விழாக்களை மிகவும் பிரபலமாக்கியுள்ளது.

அ. முத்துலிங்கத்தின் “ராகு காலம்” சிறுகதை, ஒருவர் புதிய கலாச்சாரத்தை உள்வாங்குவதில் உள்ள ஒரு கூர்மையான, சோகமான முரண்நகையை முன்வைக்கிறது. நைரோபியைப் பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், மரியோ ங்கோமா என்ற ஆப்பிரிக்க ஓட்டுநர், தனது புதிய தமிழ் முதலாளியின் பழக்கவழக்கங்களால் ஆழமாக ஈர்க்கப்படுகிறார். இதில் ஒரு மிக முக்கியமான அம்சம், இந்தக் குடும்பம் தமிழ்நாட்டையோ இலங்கையையோ பூர்வீகமாகக் கொண்டதல்ல. மாறாக, இது மொரிஷியஸைச் சேர்ந்த ஒரு புலம்பெயர் தமிழ்க் குடும்பம். இந்தப் பின்னணி, “இப்படிப் புலம்பெயர்ந்து, ஒரு மூன்றாம் வெளியில் வாழும் பண்பாட்டில், எந்தச் சடங்குகள் தக்கவைக்கப்படுகின்றன? எவை கைவிடப்படுகின்றன? எவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?” என்ற போன்ற கேள்விகளை உடனடியாக எழுப்புகிறது.

கதையின் மைய முரண்நிலை இரண்டு அடுக்குகளாக விரிகிறது.

அந்தக் குடும்பத்தின் சொந்த மகளே, பெற்றோருக்குத் தெரியாமல் மாமிசம் உண்பதன் மூலம் தன் பாரம்பரியத்தை ரகசியமாக நிராகரித்துக் கொண்டிருக்கையில், ஓர் அந்நியரான மரியோவோ, அதை மிகுந்த ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்கிறார். பக்தியுள்ள முதலாளியின் மனைவி மீது அவர் ஆழ்ந்த மரியாதை கொள்கிறார்; அவர் விரதம் இருக்கும்போது தானும் விரதம் இருக்கிறார்; இறுதியில் மாமிசம் உண்பதையே கைவிடுகிறார்.

மரியோவின் இந்த அதீத ஆர்வம், “ராகு காலம்” (“கெட்ட” நேரம்) மீதான ஒரு தீவிரப் பிடிப்பாக உச்சம் கொள்கிறது. அவரது முதலாளி, பயணம் ராகு காலத்தில் தொடங்குவதால் ஒரு சர்வதேசப் பயணத்தையே ரத்து செய்வதைக் கண்டபின், மரியோ அந்த நம்பிக்கையை ஒரு முழுமையான உண்மையாக உள்வாங்கிக் கொள்கிறார். கதையின் இறுதி, பேரழிவுகரமான முரண் இதுதான். அந்தக் குடும்பம் அங்கிருந்து சென்ற பல மாதங்களுக்குப் பிறகு, மரியோவுக்கு ஸ்வீடிஷ் தூதரகத்தில் ஒரு வாழ்வையே மாற்றக்கூடிய வேலைக்கான நேர்காணல் கிடைக்கிறது. ஆனால், அது ராகு காலத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஒரே காரணத்திற்காக அவர் அந்த நேர்காணலுக்கே செல்லாமல் தவறவிடுகிறார். அவர் ஏற்றுக்கொண்ட அந்த நம்பிக்கையே, இறுதியில் அவரது வீழ்ச்சிக்கான கருவியாக மாறிவிடுகிறது.


பூமாதேவி

இந்தக் கதை, ஒரு புலம்பெயர்ந்த தந்தைக்கும் அவரது மகளுக்கும் இடையிலான அழகான மென்மையான, ஆனால் மாறிவரும் உறவின் மூலம் தலைமுறை மாற்றத்தை ஆராய்கிறது. ஒரு தலைமுறை தனது அஸ்திவார நினைவாகப் போற்றும் ஒன்றை, அடுத்தத் தலைமுறை அடியோடு மறந்துவிடுகிறதா?

அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த அந்தத் தந்தை, தனது கடினமான ஆரம்ப நாட்களை நினைவுகூர்கிறார். அவர் தனது முதல் வேலையை ஒரு நகல் எடுக்கும் இயந்திரத்திற்கும் காபி இயந்திரத்திற்கும் இடையில், ஒரு மோசமான அடித்தள அறையில் தொடங்குகிறார். முட்டாள் முதலாளியிலிருந்து தாங்கிக்கொள்ள முடியாத குளிர் என எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறார்.

அவரது மிகவும் பொக்கிஷமான நினைவுகள், தனது இளம் மகளுடன் சலவைக் கூடத்தில் (laundromat) கழித்த அந்த சனிக்கிழமை காலைகளின் மகத்தான தருணங்களே. அங்கே ‘Maytag 22’ என்ற இயந்திரத்தை அவர்கள் தங்கள் குலதெய்வமாகவே வைத்திருக்கின்றனர். சாதாரணமாகத் தோன்றும் அந்த இடத்தில், துணிகள் உலரும் வரை காத்திருந்த சமயத்தில்தான், அவர் தன் மகளுக்கு வாழ்க்கையின் அடிப்படைப் பாடங்களைக் கற்பிக்கிறார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது (திருக்குறிப்புத் தொண்ட நாயனார் கதை), பூமியை மாசுபாட்டிலிருந்து காப்பது போன்றவற்றை அவர் அங்கேதான் பகிர்ந்துகொள்கிறார். பூமியைப் போலவே அந்தச் சலவை இயந்திரமும் துணிகளின் அழுக்கையும், அதனால் ஏற்படும் மாசுகளையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டதால், அதற்கு அவர்கள் ‘பூமாதேவி’ என்று செல்லப்பெயர் சூட்டுகிறார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, மகள் இப்போது ஒரு வெற்றிகரமான, முழுமையான அமெரிக்கப் பெண்ணாக வளர்ந்துவிட்டாள். ஒருமுறை, அவர்கள் தங்கள் பழைய குடியிருப்பை அதிவேகமாகக் கடந்து செல்லும்போது, அந்தத் தந்தை சலவைக் கூடத்தைக் கண்டுவிடுகிறார். ஒரு சிறுவனின் உற்சாகத்துடன், “பூமாதேவி!” என்று கத்துகிறார். ஆனால் அவள் மகளுக்கு அதைப் பற்றி எந்த ஞாபகமும் இல்லை, “என்னப்பா பூமாதேவி?” என்று கேட்கிறாள். புதிய ஒன்றுடன் இணையும் மகள் பழைய தந்தையின் பண்பாட்டைத் துண்டித்து விட்டாளா? தந்தைக்கு எஞ்சுவது நினைவுகள் மட்டுமே தானா?

தந்தை இதை ஒரு ஆழமான ‘பண்பாட்டு முறிவு’ (cultural breakup) என உணர்கிறார். அவர்களின் பிணைப்பை வரையறுத்த அந்தப் பொதுவான நினைவு, இப்போது அவருக்கு மட்டுமே சொந்தமாகிவிட்டது. யார் அந்த பூமாதேவி? துணிகளின் அழுக்கை ஏற்றுக்கொண்ட அந்த இயந்திரம், அந்த அசுத்த நீரை ஏற்றுக்கொண்ட பூமி, இப்போது, தன் மகளின் துண்டித்தல் எனும் பாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய அந்தத் தந்தை. அவரால் என்ன செய்ய முடியும்? பூமியைப் போல அவரால் பொறுத்துக்கொள்ள மட்டுமே முடியும் - அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல.


மஹாராஜாவின் ரயில் வண்டி

இந்தக் கதை, முதல் காதல் ஈர்ப்பின் நறுமணம் கமழும் தருணங்களை, ஒரு தென்றல் தீண்டிச் செல்வது போல மென்மையாக விவரிக்கிறது. நம் நினைவுகள் நமக்குள் எப்படித் தேங்கி நிற்கின்றன? காட்சிகளாகவா? ஒலிகளாகவா? அல்லது வேறு புலன்களின் வழியாகவா? இங்கே எழுத்தாளர், மனிதனின் அடிப்படை உயிரியல் உந்துதல்களுடன் பல்வேறு புலனுணர்வுகள் பின்னிப் பிணைவதை அற்புதமாகக் காட்டுகிறார்.

பெண்கள் மீது ஈர்ப்பிருக்கும் கதைசொல்லியான அந்தப் பதினான்கு வயதுச் சிறுவன், எதிர்பாராத விதமாக ஜார்ஜ் மாஸ்டர் வீட்டில் தங்க நேர்கிறது. அங்கே அவர் மகள் ரொஸலினைச் சந்திக்கிறான். அவளது ஒவ்வொரு அசைவும், பேச்சும் அவனுக்குள் புதுவிதமான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அவள் காட்டும் பூனைக்குட்டிகள், அவளது அப்பாவிடம் இருப்பதாகச் சொல்லும் பதினான்கு பெட்டிகள் கொண்ட “மஹாராஜாவின் ரயில் வண்டி” பற்றிய கதை, அவள் கொடுக்கும் கேரளத்து ஐஸ்கட்டி, அவளது கித்தார் இசை என எல்லாமே அவனுக்குப் புதிய அனுபவங்களாக அமைகின்றன.

ஆண்டுகள் ஓடி, அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனாகி, பல தேசங்களைச் சுற்றி வருகிறான். ஆனாலும், அந்த முதல் ஈர்ப்பின் தருணம் அவனுக்குள் பசுமையாக இருக்கிறது. எப்போது? அவன் ஒரு சதுர வடிவ பிஸ்கட்டைச் சாப்பிடும் போதெல்லாம். அந்த பிஸ்கட் நவ துவாரங்களைக் கொண்டிருக்கிறது, இந்திய தத்துவத்தின் மனித உடலைப் போலவே. அவற்றின் மூலமாகத் தான் பருவுடல் புறத்தில் எல்லாவற்றுடனும் தொடர்புகொண்டிருக்கிறது. அந்த பிஸ்கட் மென்மையாக இருக்கிறது, ஆனால் அதன் மேல் தூவப்பட்டிருக்கும் சிறிய சர்க்கரைத் துகள்கள் ஒரு சொரசொரப்பான தன்மையைக் கொடுக்கின்றன; அதே சமயம் இனிமையையும் கூட்டுகின்றன. அந்த பிஸ்கட்டைக் கடிக்கும் ஒவ்வொரு முறையும், பதினான்கு வயதில் அந்தப் பெண் மீட்டும்போது கேட்ட கித்தார் இசையின் “மணத்தை” அவன் நுகர்கிறான். சுவை, தொடுவுணர்வு, ஒலி, மணம் என புலன்கள் ஒன்றிணைந்து எழுந்து, அவனுள் அந்த முதல் ஆதியுணர்வைக் காண்கிறான். வள்ளுவர் சொல்வதுபோல், கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் காதல் ஈர்ப்பில்தானே இருக்கிறது. முதற்காதலின் நினைவு மீட்டலை, அந்த மாயாஜாலத்தை நாம் குறுந்தொகையில் காணலாம். இந்தக் கதையையே அப்பாடலுக்கு ஒரு புகழுரை (tribute) ஆகக் கருதலாம்!

காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே

மிளை பெருங்கந்தன் எழுதிய குறுந்தொகை (204) பாடல்
Poem by Milai Perung Kanthan in Kurunthogai collection (no. 204)

காமம் காமம் என்று சொல்கிறார்களே
காமம் வருத்தமும் அன்று நோயும் அன்று    

பழங்கொல்லை மேட்டில் தளைத்த
முதிராத இளம்புல்லை
முதிய பசு வந்து
நாக்கால் தடவி இன்புற்று
நினைக்கும்பொழுது எழும்
புதிய ஒன்றே காமம்
“Love, love,” they say, but
love is not a pining affliction,
nor is it a wasting disease.

Like an old cow
on a fallow mound
finding tender, unripened grass,
stroking it, so gently, with her tongue -
love is that new reminiscence.