(கனடாவிலிருந்து வெளிவரும் “காலம்” - ஜனவரி 2026 - 63ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் சிறுகதை.)
ஏழு வயதில் நாயொன்றால் துரத்தப்பட்டு, பள்ளிச் சீருடையும் இரட்டைப் பின்னலில் மல்லிகையுமாக மூச்சிறைந்து தொண்டை வற்றுமளவு ஓடி, வீட்டுக்குள் புகுந்து தாழிட்டபோது பற்றிய அச்சம் அது. இப்போது இருபது வயது. சென்னையின் மையத்தில் ஒரு பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதிக்குள் இருக்கும் இக்கல்லூரி வளாகத்தில், கடந்த இரண்டாண்டுகளில் அந்த அச்சமும் மல்லிகையும் மாயமாகியிருந்தன. ஒவ்வொரு நாளும் காலை வகுப்புகள் முடிந்து பன்னிரெண்டு மணிக்கு என் கணினித்துறை கட்டிடத்தின் வெளியே நான் பிரதீப்புக்காகக் காத்திருக்க, அந்த நாயும் என்னருகிலேயே அமர்ந்து காத்திருக்கும். வெள்ளையும் தீம்பழுப்பும் கலந்த உடல். “ஓரியோ” என்று அதன் நெற்றியை வருடினேன். இங்கே வாழ்ந்து வரும் இரண்டரை ஆண்டுகளில் ஓரியோவை மட்டும் என் டி.எஸ்.எல்.ஆரில் நூறு புகைப்படங்களாவது எடுத்திருப்பேன்.
“டென் மின்” என்று பிரதீப்பின் குறுஞ்செய்தி. நானும் நாயின் அருகிலேயே படிகளின் மீது அமர்ந்துகொண்டேன். மாணவர்கள் சிறு குழுக்களாக விலகிச் செல்லச்செல்ல மனிதச் சத்தங்கள் மெல்லத் தேய்ந்தன. ‘டிட் டீ - டிட் டீ - டீட்டிட் டீ’ என்று ஒரு இரட்டைவால் குருவி அழைத்துக்கொண்டிருந்தது.
நவம்பரின் நண்பகல் வெயில், சுவர்களில் பட்டு மேலும் அதிகரிப்பதுபோல் தோன்றியது. கழுத்துப்பட்டையைத் தடவிப் பார்த்து சுடிதாரின் டாப்பை இழுத்துவிட்டுக்கொண்டேன். கழுத்திலிருந்து இறங்கிய வேர்வை, மேலாடையின் நுனியை நனைத்துக்கொண்டு, உள்ளாடை வரியோரம் வரை சென்று கோடு கிழித்து நின்றது. எதிரில், நாள்வேலையாளர்கள் சுள்ளி எடுத்துச் செல்லும் சீமைக் கருவேல முட்செடிகளும், மெல்லிய கால் தாங்கும் இலந்தையின் குறுமரமும் நின்றிருந்தன. சில காகிதங்கள் அவற்றின் அடியில் தென்பட்டன. இயற்கையை கவனிக்கும் ஆர்வமும் அதைப் பற்றி வாசிக்கும் பழக்கமும் சிறு வயது முதலே எனக்குண்டு. அவை வகுப்புகளுக்கும் செய்முறை பயிற்சிகளுக்கும் பிற செயல்பாடுகளுக்கும் நடுவே இந்தக் கல்லூரி வளாகத்தில் அவ்வப்போது மேலோங்கின.
பிரதீப்பின் கால்கள் மிதிவண்டியை அழுத்தியபடி தொலைவில் தெரியும்போதே ஓரியோ தலையைத் தூக்கி எங்களுடன் நடக்கத் தயாராகிவிட்டது. இருமுறை மணிச் சத்தம் கணகணத்து, மிதிவண்டியை நிறுத்துமிடத்தில் விட்டுவிட்டு இறங்கினான். படங்களோ எழுத்தோ இல்லாத மென்சிவப்பு டிஷர்ட்டும், கணுக்காலைப் பற்றியிருக்கும் காக்கிப் பேன்ட்டும் அணிந்திருந்தான்.
“சாரி அனுகிரகா, ஃபிப்த் பில்லர் கூட்டம் இருந்தது” என்றான். சொல்லிக்கொண்டே, “யாரிது… ஓரியோவா… முநியு முநியு… ஜுஜுஜு…” என்று மழலை பேசியபடி, அதன் உடல் முழுக்கத் தன் கையை வருடிக்கொண்டே கொஞ்சினான். நேர்த்தியாக வாரியிருந்தாலும் நெற்றியை மறைக்கும் எண்ணெயற்ற முன்முடி. கீழே நீள்வட்ட முகம்; உதடுகள் முழுதாய் தெரியும் மெல்லிய மீசை. சுவரோர மாக்கோலம் போலத் தீட்டப்பட்ட தாடி.
‘ஐந்தாம் தூண்’ - ‘தி ஃபிப்த் பில்லர்’ எனும் மாணவர் இதழின் கலைப்பிரிவுப் பதிவுகளுக்குப் பிரதீப் தான் உதவியாசிரியர். அதே இதழின் பொது பதிவுகளுக்கு நான் புகைப்பட நிருபர். இரண்டு நாட்களில், வரும் வாரயிறுதியில் ‘ரங்-தாரா’ கலைவிழா நடைபெறவிருப்பதால், இப்போது இருவருக்குமே பணிச்சுமை மிகுந்த நேரம்.
“இசைக்குழுவுக்கு நான் கேள்விகளையெல்லாம் ரெடி பண்ணிட்டேன். நிகழ்வுக்கு முன்னாடி இருபது நிமிஷம் கொடுத்திருக்காங்க,” என்றான்.
“ரொம்ப கஷ்டமா கேட்டுடாத,” சிரித்தேன்.
முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு, “எல்லாமே இசை சார்ந்த கேள்விகள் தான். தொடங்கும் போது பொதுவா கேக்குற கேள்விகள் ஐந்து நிமிஷம் வைத்திருக்கிறேன். இயற்கையான அக்யூஸ்டிக் கருவிகளுக்கும் எலெக்ட்ரானிக் வாத்தியங்களுக்கும் உள்ள முரண், வெவ்வேறு இசைப்பாணியைக் கலப்பது… இப்படி.”
அவனுடைய ஒவ்வொரு கையசைவிலும் ஒரு தீர்க்கம் இருந்தது. என் பார்வை அவன் கைகளையே மேய்ந்துகொண்டிருந்ததோ என்று துணுக்குற்று, சட்டென அவன் கண்களைச் சந்தித்தேன்.
“காவியாவுக்கு லஞ்ச்சுக்கு முன்னாடி ஹவர் உன்னோட கிளாஸ் தானே, இன்னும் காணோம்?” என்றேன்.
“இல்ல, அவ டீன் ஆஃப் ஸ்டூடண்ட்ஸ சந்திக்கப் போறதா சொன்னா. ”
“மறுபடியுமா? செவ்வாய்க்கிழமை தானே நானும் அவளும் போய் அவரைப் பார்த்தோம்?”
“கரக்டுதான்… ஆனா, அவளோட பதிவு ரொம்ப ஹார்ஷ் இல்ல? கான்கிரீட் சுடுகாடு. நீ வேற அதோட நீ எடுத்த ஃபோட்டோஸ்லாம் போட்டிருந்த.”
நாங்கள் நடக்கத் தொடங்கியதும் ஓரியோவும் இடையில் வந்துகொள்ள – மரக்கிளைகள் வெயிலைச் சல்லடையிட்டு, புலித்தோல் போர்த்தியதுபோல் இருக்கும் அந்த நிழற்சாலையில் – மொத்தம் எட்டுக் கால்கள் சேர்ந்து நடந்தன. ஆண்டுதோறும் போடப்படும் புது தாரினால், சாலையின் மட்டம் உயர்ந்துகொண்டே செல்வது போல் இருந்தது. மரச்செறிவின் குளிர்ந்த சுவாசம் தாரிலிருந்து எழும் அனலைத் தணித்துக்கொண்டிருந்தது. ஓரியோ, ஒரு வழிகாட்டியைப் போல அவ்வப்போது எங்களுக்கு முன்னே ஓடி, பாதையோர மரத்தடிகளை முகர்ந்து பார்த்துவிட்டுத் திரும்பியது.
“அவர் சொன்னதுல தப்பு ஒன்னும் இல்ல. இது ரெஸிடென்ஷியல் காம்பஸ். இன்னும் நிறைய ஹாஸ்டல் தேவைப்படுதே,” என்றான்.
“அது மட்டுமா சொன்னாரு. காவியாவைப் பார்த்து… ,” டீனைப் போன்று குரலை மாற்றிக்கொண்டு, “அடுத்தமுறை வரும்போது, மறக்காம கொஞ்சம் பர்ஃப்யூம் பயன்படுத்தும்மா,” என்று கூறி, “அப்படீனு வேற சொன்னான் அந்த ஆளு,” என்றேன்.
“ஆமா,” என்று தோளைக் குலுக்கினான். “இருந்தாலும், ஒரு டீன் ரூமுக்குப் போகும்போது அவ கொஞ்சம் பார்த்து போயிருக்கலாம்.” அவன் குரலில் இருந்த அந்தத் தெம்பில்லாத சமாதானம் எனக்கு எரிச்சலூட்டியது.
உரையாடலை மாற்ற, “இன்னைக்கு மெஸ்ல என்ன, பீட்ரூட்டும் சன்னா மசாலாவுமா?” என்று அலுத்துக்கொண்டேன். இந்த மாதம் நாங்கள் இருவரும் ஒரே மெஸ்ஸில் தான் பதிவு செய்திருந்தோம். “என்கிட்ட சிக்கன் டோக்கன் இருக்கு,” என்றான்.
அவன் மின்னியல் துறை. கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே, பாடங்களை விடவும் இந்த வளாகத்தின் நிழல் தான் எங்களை அதிகம் இணைத்திருந்தது. பிரதீப்பிடம் பேசும்போது சொற்களை விட அமைதிக்கு அதிக இடமிருக்கும். “வெளியே இருப்பதைவிட, இந்தக் கேம்பஸ்ல ஒரு மூனு டிகிரியாவது வெப்பம் குறைவா இருக்குல்ல? வெயில் தான், ஆனாலும் குறைவான வெயில்… ஏதோ காட்டுக்குள் நுழைந்த மாதிரி.” என்று நான் வியக்கும்போதெல்லாம், “இது காடு டீ…,” என்று சிரிப்பான். அந்தச் சிரிப்பில் ஒரு சமாதானம் இருக்கும்.
ஆனால், காவியாவிடம் இந்தச் சமாதானம் எடுபடாது. நாங்கள் இருவரும் ஒரே கணினித்துறை; விடுதியில் பக்கத்து அறைத் தோழிகள். அவள் என் அறையிலோ, நான் அவள் அறையிலோ பெரும்பாலான நேரம் கழிப்போம். என் அறையில் நான் சன்னலைத் திறந்து வைத்துவிட்டு, “காத்து எவ்ளோ சிலுசிலுன்னு இருக்குல்ல,” என்று ரசித்தால், அவள் முகம் இறுகிவிடும். “நாம இங்கே தற்காலிக விருந்தினர்கள் அனுகிரகா… சொல்லப்போனா, எந்தப் பிரயோஜனமும் இல்லாத பாரங்கள்,” என்பாள். அவள் குரலில் எப்போதும் ஒரு குற்றவுணர்ச்சி காய்ந்துகொண்டே இருக்கும்.
நடந்துகொண்டே பிரதீப்பும் நானும் வரிசையாக நின்ற புளிய மரங்களைக் கடந்தபின், முட்செடிகள் ஓரத்தில் மண்டிய பாதையில், சிமெண்ட் மணத்தின் ஊடாக நடந்து சென்றோம். பூசப்படாத அந்தச் செங்கல் சுவர்களின் மேல் அமர்ந்திருந்த குரங்குகள், கோயில் மதில்சுவர் நந்திகளைப் போலத் தெரிந்தன. நடப்போரையும், மிதிவண்டியில் செல்வோரையும், கடந்துபோகும் மேகங்களைப் பார்ப்பதுபோல் ஒருவிதப் பற்றின்மையோடு அவை நோட்டம் விட்டன.
இரண்டு குரங்கு குட்டிகள் தரையில் உள்ள ஒற்றைச் செங்கல்லில் யார் நிற்கலாம் என்று போட்டிப்போட்டுக்கொண்டும், கீழே விழுந்துள்ள இலைகளைத் தூக்கிப் போட்டும் கீச்சுக் குரலில் விளையாடிக்கொண்டிருந்தன. இவற்றின் மூதாதையர், செங்கற்கள் இல்லாத இதே நிலத்தில் விளையாடியிருப்பார்கள். இவற்றின் பிள்ளைகளோ, ஒருவேளை பொடிப்பொடியாய் உதிர்ந்துபோன செந்தூள்களில் விளையாடக்கூடும். எங்களிடம் எந்த உணவும் எந்தப் பையும் இல்லாததால், நாங்கள் அவற்றைக் கவரவில்லை.
ஓரியோ நாய் ஒருமுறை செங்கல் அடுக்குகளுக்கு அருகே சென்று ஒரு சுற்று பார்த்துவிட்டு, மறுபடியும் எங்களுடன் இணைந்துகொண்டது. மெஸ் வரைக்கும் எங்கள் கூடவே நடந்து வந்து, பிறகு சென்று விடும். எங்கு செல்கிறது என்று தெரியாது. திரும்பும் போது நாங்கள் மட்டுமே இருப்போம்.
பிரதீப் சாலையின் பக்கவாட்டில் சில அடிகள் நுழைந்து என்னைக் கூப்பிட்டான். செடியின் கிளைகளில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் நாடா ஒன்றை எடுத்துப் பிரித்துவிட்டு, உள்ளே இன்னும் நகர்ந்தான். அங்கு, நான்கு இதழ்கள் கொண்ட குட்டிப்பூக்களாய், சிவப்புக் கொத்துகளாகச் செச்சிப்பூ அடர்ந்திருந்தது. அவன் குனிந்தபோது, அவனுடைய வாசம் அந்தரத்திலேயே தேங்கி நிற்பதுபோல் காற்றில் கனத்து நின்றதை என் சுவாசம் உள்ளிழுத்தது. ஒரு நீலநிறத் தட்டான், பிரதீப்பின் பின்தலை கேசத்திற்கு அருகில், ஒரு கோடு போலப் பறந்துகொண்டிருந்தது.
“என்னோட கேமராவக் கொண்டுவந்திருக்கனும் சே,” என்றேன்.
“ஷ்ஷ்ஷ் கிட்ட வா” என்று சொல்லி, தன் விரலில் அமர்ந்திருந்த ஆரஞ்சு வண்ண பட்டாம்பூச்சியை என் முகத்தின் அருகில் கொண்டுவந்தான். அந்தப் பட்டாம்பூச்சி பறந்துவந்து, என் கண்ணுக்கும் காதுக்கும் இடையில் ஒட்டிக்கொள்ள முயன்றது.
அவன் வாய் ஏதோவோர் இசைக்குறிப்பை முணுமுணுத்தது. குழந்தைகள் நொண்டி விளையாடும் ஆட்டம் போல, குட்டிக்குட்டித் தாவல்களாக மென்மையாகச் சிறகடித்துச் சென்றது.
“என்ன பட்டர்பிளை இது?” என்று கேட்டேன்.
பீகாக் பான்சி என்று எனக்குத் தெரிந்திருந்தாலும் அவனிடம் கேட்டுவிட்டு, அது பறந்துவிடக்கூடாதென்று இமைகளைக்கூட அசைக்காமல், தலையையும் ஆட்டாமல் நின்றேன். அதன் சிறகடிப்பு, உயர்-ஃபிரேம்ரேட் காணொளியை மெதுவோட்டத்தில் பார்ப்பது போல, தேன் வழியும் சரளத்தில் இருந்தது.
“பெயர் முக்கியமா என்ன? வசீகரமா இருக்குல்ல,” என்றான்.
பட்டாம்பூச்சிக்கு கால்கள் இருக்கும் என்பதையே அப்போதுதான் என் மனம் கவனித்தது. அது பறந்துசென்று இப்போது என் கழுத்தில் அமர்ந்தபோது நான் சற்று தலையை வளைத்துக்கொண்டேன்.
பிரதீப், “அதுக்கு சோடியம் வேணும். மனித வேர்வையிலிருந்து மினரல்ஸ எடுத்துக்கும். உன்கிட்ட சென்ட் வாசம் அடிச்சாலும், வேர்வையும் இருக்கே…” என்றான்.
அசையாமல் இருந்தேன். ஆரஞ்சு நிறச் சிறகின் படபடப்பைப்போலவே இருந்த அவன் கண்கள், என்னைச் சந்திக்காமலேயே இருந்தன.
“ஆனாலும் காவியாவோட சென்ட் போடாத நேச்சுரல் ஸ்மெல் சில சமயம் நல்லா இருக்கும்ல,” என்றான். என் அடியாழ நரம்பொன்று தன்னிச்சையாகச் சுருக்கென்று இழுத்துக்கொண்டது. என் கண்களில் மெலிதான நீர்ப்படலம் ஏற்பட்டது போல உணர்ந்தாலும் நகராமல் இருந்தேன்.
தன் மெலிந்த உடலுக்குப் பொருந்தாத பெரிய டீஷர்ட்டும், முழங்கால் வரை நீளும் காக்கி ஷாட்சும் அணிவதே காவியாவின் வழக்கம். “ஃபோட்டோ எடுக்கலாம் வாடீ” என்று பலமுறை வளாகத்தில் இருக்கும் கட்டிடங்களுக்கும் காட்டுப்பகுதிக்கும் இழுத்துச் செல்வேன். ஆனால், அவள் எத்தனைமுறை மாலையில் பேட்மின்ட்டனுக்கு அழைத்தும் எனக்கு ஏனோ அதில் விருப்பம் இருந்ததில்லை. அவள் விளையாடி முடித்து வியர்வையுடனேயே நேராக மெஸ்ஸுக்கு வந்து, “என்டே அனுகிரகா… சோறும் முட்டையும் எப்டிடீ,” என்று சிரித்துக்கொண்டே பின்பக்கமாக என் கழுத்தைக் கட்டிக்கொள்வாள்.
கடந்த செமெஸ்டரில் ஒரு சனிக்கிழமை மாலை அவசரமாக கணினித்துறை இரண்டாம் மாடிக்கு வரும்படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். எல்லாமே பெரிய ஆங்கில எழுத்துகளில் இருந்தன. விரைந்தேன். வார நாட்களில் காணப்படும் இளநிலை மாணவர்கள் யாருமில்லாத பொழுது. சில ஆராய்ச்சி மாணவர்கள் அவர்களுக்கேயுரிய மெதுநடையில் செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.
இரண்டாம் மாடி ஏறியவுடனேயே தூரத்தில் காவியா இருப்பது தெரிந்தது. தரையில் ஒரு காலை மடக்கி முட்டியை ஊன்றி, மறுகாலைக் குத்திட்டு வைத்து, உடலைச் சமன்படுத்தியபடி அமர்ந்திருந்தாள். அவள் கழுத்தில் கேமரா இருந்தது. முன்னால் ஒரு குரங்கு அமைதியாக அமர்ந்திருந்ததை ஆச்சரியமாக கவனித்துக்கொண்டே அருகில் சென்றேன். தளத்தில் ஓரமாக இருக்கும் கதவு பூட்டப்பட்ட அறைக்கு முன்பு, மிதியடி மீது அமர்ந்திருந்தது. அதன் அருகில் ஒரு பாட்டில் மூடியில் கொஞ்சம் நீர் வைக்கப்பட்டிருந்தது.
கல்லூரியில் சேர்ந்த முதல் மாதத்திலேயே நான் பேப்பர் கப்பில் டீ எடுத்து நடந்துவந்துகொண்டிருக்கும்போது ஒரு குரங்கிடம் நெருங்கிய பரிச்சயம் உண்டானது. தனியாக இருந்த அது, என்னைக் கண்டதும் துரித நடைபோட்டு என்னை நோக்கி வந்தது. நானும் எட்டுகளை வேகப்படுத்தினேன். தொடர்ந்து வந்து, என் காலைப் பிடித்துகொண்டது. அவ்வளவு அருகில் ஒரு குரங்கின் முகத்தைப் பார்ப்பது அதுவே முதல் முறை. நன்றாக வளர்ந்த பெரிய குரங்கு. அதன் கையில் காயம் பட்டிருந்தது. என் காலின் பிடியை விடவில்லை. அது எம்பிப் பாய்ந்து, கோரைப் பற்களைக் காட்டிய கணத்தில், பயத்தில் கையிலிருந்த டீ கப்பைக் கீழே போட்டேன்.
உறைந்து விட்டேன் என்றே சொல்ல முடியும். என் ஜீன்ஸ் பேண்டில் அதன் வாய் படும் சமயம், எதிரில் வந்த பெண்ணொருவர் கத்தியதால் அது விலகி ஓடியது. ஜீன்ஸ் என்பதால் பற்கள் தோலைத் தொடவில்லை. ஆனாலும் மருத்துவமனை சென்று ஒருமுறை சோதனை செய்துகொண்டேன். இந்த நிகழ்வுக்குப் பிறகு காவியா அதை விளக்கினாள்: “வேறொரு கடுவனால் தோற்கடிக்கப்பட்ட ஆண் குரங்கு அது. அதனாலதான் வெறியோட தனியா சுத்திட்டிருக்கு.”
காவியாவின் முன் இப்போது அமர்ந்திருந்த குரங்கிடம் அந்த ஆக்ரோஷம் இல்லை. பெரிய குரங்கு தான்; ஆனால் வயதான தோற்றம். கால்களை ஒடுக்கி, அமைதியாக அமர்ந்திருந்தது. சென்றமுறை நடந்த அனுபவத்தால், என் மனத்தால் நிலைகொள்ள முடியவில்லை. அது என் மீது இதோ இந்தக் கணம் பாய்ந்து வரும், இதோ இந்தக் கணம் பாய்ந்து வரும் என்றே என் மனம் கூர்முனை கொண்டது. அதன் உடலில் சிறு அசைவு ஏற்பட்டாலும், எப்படி விலகி தப்பிக்கலாம் என்று சிந்தித்தது. நான் அவளருகேயே குனிந்துகொண்டேன். ஒவ்வொரு நாளும் எனக்குப் பழக்கப்பட்ட அவளுடைய வாசம்.
காவியா எதுவும் பேசவில்லை. என்னை எதற்கு வீணாக வரவழைத்து இப்படி காக்கக் வைக்கிறாய் என்று அவளிடம் கத்தத் தோன்றியது. நான் என் செல்போனை எடுத்து அவள் சொல்லுக்காக காத்திருப்பது போல அவளை ஒருமுறை பார்த்தேன். அவள் என் கையைப் பிடித்து, ‘இல்ல ஃபோட்டோலாம் எடுக்காத’ என்று சொல்லி, அவளுக்குச் சற்று பின்னால் இருக்கச் சொன்னாள்.
“டீ அக்ரஸிவா ஆகிடபோகுது” என்றேன்.
“இல்ல… அமைதியாக இரு” என்றாள்.
இன்னமும் என் கையைப் பிடித்துக்கொண்டிருந்தாள். பிடியை உதறிவிடு என்று என் மூளை ஆணையிட்டாலும், என் கை நகர மறுப்பதை உணர்ந்தேன்.
ஒரு குரங்கு அசைவற்றிருப்பதை அப்போதுதான் கண்டேன். அதன் கண்விழிகள் மட்டும் நகர்ந்து எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தன. மண்புரளும் குழந்தையின் வாசம் அதனிடம் வீசியது. நொடிகள் செல்லச்செல்ல, கசக்கும் வேம்பின் மணத்தையும் என் நாசி அறிந்தது. குரங்கின் நகங்கள் நீண்டு வளர்ந்திருந்தன. ரோமங்கள் தனித்தனியாக தெரிந்தன. முகத்தசைகள் வற்றி, வறள்தோல் சுருங்கி, மடிப்பு மடிப்பாக இருந்ததைக் கண்டபோது, என் பாட்டியின் முகம் நினைவில் வந்துபோனது.
காவியா, குரங்கின் அருகே தரையில் ஊர்ந்து வந்த ஓர் எறும்பை, எந்தச் சலனமுமின்றி நசுக்கித் தள்ளிவிட்டாள். அந்தச் செயல் என்னை உறுத்தியது.
நான் நெல்லிக்காய் அளவுக்குக் கூட குரங்கை நெருங்காமல் உறைந்திருந்தேன். நான் முதலில் பயந்து அதன் கண்களைச் சந்திக்கத் தயங்கினேன். ஆனால் அவற்றைச் சந்தித்த ஒரு கணத்தில், பல்லாண்டு சேமித்தக் கனிவை என்னிடம் கடத்தியதாகத் தோன்றியது.
பின்னர் அந்த இரவில், சாகும்போது விலங்குகள் கண்களை மூடிக்கொள்வது அபூர்வம் என்று எனக்குச் சுட்டினாள்.
ஒரு கணம் இது குரங்கு, மறு கணம் இப்போது வெறும் உடல் — இந்தக் கொதிக்கும் உலைமனத்தை, என் கண்கள் அணைக்க முயன்று தோற்றன. “நீ போய் செக்யூரிட்டிகிட்ட சொல்லிட்டு வா,” என்று கட்டளையிடுவதுபோல் சொன்னாள். அவள் அதன் அருகிலேயே தரையில் சப்பணமிட்டு அமர்ந்துவிட்டதைப் பார்த்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தேன்.
சனிக்கிழமை காலையிலேயே கலைவிழா ஒரு திருவிழாவைப் போல தொடங்கியது. கல்லூரி வளாகத்தின் முதன்மை வாயிலில், ‘ரங்-தாரா’ எனப் பொறிக்கப்பட்ட பிரம்மாண்டமான வினைல் பதாகை வரவேற்றது. அதைத் தாங்கும் கம்புகளுக்குப் பின்னால், ‘விலங்குகள் உங்கள் நண்பர்கள்’ என்ற நிரந்தரப் பலகை மறைந்து கிடப்பதை, உற்றுப் பார்ப்பவர்கள் மட்டுமே காண முடியும். வெளிக்கல்லூரி மாணவர்கள், ஆட்டுக்கிடைக்குள் நுழைவதைப் போல, உலோகச் சோதனை வாயில் வழியாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் முண்டியடித்துக்கொண்டும் நுழைந்தார்கள். பின்னர், வருகின்ற மாணவர்களின் அடையாள அட்டைகளைப் பாதுகாவலர்கள் சரிபார்த்து உள்ளே அனுப்பினார்கள். புதிய முகங்கள், புதிய கால்தடங்கள், புதிய பேச்சொலிகள். நான் போதிய புகைப்படங்களும், மாணவர்களிடம் கேள்விக் காணொளிகளையும் எடுத்துக்கொண்டேன்.
எதுவும் சாப்பிடாமல் மிதிவண்டியிலேயே காலை முழுவதும் சுற்றியதால் வயிறு சத்தம்போட்டது. பின் மதியவேளையில் மெயின் ரவுண்டானாவுக்கு வந்து பூக்களற்று இலைகளை மட்டும் உதிர்த்துக்கொண்டிருந்த குல்மோஹர் மரங்களைக் கடந்து வரும்போதே இசைமுழக்கம் தொடங்கியிருந்தது. திறந்தவெளி அரங்குக்கு வெளியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மரங்களின் ஊடே, சிறுசிறு சதுரங்களாக வரிசையாக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. வழக்கமான பஜ்ஜி, மசால் வடை, பானிபூரிக் கடைகளைத் தாண்டி, பழம்பொரி இரண்டை வாங்கித் தின்றேன்.
மாலை மெல்லக் கவியத் தொடங்கியபோது, கார்கள் வந்து சேரத் தொடங்கின. அவை இசைவிழா விருந்தினர்களுக்கும், இசைக்குழுவினருக்குமான வாகனங்கள்.
பிரதீப்பிடமிருந்தும் காவியாவிடமிருந்தும் எந்தக் குறுஞ்செய்தியும் வராததனால் நானே அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கேட்டு செய்தி அனுப்பினேன்.
ஐவர் கொண்ட அந்த இசைக்குழுவுடனான நேர்காணல் முடிந்ததாக பிரதீப்பிடமிருந்து குறுஞ்செய்திகள் வந்தன. “மோனாலிசாவின் முகத்திற்குத் தரும் அதே முக்கியத்துவத்தை, பின்னாலிருக்கும் நிலப்பரப்புக்கும் கொடுக்கணுமாம். குரல் என்பது முகம் என்றால், வெவ்வேறு பின்னணி இசை வெவ்வேறு அனுபவங்களைக் கொடுக்குமாம்.”
நான் அரங்குக்கு உள்ளே செல்கிறேன், நீயும் சீக்கிரம் வந்து விடு என்று பதில் அனுப்பினேன்.
“பை தி வே, யாரையாவது புதுசா கியூட்டா பாத்தியா?” என்று நாக்கை வெளிகாட்டும் எமோஜியுடன் அவனுடைய பதில் வந்தது.
காவியாவிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், அவளுக்கு ‘உள்ளே செல்கிறேன்’ என்று செய்தி அனுப்பிவிட்டு, வரிசையில் நின்றேன். பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு பையைச் சோதனையிட்டு உள்ளே அனுமதித்தார்கள். வெளியே கேட்ட ஆரவாரத்தை வைத்து, அரங்கு முழுவதுமாக நிரம்பியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், உள்ளே நுழைந்தபோது, பாதி இருக்கைகள்தான் நிரம்பியிருந்தன.
ஒரு பெரும் கிண்ணத்தைப் போலிருந்தது அந்தத் திறந்தவெளி அரங்கு. ஒரு கோடியில் மேடை. எதிரில் சமதரையில் ஆயிரம் நாற்காலிகள். வட்ட விளிம்பைச் சுற்றிலும் படிகள் அமைத்து உட்காரும் இடங்கள். தொடர்ந்து நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருப்பதால் மாணவர்களின் இரைச்சல் காதுக்குப் பழகிவிட்டிருந்தது. மேடையில் முதலில் ஆடியோ செக் செய்யும் ஆட்கள் வந்தனர். பின்னர் இணையத்தில் புதிதாக பிரபலமாக ஆகியிருக்கும் இளம்பாடகர்கள் வந்து பாடினார்கள். கடைசியாக இசைக்குழு.
இசைக்கும் மனிதவுடலுக்கும்தான் என்னவொரு பந்தம்! ஏதோவொரு ஆதிப்புலன் விழித்துக்கொண்டது போலானது மொத்த அரங்கமும். மாலையின் பொன்னொளி அனைவர் முகத்திலும் பட்டு, அரங்கே ஒரு பொன்னிறக் கொன்றைச் சரம் போல ஜொலித்தது. வண்ண விளக்குகள் இசைக்கேற்ப மாறியபோது இரவு போர்த்தியதை உணர்ந்தேன்.
சென்னையின் இரவும் புழுக்கமும், வழியும் வியர்வையும் அப்போது ஒரு பொருட்டல்ல. முன்பின் அறியாதவர்களின் கோடுதாண்டா உடலுரசல்கள் அந்த இசையாட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தன. பொய்யில்லா புன்னகையோடு, களங்கமில்லா கையிணைப்பும் கட்டியணைப்பும் சாத்தியமாகின.
காவியா வராததால் நிகழ்வின் தொடக்கத்திலிருந்தே அவளுக்கு அவ்வப்போது செய்தி அனுப்பிக்கொண்டிருந்தேன். பின்னர் இசையிலேயே மூழ்கி அவளை மறந்து போனேன். பிரதீப் தன் நண்பர்கள் கூட்டத்துடன், எனக்கு எதிர்த்திசையில் இருப்பதாகச் செய்தி அனுப்பினான். வட்டப் பாதையைச் சுற்றி அவனை நோக்கிச் செல்கையில் காவியாவிடமிருந்து அழைப்பு வந்தது. பிரதீப்பிடம் தெரியப்படுத்தி நாங்கள் இருவரும் அரங்கிலிருந்து உடனே வெளியேறினோம்.
அந்தக் குருதி, இரவின் கருமையூடே தன் சிகப்பைத் தனித்துக்காட்டி மின்னியது. காட்டில் படர்ந்திருந்த மென்பனி ரத்தத்திற்குக் குளுமையை வழங்கியிருக்கலாம்; நான் தொட்டுப் பார்க்கவில்லை. அந்த மான்விழிகளின் மெல்லிய நீர்ப்படலத்தில் எங்கள் மூவரின் முகங்களும் பிரதிபலித்தன. கண்விளிம்புகள் மை தீட்டியதுபோல் அடர்கருமை. மையை இழுத்துவிட்டது போல, அக்கருமை மூக்கின் திசையில் நீண்டிருந்தது. மனிதர்களைப் போலன்றி, அதன் வெண்விழி மங்கிய பழுப்பு நிறத்திலிருந்தது. கருவிழி வட்டமாக இல்லாமல் கிடைமட்ட நீள்வட்டம். கொம்புகளற்ற தலை. முதிர்ந்த, மென்பழுப்பு உடல். மரங்களின் இடைவெளியில் ஏதோ வெள்ளையாக அசைந்து மறைந்தது போலிருந்தது. தூரத்திலிருந்து இசைமுழக்கத்தின் அதிர்வுகள். அசைவற்ற விழித்திரையில், ஒரு வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தது.
“பெண் பிளாக்பக்,” என்றாள் காவியா. என்னைத் திரும்பிப் பார்த்து, “ஃபிளாஷ் வேண்டாம்,” என்று தடுத்தாள்.
மானின் உடல் சாலையின் ஓரத்தில் கிடந்தது.
பிரதீப், “இங்கப் பாரு, நடு ரோட்லயும் ரத்தம்,” என்றான். ரத்தத் துளிகள் கோடுகளாக தெரிந்தன. “இதே வழியிலதான்… சில மணி நேரம் முன்னாடி சைக்கிள்ல வந்தேன்.” அவன் குரல் உடைந்தது.
வேகத்தடைக்கு இருபதடி அப்பால் அது கிடந்தது. மானின் கழுத்திலும் விலாவிலும் ரத்தக் காயங்கள்.
காவியா, “அங்கப் பாரு. கன்ஸ்ட்ரக்ஷன்ல ப்ளூ ஷீட்ஸ் போட்டிருக்காங்க. ஒருவேளை எங்கப் போறதுன்னு தெரியாம ரோட்டைக் கிராஸ் செய்யும்போது கார் இடித்திருக்கவேண்டும்,” என்றாள்.
“அதுங்களுக்கு எப்படி வழி மறந்துபோகும்?” என்றேன்.
கோபத்தோடு, “நாய்ங்க துரத்தியிருக்கலாம்,” என்றாள்.
பிரதீப் அவள் சொற்களைத் தடை செய்வது போன்று, “டோண்ட் பீ சில்லி காவியா. உடனே பிரச்சனை பண்ணி பொலிடிக்கல் ஆக்கனுமா?” என்றான்.
என் உடல் தளர்ந்து என்னுடைய பெருமூச்சே என் காதுகளில் கேட்டன. கேமராவைத் தரைமட்டத்திற்கு இறக்கி, மானின் திறந்த கண்களும், பின்னாலிருக்கும் சாலையும் ஒரே சட்டத்தில் வருமாறு ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.
பிரதீப் மானின் கண்களை மூடிய தருணம், மன்னிப்புக் கோரலைப் போல இருந்தது.
அரங்குக்குத் திரும்பாமல் நேரே என் விடுதிக்குத் திரும்பினேன். பிரதீப் அவன் மிதிவண்டியில் என்னோடு வந்தான். அரங்கை விட்டு எதிர்த்திசையில் செல்லச்செல்ல ஓசை குறைந்துகொண்டு வந்தது. விடுதியருகில் செல்லும்போது பாடலின் வரிகள் மறைந்து, தாளத்தின் முழக்கங்கள் மட்டும் அதிர்ந்தன. காற்றில் கமழ்ந்து வந்த முல்லைப்பூவின் மணம், அப்போது ஏனோ அருவெறுப்பையும் குமட்டலையும் உண்டாக்கியது. என் கண்கள் சாலையின் கீழும் இடவலமும் மாறிமாறி பார்த்துக்கொண்டேயிருக்க, கெண்டைக்கால் கிடுகிடுக்க மிதிவண்டியை அழுத்திச் சென்றேன்.
என் விடுதியின் வாசலில், பிரதீப் என் தோள்களைப் பற்றித் தேற்றினான். நான் என் உடலைச் சற்று முன்னால் உந்தினேன். ஆனால் அவனோ, என் அசைவை அறியாதவன் போல கைகளை மெல்ல விலக்கி, “சரி, போய் தூங்கு,” என்றான்.
அவன் இருளில் மறைந்த பிறகு, மிதிவண்டியில் காற்று குறைவாக இருப்பதைக் கண்டு, பாதுகாவலர் மேசையின் அருகேயுள்ள மின்காற்றழுத்தியை இயக்கிச் சக்கரங்களில் காற்றடைத்தேன். அந்த இயந்திரச் சத்தத்திற்கு, வழக்கமாக என்னைக் கண்டதும் குரைக்கும் அந்த இரண்டு விடுதி நாய்களும் அன்று அமைதியாக இருந்தன. என்னுள் எஞ்சியிருக்கும் அச்சத்தை அவை மோப்பம் உணர்ந்துகொண்டனவோ, அல்லது இசைவிழாவின் பேரிரைச்சலுக்கு அஞ்சி நடுங்கிவிட்டனவோ – மாடிப்படியின் அடியில் உடல் சுருண்டு படுத்திருந்தன. எம்முறையிலும் அறியாத பலரின் குதூகல கட்டியணைப்புகள், பிரியர் ஒருவரின் ஒற்றைத் தழுவலுக்கு எவ்வகையிலும் நிகராகாது என்று அப்போது தோன்றியது.
அன்று பாதியிரவில், ஏதோவோர் ஒற்றை மணிக்குரல் கேட்டு விழிப்பு தட்டிக்கொண்டே இருந்தது.
வந்திருந்த சாதாரண மழைக்கால முன்னறிவிப்புகளையெல்லாம் பொய்யாக்கி, அந்த டிசம்பர் புயல்மழை இத்தனை சீற்றம்கொண்டு பேருருவம் எடுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நகரமே பெருங்காற்றுக்குத் தள்ளாடி, மழைப்போர்வைக்குள் சுருண்டு, நிறமிழந்து நின்றது. இரண்டு நாள், மூன்று நாள் என தொடர்ந்து, பல ஆண்டுகள் பெய்யும் கணக்கை, சில நாட்களில் கொட்டித் தீர்த்தது.
முதல் நாளிலேயே பாதுகாப்பு கருதி எல்லா மின்னிணைப்புகளையும் துண்டித்துவிட்டார்கள்.
“காவியா, நீ ரூமுக்கு எப்போ வர? உன் ரூம் பூட்டியிருக்கு.” குறுஞ்செய்தி.
“சி பிளாக்ல ஹெல்ப் தேவைன்னு வந்தேன். மாட்டிக்கிட்டேன்டீ. பத்திரமா இருந்துக்கோ.”
“இங்கே வா,” என்று எழுதிவிட்டு, அதை அனுப்பாமல் அழித்தேன்.
முதல் நாள், பக்கத்து அறைகளில் உள்ள நண்பர்களோடு பேசிக் கழிந்தன பொழுது துளிகள்.
பிரதீப்பை அழைத்தபோது, செல்பேசியில் மழையின் இரைச்சலையும் மீறி நாய்களின் சத்தம் கேட்டது. “இப்பக்கூட நாயைத் துரத்தப் பாக்கறானுங்க டீ.”
காவியாவுக்கு, “இங்கே வா,” என்று என் கை விரல்களால் ஓட்டப்பந்தயம் போல் விரைவாக மறுபடியும் தட்டிவிட்டு, அதை அதே வேகத்தில் மறுபடியும் அனுப்பாமல் அழித்தேன். அவளுடைய அருகாமையின்மை கோபத்தையும் அழுகையையும் ஒருங்கே வரவழைத்தது.
மௌனம் மட்டுமே துணையாக நின்ற இரவு, மெழுகுவர்த்தியின் வெம்மையோடு கரைந்தது. மெழுகுவர்த்தியின் ஒளி, அதைச் சுற்றி சிறிய வட்டத்திலுள்ள பொருட்களை மட்டும் காண்பித்தது. அதை அணைத்தப் பின்பு, சன்னலின் வழி காடு முழுவதும் என் கண்களுக்குப் புலப்பட்டன.
இரண்டாம் நாளும் மீண்டும் முதல் நாளோ எனத் தோன்றுமளவுக்கு, வெளியில் எந்த மாற்றமும் இல்லை. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதே ஓசை. அதே நீர் விழும் ஓசை. ஆகாயத்திலிருந்து அதே பெரும் ஆற்று நீர் விழும் ஓசை. அறையின் உள்ளேயே அடைந்து கிடப்பதை விடுத்து, வெளியே பால்கனி நடைத்தளத்துக்குச் சென்றேன். மழைச்சாரலுக்குப் பயந்து சுவரோரம் அண்டாமல், கைப்பிடிச் சட்டத்தைப் பிடித்து நின்றுகொண்டு நனைந்தேன்.
என் முதல் மாடி அறையின் சுவரெல்லாம் காட்டின் மூச்சுப்பட்டு ஈரம் பூத்திருந்தன. சன்னலில் அடிக்கப்பட்டிருந்த கொசுவலைச் சட்டகத்தின் ஓரத்தில் இருந்த இடைவெளியின் வழியே கருவண்டொன்று உள்ளே நுழைந்தது. மழையின் இரைச்சலைப் பின்னணி சுருதியாகக் கொண்டு, அது மர அலமாரியின் விளிம்பில் அமர்வதும், பின் ரீங்காரத்துடன் எழுந்து பறப்பதுமாக அலைபாய்ந்தது.
நேரம் பார்ப்பதற்குச் செல்பேசியில் சார்ஜும் இல்லை; அறையில் எந்தக் கடிகாரமும் இல்லை. பசியெழுந்தபோது காலை தாண்டி மதியம் ஆகியிருக்கும் என்று தோன்றியதால் அலமாரியில் உள்ள பிரெட்டை எடுத்தேன். இந்தப் புயலில் ஓரியோ எங்கிருக்கும் என்ன சாப்பிடும் என்று நெருஞ்சி முள் இறங்கிய பாதம் போல் என் மனம் பதறியது. சாத்திய அறைக்குள் மூச்சடைப்பது போல் இருந்தது. கதவைத் திறந்தவுடன் ஒரு பிரம்மாண்டமான உயிரினத்தின் பெருமூச்சுபோல் என் முகத்தில் வெளிகாற்றும் மழையொலியும் அறைந்தன. அந்தத் தண்ணென்ற குளுமையை என் சுவாசம் அள்ளிப் பருகியது. புறத்தே அகண்ட வெளியைக் கண்டவுடன், காட்டிலிருக்கும் குரங்குகளைப் பற்றி மான்களைப் பற்றி மிருகங்களைப் பற்றி, மற்ற எல்லா தனித்தனி உயிர்களைப் பற்றியும் கவலை மூண்டது.
விடுதியின் தரைத்தளம் முழுக்கவே செம்மண் கலந்த நீர் படர்ந்திருந்தது. அறைகள் நிலத் தளத்திலிருந்து சற்று உயரத்தில் இருந்ததால், முழு நீரும் உள்ளே புகவில்லை. ஆனால் உச்ச மழையின் போது உள்ளே வந்திருந்ததை அறிய முடிந்தது. மாணவர்கள் தங்கள் பொருட்களையெல்லாம் அலமாரியின் மேல் இரண்டு அடுக்குகளில் திணித்திருந்தனர். அறைகளின் தரைகளில் பழுப்பான நிறம். உள்சுவர்களின் கீழோரத்தில், தரையிலிருந்து இரண்டு சென்ட்டிமீட்டர் உயரத்தில், தண்ணீர் வந்து வற்றியதற்கான பழுப்புக் கோடு. சேறு படிந்த தரையில், பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதற்கான வளைவான தடம். பெரும்பாலானவர்கள் தங்கள் அறையைவிட்டு, முதலாம் இரண்டாம் தளங்களில் இருக்கும் மற்றவர்களின் அறைகளில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
மூன்றாம் நாள் காலையில் மழை குறைந்துகொண்டு வந்தது. கதவின் அடியிடைவெளி வழியே அறைக்குள் புகுந்த மரவட்டை, தரையில் ஓர் உயிர்பெற்ற கருங்கயிறு போல நெளிந்து வந்தது. அதன் நூற்றுக்கணக்கான கால்கள் அலையலையாக நகரும் அந்த லயத்தைப் பார்த்தபோது, அவை என் தோல் மீதே ஊர்வது போன்றதொரு கூச்சம் உடலெங்கும் பரவிப் பற்கள் கூசின.
வழக்கமாக இதற்கெல்லாம் காவியாவைத் தேடும் பழக்கத்தைக் கைவிட்டு, நானே ஒரு காகிதத்தை எடுத்தேன். அதைக் காகிதத்தில் ஏற்ற முயன்றபோது, அத்தனை கால்களும் எப்படித் தங்களுக்குள் இடித்துக்கொள்ளாமல், ஓர் ஒத்திசைவுடன் இயங்குகின்றன என வியப்பு மேலிட்டது. இதை இயக்குவது அதன் தலைக்குள் இருக்கும் ஒற்றை மூளைதானா? இல்லை… அதன் உடல் முழுக்கத் தொடர்ச்சியாக நரம்பணுத்திரள்கள் அமைந்திருக்கும் என்று வாசித்தது நினைவுக்கு வந்தது. அந்தத் திரள்கள் ஒவ்வொன்றும், தங்கள் எல்லைக்குட்பட்ட கால்களைத் தனித்தனியே நிர்வகிக்கக் கூடியவை. இத்தனை தனித்தனி மையங்கள் இருந்தாலும், அது ஓர் ஒற்றை உயிராய், பிழையின்றிக் கோக்கப்பட்டு நகர்கிறது! அந்த முழுமைக்குத்தான் நாம் ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறோம்.
மின்னிணைப்பு மீண்டபோது செல்பேசியில் சிறிது சார்ஜ் ஏற்றிவிட்டு, கழுத்தில் கேமராவை மாட்டிக்கொண்டு கீழே இறங்கிச் சென்றேன். வாசலில் வழக்கமான இடத்தில் இருக்கும் பாதுகாவலருக்கான மேசையில், விருந்தினருக்கான கையெழுத்திடும் வருகைப் பதிவேடு இல்லை. அதனருகே பேனா இல்லை. மேசையின் ஓரத்தில் இரவுக் குளிருக்கான மஃப்ளர் இல்லை; விசிலும் டார்ச் லைட்டும் இல்லை. மேசையும் நாற்காலியும் கூட அங்கில்லை. அவருமே இல்லை.
விடுதியின் அடங்கிய நிலத்தளத்திலிருந்து மேல்நோக்கி சரிவாக எழுந்த சாலையில் தண்ணீர் அவ்வளவு வெள்ளமாக இல்லை. எந்த மிதிவண்டியும் மோட்டார் வண்டியும் செல்லவில்லை. தரை முழுக்க சிறு சிறு இலைகள் பரவிக் கிடந்தன. வணங்கியெழும்போது சிதறும் மங்கல அரிசி போலவோ, வெட்டப்பட்ட பலித்தலையின் குருதித் தெறிப்பு போலவோ அவை கிடந்தன.
மாணவிகள் பெரும்பாலும் விடுதிக்குள்ளே இருந்தனர். பொதுவான நாட்களின் இரவிலும் முன்விடியலிலும்கூட பலரின் கால் தடங்களைப் பெற்றுக்கொள்ளும் வளாக வெளியில், இப்போது பத்து மனிதக்கால்கள் கூட காணப்படவில்லை. பழக்கப்படுத்தப்பட்ட கால்கள் செல்ல, வகுக்கப்பட்ட பாதைகள் இல்லை. கிளைகள் முறிந்து வழி நெடுகக் கிடந்தன. காலடி எடுத்து வைத்தாலே, ஏதேனும் ஒரு சுள்ளி அல்லது கிளையின் மீதே மிதிக்க வேண்டியிருந்தது. இதே வழியை ஆண்டுகளாகப் பழகிய கண்களும் கால்களும், இப்போது அதே இடத்தில் புது காட்சியைக் காண்பதால் தடுமாறின. மண்ணிலிருந்தும் பச்சையிலைகளிலிருந்தும் எழும் ஈரப்பத வாசனை, மென்குளிராக சுவாசத்தை நிறைத்தது. விழுந்த பெருங்கிளைகளைத் தாவியும் தள்ளியும் நகர்த்தியும் செல்ல வேண்டியிருந்தது. வாழ்வதற்கல்லாமல் பெய்த சரமழை.
வேரோடு சாய்ந்த ஒரு முழு வேப்பமரம் சாலையின் குறுக்கே கிடந்தது. குறைந்தபட்சம் இருசக்கர வாகனங்களாவது செல்ல வழியமைத்துக்கொடுக்க, அதைச் சுற்றி ஐந்தாறு பேர் நின்றுகொண்டு, சாலையிலிருந்து அப்புறப்படுத்த முயன்றுகொண்டிருந்தனர். இரண்டு மாணவர்களும் மூன்று நான்கு பணியாளர்களும் இருந்தனர். சாலையின் குறுக்கே விழுந்ததை நிமிர்த்த முடியாது என்பதால், அதை அப்படியே திருப்பி சாலையின் பக்கவாட்டில் ஒதுக்க முயன்றுகொண்டிருந்தனர். நானும் மெல்ல நெருங்கி, என் இரு கைகளாலும் மரத்தைப் பற்றித் தூக்க உதவினேன். தூக்கும்போது மரப்பட்டையின் சொரசொரப்பு என் கைகளை உராய்வதை உணர்ந்தேன்.
அவர்கள் ஏற்கனவே இடையூறாக இருந்த வேம்பின் கிளைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டிப் போட்டிருந்தனர். விழுந்த முழு வேம்பையும் அதன் பரந்த கிளைகளோடு தூக்க முடியாது என்று அப்போதுதான் எனக்கு உரைத்தது. இப்போது மரத்தின் அடிப்பகுதி மட்டுமே சாலையின் குறுக்கே எஞ்சியிருந்தது. கிளைகள் வெட்டப்பட்ட இடங்களில், மரத்தின் உள்ளடுக்குகள் பளிச்சென்று வட்டவட்டமாகத் தெரிந்தன. அனைவரும் சேர்ந்து தள்ளியும் தூக்கியும் நகர்த்தினோம்.
மரங்களின் மத்தியிலேயே நடந்தும் ஓடியும் மிதிவண்டியோட்டியும் விழைந்தும் அழுதும் சிரித்தும் - இத்தனை ஆண்டுகள் மரங்களின் நடுவே வாழ்ந்திருந்தாலும், என் விரல்கள் ஒரு மரத்தின் உடலைத் தொடுவது இதுவே முதல்முறை. மரப்பட்டையின் ஒவ்வொரு செதிலும் என் கைரேகையில் பதிந்தது. நெருங்கிப் காணும்போது முதிர்ந்த ஒருவரின் தோல் சுருக்கங்களைப் போலவே அது காட்சிமயக்கம் அளித்தது.
மரத்தைத் தூக்கிக் கிடத்தியப் பின் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். எதுவும் பேசத் தோன்றவில்லை. அவர்களும் ஒன்றும் சொல்லாதபோது எங்கள் மனநிலை ஒன்றே என அறிந்தேன். சாலையில் விழுந்த இடம் இப்போது காலியாக இருந்தது. உள்ளங்கைகளில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விடாமலேயே அங்கிருந்து நடக்கத்தொடங்கினேன். சிராய்ப்பிலிருந்து கசிந்த ரத்தம், ஒரு சுள்ளெறும்பு வரிசை போல என் கையில் ஊர்ந்து இறங்கியதை உணர்ந்தேன்.
செல்பேசியில் சிக்னல் உயிர்பெறத் தொடங்கியதும் பிரதீப்புக்கு ‘எல்லாம் சரியா?’ எனக் கேட்டு செய்தி அனுப்பினேன். உடனே அவனுடைய அழைப்பு மணியதிர்வு கேட்டது. என் மனம் அவனிடம் பேசுவதை விரும்பவில்லை. ‘குறுஞ்செய்திகளே போதும்’ என்று சொன்னேன்.
ஆண்கள் விடுதியில் நண்பர்கள் அனைவரும் குழுக்களாகவே ஒரே அறையில் தங்கியிருப்பதாகவும், செல்பேசி அணைந்த பின்பு தன்னுடைய கித்தார் இசையைக்கொண்டு அவர்களோடு நேரம் கழிந்ததாகவும் கூறினான்.
குறுஞ்செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும்போதே, எதிரில் பின்பக்கம் கூரையில்லாத ஒரு சரக்கு வண்டி வந்துகொண்டிருந்தது. எங்கள் விடுதிக்குத்தான் சென்றுகொண்டிருக்க வேண்டும். வண்டிக்குப் பின்னால் இரண்டு பெரிய அண்டாக்கள். அவற்றிலிருந்து எழுந்த சோற்று மணமே எனக்கு வெம்மையை ஊட்டியது.
அந்த வண்டியிலிருந்து காவியா இறங்கி வந்தபோது முதலில் ஆச்சரியப்பட்டாலும், அவள் இயல்பே இதுதானே என்று மறுகணமே சமாதானம் அடைந்தேன்.
“இருக்கிற அரிசி மூட்டையை வச்சு மெஸ்ல சமைச்சிருக்காங்க. ஆனா, சாயங்காலம் மளிகை சாமான் வர ஆரம்பிச்சுடும்னு நினைக்கிறேன். இன்னுமே இன்ஸ்டியில பல சாலைகள் கிளியர் ஆகல. நம்ம மெயின் ரவுண்டானா பக்கத்துலேயே நிறைய மரம் விழுந்துருச்சாம். இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா கிளியர் பண்ணிட்டு வராங்க.”
“நான் நடந்து வரும் வழியிலும் அப்படித்தான் இருந்தது,” என்றேன்.
உடனே, உணவு விநியோகிக்க அவள் விடுதிக்குச் சென்றுவிட்டாள்.
என் கால்கள் எங்கு பயணிக்கின்றன என்று இன்னும் என்னால் கணிக்க முடியவில்லை. எந்தத் திசையில் திரும்பினாலும் எனக்கு அப்படித்தான் தோன்றியிருக்கும். மெஸ் கட்டிடத்தைக் கடந்து, மற்ற விடுதிகளையும் கடந்து, மரங்கள் பூதக் கால்களோ எனத் தோன்றுமளவு அடர்ந்திருக்கும் பகுதிக்குள் சென்றேன். எங்கு நோக்கினும் காடே. காட்டின் நடுவே, மரங்கள் சாய்ந்தும் விழுந்தும் கிடந்தன.
மரங்களில் குரங்குகளின் அசைவுகள் கேட்டன. ஒரு குட்டி, விழுந்த மரத்தின் மீது இயல்பாகக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தது. தாய்க்குரங்கு தன் வாலால் குட்டியைப் பிடித்தும் பிடிக்காமலும், ஒரு மெல்லிய சமநிலையில் தாங்கிக்கொண்டிருந்தது.
தொலைவில், புற்கள் நிறைந்த சிறிய வெளியில் மூன்று பெண் பிளாக்பக்குகள் பழுப்பு நிறத்தில் தெரிந்தன. முதுகு அடர்கருப்பாகவும் வயிறு வெள்ளையாகவும் அமைந்த ஆண் ஒன்று ஓரத்தில் மேய்ந்துகொண்டிருந்தது. ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கிய வளையல்களைப் போல, முறுக்கியச் சுருள்களைக் கொண்ட நீண்ட கொம்புகள். அந்தப் பச்சைப் பின்னணியில் உடல் வெளிறிய அல்பினோ மான்குட்டி ஒன்று நின்றுகொண்டிருந்தது. தன் சிறிய கால்களால் பெண் மான்களின் கால்களுக்கு அருகேயே அண்டியிருந்தது.
ஈரமண் மீது நின்றிருந்த என் வெறுங்கால்களில் எறும்புகள் ஊர்ந்து சென்றன. கேமரா பயன்படுத்தப்படாமல் என் மார்போடு ஒட்டியே இருந்தது. கரும்பச்சைப் பின்னணியில் அந்த வெண்மான்குட்டி, துள்ளிக் குதித்து, கீழே விழுந்து கிடந்த அந்த மரத்தை – மெய்வருத்தும் முயற்சி ஏதுமின்றி – வானவில்லின் வளைவு போல ஒரே தாவலில் கடந்தோடியது. மழைத்துளியை ஏற்றுக்கொண்ட முல்லையின் நறுமணம் என் நாசியை நிறைத்தது. அந்த நான்கு சிறிய குளம்புகள் மண்ணில் பதிந்த அடையாளம், இங்கே பதிந்த எண்ணற்ற கால்களின் தடங்களோடு கலந்தது.