விஜய் ரெங்கராஜன்

2012

குறும்பா 30 (குறுந்தொகை 117) · 11 ஜூலை

அவன நெனச்சு நெனச்சு மெலிஞ்சுப் போனாலும், உன்னோட மெலுசான கைக்கு வளையக்காரங்கிட்ட சின்னதா வளை இருக்காதா என்ன? இருக்கூ.

செறகுமேல தண்ணி படர்ந்து - மழையில நனஞ்ச ஆம்பலப்போல - கொக்கு, தண்ணீயே கவனமா பாத்துட்டு கிடுக்கு. அதோட பார்வயிக்கி அஞ்சி, நண்டு, கண்டல்வேருக்கு எடேயில உள்ள வளைக்குள்ள - கயிற அவுத்துக்கிட்டுப் போற காளமாடுமாதிரி - சர்ருன்னு போய்டுச். ஆனா, தோழி, நீ அப்டி இருக்காத. உங் காதலன், கொஞ்சநாள் வரலன்னு கவலப்படிஞ்சு போய்டாத. அவன நெனச்சு நெனச்சு நீ மெலிஞ்சேப் போனாலும், உன்னோட மெலுசான கைக்கு நம்மூர் வளையக்காரங்கிட்ட சின்னதா வளை இருக்காதா என்ன? இருக்கூ.

மாரி யாம்ப லன்ன கொக்கின்
பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர்
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினு மமைக
சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே

(குன்றியனார்)

குறும்பா 29 (குறுந்தொகை 244) · 10 ஜூலை

நா நவுறவேமுடியாதமாதிரி என்னக் கட்டிப்பிடிச்சு என்தாய் தூங்குறா. நா என்ன பண்ணட்டூ.

எல்லாரூ தூங்குற, பேரமைதியான, செவுத்துக்கோழிமட்டும் நள்ளுன்னு சத்தம்போட்டுட்டு இருக்குற ராத்திரியில வந்து நீ கதவத்தட்டித் திறக்கப் பாத்தத, நா கேக்காம இல்ல. கேட்டேன். மொதலக்கிட்ட மாட்டுன யானையோட வலிமாதிரி நெஞ்சுல வலியோடயூ ஏக்கத்தோடயூ நீ திரும்பியிருப்ப. அழகான மயில், வலையில மாட்டிகிட்டா, அதோட கொண்ட செதஞ்சு, தோக உதிஞ்சு, அதால ஒன்னுமே பண்ண முடியாம ஆயிடும். அதுமாதிரிதான், நா நவுறவேமுடியாதமாதிரி என்னக் கட்டிப்பிடிச்சு என்தாய் தூங்குறா. நா என்ன பண்ணட்டூ.

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல்
கேளே மல்லேங் கேட்டனம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கு மறனில் யாயே

(கண்ணன்)

குறும்பா 28 (குறுந்தொகை 85) · 23 ஜூன்

ஆண்குருவி பெண்குருவிக்கு, வெண்பூக்களா கொண்டுவந்து மெத்துன்னு கூடுஅமைச்சுதரூ. அவன் உன்ன எப்போதுமே மகிழ்ச்சியா வெச்சுருப்பான்.

தோழீ வெளீல பாணன் வந்துருக்கான். என்ன சொல்லறானு கேளேன். தலைவன் எல்லாரவிடவூ’ இனிமையானவனாம்; ஒன் மேல ரொம்ப அன்பு வெச்சுருக்கானாம். அவன் ஊருல புதுசா கரும்பு வெளைவிச்சுட்டு இருக்காங்களாம்; அதனால அவனுக்கு நெறைய்ய பொன்னு வருதாம். உள்ளூர்ல இருக்குற ஆண்குருவி, நெறமாசமா இருக்குற பெண்குருவி முட்டையிடுறத்துக்காக, அங்கியும் இங்கியும் அலஞ்சு திரிஞ்சு, தேன்மாதிரி சுவைப்பொதிஞ்சு, இனியக்கோல்மாதிரி இருக்குற கரும்பக் கண்டுக்காம, அதோட மணம்வீசாத வெள்ளப்பூவ கொத்திட்டுவந்து, பெண்குருவிக்கு மெத்மெதுன்னு கூடு அமைச்சுத்தரும். அதுமாதிரி, தலைவன் உன்ன நல்லாவச்சுக்கறதுக்காகவே எப்போதும் உழைச்சுட்டு இருப்பாங்கறான்.

யாரினு மினியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாண ரூரன் பாணன் வாயே

(வடமன் தாமோதரன்)

குறும்பா 27 (குறுந்தொகை 163) · 21 ஜூன்

யே கடலே, இந்த நடுநிசியிலூ ஓயாம ஒஞ்சத்தங் கேக்குது. நீ யார நெனச்சு நெனச்சு வருத்தப்பட்டு, என்னப்போலவே தூங்காம இருக்க ?

பூழியரோட சின்னத்தலையக் கொண்ட வெள்ளாடுகளமாதிரி, குருகு பறவைங்க வெள்ளக்குவியலா கடற்கரையோரமா இருக்குற சோலையில தூங்கிட்டு இருக்கு. அந்தச் சோலையச் சூழ்ந்த துறையில வெள்ளையாப் பூப்பூத்துருக்குற தாழைப்புல்லுக மேல, அலையடிக்கிற கடலே, சில்வண்டுக நள்ளுன்னு சத்தம் பண்ணிட்டு இருக்குற இந்தக் கருமையான நடுநிசியிலூ ஓயாம ஒஞ்சத்தங் கேக்குது. நீ யார நெனச்சு நெனச்சு வருத்தப்பட்டு, என்னப்போலவே தூங்காம இருக்க ?

யாரணங் குற்றனை கடலே பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே

(அம்மூவன்)

குறும்பா 26 (குறுந்தொகை 25) · 20 ஜூன்

அந்தக் கள்வன்மட்டும் வந்து பெண் கேக்கலேன்னா நா என்ன செய்வேன் ! அபூர்வமா கண்லப்படற செங்குருகுமட்டுந்தான் சாட்சியா இருந்துச்.

நானூ அவனூ களவுமணம் செஞ்சுகிட்டப்போது வேற யாருமே பக்கத்துல இல்ல. அவன் கொஞ்ச கிழமையிலேயே வந்து திருமணத்துக்குப் பெண் கேப்பதாச் சொல்லியிருந்தான். அந்தக் கள்வன்மட்டும் வந்து என்னப் பெண் கேக்கலேன்னா, நா என்ன செய்வேன் ! தினைப்பயிரோடக் காலமாதிரி சின்னதா மென்மையானக் காலக்கொண்ட செங்குருகு, வயல்பக்கத்துல ஓடுற நீருல ஆரல்மீன எதிர்ப்பாத்து, புதர்ல மறஞ்சு காத்துட்டு இருக்கும். அதக் கண்லகாண்றதே அதிசயம். அப்படி அபூர்வமா கண்லப்படற செங்குருகுமட்டுந்தான் எங்க களவுக்குச் சாட்சியா இருந்துச்.

யாரு மில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே

(கபிலர்)

குறும்பா 25 (குறுந்தொகை 202) · 13 ஜூன்

நெருஞ்சிச்செடி மொதல்ல அழகா மஞ்சநெறமா பூவு பூத்துநிக்கும். ஆனா கொஞ்சநாள் கழிச்சுப்பாத்தா, முள்ளா நெறஞ்சு கெடக்கும்.

என் நெஞ்சு வருந்துதுடீ; வருந்துது.

முல்லநெலத்துல பூக்குற நெருஞ்சிச்செடியப் பாத்திருக்கியாடீ. சின்னச்சின்ன எலைங்களுக்கு நடுவுல, மொதல்ல அழகா மஞ்சநெறமா பூவு கண்ணுல ஒத்திக்கிறமாதிரி பூத்துநிக்கும். ஆனா கொஞ்சநாள் கழிச்சுப்பாத்தா, செடிமுழுசும் முள்ளா நெறஞ்சு கெடக்கும்.

மொதல்ல நல்லவன்மாதிரி இனிமையா என்கிட்ட பேசுன அவன், இப்போ பாரு, என்னவிட்டுட்டு அவக்கூட சுத்திகிட்டு இருக்கான். என் நெஞ்சுல முள்ளு குத்திக் கிழிச்சாப்போல வலிச்சுட்டு இருக்கு.

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்த னோமென் னெஞ்சே

(அள்ளூர் நன்முல்லை)

குறும்பா 24 (குறுந்தொகை 68) · 12 ஜூன்

எம்மேல தாங்கமுடியாத குளிரு படர்ந்து வாட்டிட்டு இருக்கு. இதுக்கு வேற எந்த மருந்தும் வேண்டா, நான் கட்டியணச்ச அவனோட மார்பத்தவர.

நம்ம புஞ்சையில பயிரிட்டுருக்குற உளுந்தோட காலப்பாத்தீன்னா, கொஞ்சமா வேரு வெளியத்தெரிஞ்சு, உளுந்தோட அடித்தண்டு காடையோடக் கால அச்செடுத்தாமாதிரியே இருக்கும். இந்த முன்பனிக்காலத்துல உளுந்தோடக் காயெல்லாம் முதிஞ்சுபோய் இருக்கும். அந்தக் காய்ங்கள மானுங்க வந்து சத்தம்போடாம கவர்ந்து சாப்ட்டுட்டு இருக்கும்.

இதே முன்பனிக்காலத்துல பாரு தோழீ, எம்மேல தாங்கமுடியாத குளிரு படர்ந்து வாட்டிட்டு இருக்கு. இதுக்கு வேற எந்த மருந்தும் வேண்டா, நான் கட்டியணச்ச அவனோட மார்பத்தவர.

ஆனா இந்த என் துன்பத்தத் தீக்க, முதிஞ்சுபோய்கிட்டு இருக்குற என்னக் கவர, அவன் எங்கூட இல்லயே.

பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்
ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும்
அரும்பனி யச்சிரந் தீர்க்கும்
மருந்பிறி தில்லையவர் மணந்த மார்பே

(அள்ளூர் நன்முல்லை)

குறும்பா 23 (குறுந்தொகை 160) · 1 ஜூன்

இப்படி என்ன பாக்கக்கூட முடியாம இருக்கற அவர், இங்க வந்து கல்யாணத்துக்குப் பொண்ணு கேக்கப் போறாராக்கும்.

இந்த நட்டநடு ராத்திரியில், இதைவிட கருமையில்லை என்று சொல்லறமாதிரி இருக்கிற ராத்திரியில், நெருப்புப்போல செந்நிறமான தலையக்கொண்ட ஆண் அன்றில் பறவையும், இறாலப்போல வளைஞ்ச அருவாப்போல அலகக்கொண்ட பெண் அன்றில் பறவையும், தடா மரத்துமேல கட்டியிருக்கிற கூட்டுல உட்கார்ந்து, சேர்ந்து ஒலியுழுப்பி அளவளாவிட்டு இருக்கு. குளத்துலேர்ந்து எழற குளிர்ந்த வாடைக் காற்று வீசிட்டு இருக்கு. அவரு இன்னிக்கும் வரல தோழி. அவரு வர்றபோதே எனக்கு, ஒருவிதமா காத்துல வாசன வர்றமாதிரி, தெரிஞ்சுரும். இப்படி என்ன பாக்கக்கூட முடியாம இருக்கற அவர், இங்க வந்து கல்யாணத்துக்குப் பொண்ணு கேக்கப் போறாராக்கும்.

நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு
தடவி னோங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநங் காதலர் வரைவே

(மதுரை மருதன் இளநாகன்)

குறும்பா 22 (குறுந்தொகை 44) · 31 மே

வான்ல இருக்குற நட்சத்திரங்களப்போல நெறைய பேரு எதிர்ல வராங்க, ஆனா யாருமே ஓடிப்போன எம்மகளோ அவனோ இல்ல.

ஓஒ.. எங் காலு ரெண்டும் நடந்து நடந்து சோர்ந்து ஓஞ்சுருச்சு. எங் கண்ணு ரெண்டும் பார்த்துப் பார்த்து கலங்கி, ஒளி மங்கிப்போச்சு. எம் மகளும், அவனும் தனியாப் பிரிஞ்சு வேற ஊருக்குப் போய்ட்டாங்க. நான் அவங்களத் தேடிட்டுத்தான் இவ்வளவு தூரம் இந்தக் காஞ்ச பாலை நெலம் வழியா நடந்துட்டு இருக்கேன். எதிர்ல வர்றவங்க ஒவ்வொருத்தரையும் பார்த்து, இது அவங்களா இருக்கனுமே, இது அவங்களா இருக்கனுமேன்னு மனசு ஏங்குது.

இப்படிப் பாத்துப்பாத்து, கண்ணு மங்கி, எதிர்ல வர்றவங்க யாரப் பாத்தாலும் அவங்களாவே தெரியுது. ஆனா, பக்கத்துல போய் பார்த்தாத்தான், அவங்க இல்லன்னு தெரியுது. இப்படி, பெரிய அகண்ட வானம் மாதிரி இந்தப் பாலைநிலம். எண்ணிக்கையற்ற நட்சத்திரங்களப்போல, நெறைய பேரு வராங்க, ஆனா யாருமே அவங்க இல்ல.

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே

(வெள்ளி வீதியார்)

குறும்பா 21 (குறுந்தொகை 20) · 30 மே

பொருள் தேடற ஆற்றல்தான் அறிவுனா அவரு புத்திசாலியாகவே இருக்கட்டும். நான் மடச்சியாகவே இருந்துட்டுப் போறேன்.

ஒரு பெண்ணுங்கறதுனால அருளும் இல்லாம, மனைவிங்கறதுனால என் மேல அன்பும் இல்லாம, இப்படி என்னவிட்டுப் பிரிஞ்சுட்டார். பொருள் தேடறத்துக்காக என்னப் பிரிஞ்சுப் போய்ட்டார். பொருள் தேடற ஆற்றல்தான் அறிவுனா அவரு புத்திசாலியாகவே இருக்கட்டும். நான் மடச்சியாகவே இருந்துட்டுப் போறேன்.

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே

(கோப்பெருஞ் சோழன்)

குறும்பா 20 (குறுந்தொகை 280) · 29 மே

அவக்கூட ஒரு நாள் வாழ்ந்து, பேரின்பம் அனுபவிச்சா போதும்யா. அதுக்கப்பறம் அரைநாள்கூட வாழவேண்டா.

எல்லா நாளும் என் நெஞ்சுல பிணைஞ்சு இருக்கா. அழகிய கூந்தல் அவளுக்கு. பெரிய தோள். இளைய வயசு. மெலிதான உடம்பு. அவக்கூட ஒரு நாள் வாழ்ந்து, பேரின்பம் அனுபவிச்சா போதும்யா. அதுக்கப்பறம் அரைநாள்கூட வாழவேண்டா.

கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
நெஞ்சுபிணிக் கொண்ட வஞ்சி லோதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே

(நக்கீரர்)

குறும்பா 19 (குறுந்தொகை 337) · 28 மே

அவள் இப்படிப் பருவம் வாய்த்து என்னை வாட்டுகின்றாள். ஆனால் என்னை வாட்டுவது அவளுக்கே தெரியாது.

அவள் முலைகள் அரும்பி நிற்கின்றன. தலையில் அழகிய கூந்தல் புதிதாக வளர்ந்து, தோளின்மீது படர்ந்து, பின்பக்கமாக வீழ்கின்றன. முதன்முறையாக பற்கள் வீழ்ந்து, மீண்டும் அழகான, வரிசையான, வெண்மையான பற்கள் செதுக்கப்பட்டதுபோல் முளைத்து நிற்கின்றன. கன்னத்தில் ஒளிக்கீற்றாக சில பருக்களும் ஒட்டியிருக்கின்றன. அவள் இப்படிப் பருவம் வாய்த்து என்னை வாட்டுகின்றாள். ஆனால் என்னை வாட்டுவது அவளுக்கே தெரியாது. தோழி, பெரும் செல்வந்தரின் மகளான அவள், எப்படிப்பட்டவள்; கொஞ்சம் விவரியேன்.

முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்குவீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே

(பொதுக்கயத்துக் கீரந்தை)

குறும்பா 18 (குறுந்தொகை 371) · 27 மே

கையில உள்ள வளையல்கள் நெகிழ்ந்து அழறமாதிரி இருக்கு. உடம்பு சோர்ந்து வெளிறிப்போச்சு. இந்தக் காமநோய் என் அறிவையே மயக்கிடுதே.

தோழி, நமக்கு மலையோரத்துல, மேகம்லாம் சூழ்ந்தமாதிரி நிலம் இருக்கு. அங்க நாம நெல்லப் பயிரிட்டு இருக்கோம். மலையில கொட்டுற அருவியப் பயன்படுத்தி தண்ணி பாய்ச்சிட்டு இருக்கோம். இந்த வேலையெல்லாம் பார்வையிட அவர் போயிருக்கார்.

இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சும், எங்கையில உள்ள வளையல்கள் நெகிழ்ந்து, உருகி அழறமாதிரி இருக்கு. என் உடம்பு சோர்ந்து வெளிறிப்போச்சு. இந்தக் காமநோய், என் அறிவையே மயக்கிடுதே.

கைவளை நெகிழ்தலு மெய்பசப் பூர்தலும்
மைபடு சிலம்பி னைவனம் வித்தி
அருவியின் விளைக்கு நாடனொடு
மருவேன் றோழியது காமமோ பெரிதே

(உறையூர் முதுகூற்றன்)

குறும்பா 17 (குறுந்தொகை 401) · 26 மே

சிரிச்சுப்பேசி, கிண்டல் செஞ்சு ஆரமிச்ச எங்க நட்பு, அவன் உடல அனுபவிக்கிறவர போச்சு. ஆனா ஏன் திடீர்னு நின்னுருச்சு.

கடற்கர ஓரமா படர்ந்துருக்குற அடும்புகொடியோட பூவத் தண்ணீலக்கொட்டி, நெய்தல்பூ மாலைய அணிஞ்சு விளையாடிட்டு இருந்தோம். தண்ணீல முக்கிஎழுந்தா கூந்தல்ல தண்ணிசொட்டி சில அடும்புப்பூ கூந்தல்ல மாட்டிக்கும். இப்படி நாங்க விளையாடுறதப் பாத்து, நண்டுங்க பயந்துட்டு கடலுக்கு ஓடிடும். அப்பேற்பட்ட ஒருநாள்தான் அவனப் பாத்தேன். எங்க நட்பு, சிரிச்சுப்பேசி, கிண்டல் செஞ்சு வெளையாடறதுலேர்ந்து ஆரமிச்சுது. அப்படியே அவன் உடல அனுபவிக்கிறவர போச்சு. ஆனா ஏன் திடீர்னு நின்னுருச்சு. இது ரொம்ப வியப்பா இருக்கு. நான் ரொம்ப வேகமா இருந்துட்டேனா ?

அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரை மகளி ரஞ்சி யீர்ஞெண்டு
கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள்
நக்குவிளை யாடலுங் கடிந்தன்
றைதே கம்ம மெய்தோய் நட்பே

(அம்மூவன்)

குறும்பா 16 (குறுந்தொகை 2) · 25 மே

புதுசா குளிச்சுட்டு, தலைய லேசா சாய்ச்சு, பருத்தியால துவட்டிட்டு, நடந்து வர்ற காதலியே. உன் கூந்தலுக்கு என்ன மணம் தெரியுமா !

ஏ காதலியே. புதுசா குளிச்சுட்டு, தலைய லேசா சாய்ச்சு, பருத்தியால துவட்டிட்டு, நடந்து வர்ற காதலியே. உன் கூந்தலுக்கு என்ன மணம் தெரியுமா ! அங்கப் பாரு. நம்ப பூந்தோட்டத்துல அந்த வண்டு ரீங்காரமிட்டிருக்கு இல்ல. அதுக்கிட்ட கேட்டேன். ஏய் தும்பி, நீதான் தெனம்தெனம் அத்தனப்பூக்கள ஆராஞ்சு, மகரந்தத்தச் சேமிச்சுட்டு இருக்கற வாழ்க்கையையே வாழ்ந்துட்டு இருக்கியே, உண்மையச் சொல்லு. என் வீட்டுப் பூவச் சுத்திட்டு இருக்கறதுனால என்கிட்ட பொய் சொல்லக்கூடாது. எங்கிட்ட உயர்வான சிறந்த நட்பையும், மயிலமாதிரி மென்மையும், அழகா வரிசையா நெருக்கமா பற்களயும் உடைய எங்காதலியோட கூந்தலவிட நறுமணமுள்ள பூ உலகத்துல இருக்கா என்ன ?

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே

(இறையனார்)

குறும்பா 15 (குறுந்தொகை 72) · 24 மே

எல்லாருக்கும் தெரியறமாதிரி எந்த நோய் என்னத் தாக்குச்சு; இனிமையான அவப் பேச்சா, மென்மையான அவத் தோளா, திரண்ட அவ மார்பா. எது ?

யாராவது ஒண்ணு கேட்டா, நான் வேறெதோ பதில் சொல்றேன். சில நேரம் பதில் சொல்லாமயே போயிட்றேன். யாராவது வணக்கஞ் சொன்னாக்கூட, பதிலுக்கு மௌனமா இருந்தட்றேன். இப்படி எல்லாருக்கும் தெரியறமாதிரி எந்த நோய் என்னத் தாக்குச்சு ?

இன்னிக்கு மலையோரமாப் போயிருந்தேன். அவளப் பாத்தேன். தினை வயல்ல அத அறுத்ததுக்கு அப்றம் பருத்தி பயிரிட்டு இருந்தாங்க. அப்பக் குருவி ஓட்றத்துக்காக அவ வந்திருந்தா. அவக்கிட்டப் பேசிட்டு இருந்தேன்.

அவளோடப் பேச்சு அவ்ளோ இனிமையா இருந்துச்சு. அதுவா அந்த நோய் ?

அவளோடத் தோள் அவ்ளோ மென்மையா இருந்துச்சு. அதுவா அந்த நோய் ?

அவளோட மார்பு தாராளமா திரண்டு இருந்துச்சு. அதுவா அந்த நோய் ?

அவளோடக் கண்ணு. பூவப்போல அவக் கண்ணு. பாக்கறவங்கள மயக்கி, சுழல்ல மாட்டிக்கிட்டமாதிரி ஆக்கற கண்ணு. பெருசா, அழகா, பாக்கறவங்களுக்கு ஒருமாதிரி குளிர்ச்சியத்தர்ற கண்ணு. பார்த்தா, மழைச்சாரல்ல நனைஞ்சமாதிரி உணர்வத் தர்றக் கண்ணு. கண்டிப்பா ஆமா; அதுதான் அந்த நோய்.

பூவொத் தலமருந் தகைய வேவொத்
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்
பரீஇ வித்திய வேன்ற்
குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே

(மள்ளனார்)

குறும்பா 14 (குறுந்தொகை 84) · 23 மே

எம்மகளோட நிலைகொள்ளாத தவிப்பு என்னன்னு நேத்திக்கு எனக்குத் தெரியல. இன்னிக்குத் தெரிஞ்சிடுச்சு. அவனோடப் போய்ட்டா.

இங்கப் பக்கத்துல இருக்குற மலையில, பட்டும்படாதமாதிரி மழைமேகங்க தவழ்ந்துட்டு இருக்கும். அங்கப் போனாலே நம்மளச் சுத்திக் குளுமை சூழ்ந்துகிட்டு, சாரல் லேசா படர்ந்துட்டு இருக்கும். காத்துல வேங்கைமரத்து மலரும், காந்தள்மலரும் தங்களோட வாசனைய அலைபாயவிட்டிருக்கும். இதேமாதிரி மணம் நெறஞ்சவ எம்மகள்; அங்கப் பூக்குற ஆம்பல் மலரவிடக் குளுமைமிக்கவ எம் மக.

நான் எப்பவும் போலத்தான், நேத்திக்கு எம் மகளைத் தோளாறக் கட்டித் தழுவினேன். ஆனா அவ, எனக்கு வேர்க்குது, அப்படீன்னா. அவ அப்படிச் சங்கடப்பட்டதுக்குக் காரணம், நேத்திக்கு எனக்கு விளங்கல. ஆனா, இன்னிக்கு எனக்குப் புரிஞ்சுடுச்சு. என்னப்பிரிஞ்சு அவனோடப் போய்ட்டா.

பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றனள்
இனியறிந் தேனது துனியா குதலே
கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையுங் காந்தளு நாறி
ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே

(மோசிகீரனார்)

குறும்பா 13 (குறுந்தொகை 229) · 22 மே

சின்ன வயசுல முடிய இழுத்துச் சண்டப்போட்டவங்க, இப்போ மாலை மலர்களமாதிரி பிணைஞ்சு இருக்காங்க. ஓ விதியே, நீ நன்மையுடையதுதான்.

அட, இங்கப்பார்றா. சின்ன வயசா இருக்கும்போது, இவன் இவளோட பிண்ணினக் கூந்தலப் பிடிச்சு இழுத்துவிட்டுக் கிண்டல் பண்ணுவான். அவளும், சளைக்காம அவனோடப் பரட்டத்தலையக் கலைச்சுவிட்டுட்டு ஓடிடுவா. அவங்க ரெண்டுப்பேர் சண்டைய செவிலித்தாய்ங்கதான் நிறுத்திவெப்பாங்க. எப்போப்பாத்தாலும் சண்டப்போட்டுட்டு, ரெண்டுப்பேருக்கும் என்னப் பண்ணாலும் ஒத்தே வராதுங்கறமாதிரி இருந்தாங்க.

இப்போ பாரு. மாலையில இருக்குற மலர்களமாதிரி, பிண்ணிப் பிணைஞ்சு, ஒருத்தரவிட்டு ஒருத்தர் பிரியாம இருக்காங்க.

ஓ விதியே, நீ நன்மையுடையதுதான்.

இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்
றுணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மணமகி ழியற்கை காட்டி யோயே

(மோதாசனார்)

குறும்பா 12 (குறுந்தொகை 8) · 21 மே

கனிஞ்ச மாம்பழம் குளத்துல விழுது. வாளைமீனு அதக் கவ்விச் சாப்புடுது. தோப்புக்காரர் யாரக் குத்தஞ் சொல்றது? மீனையா, பழத்தையா?

வயல் பக்கத்துல உள்ள மாந்தோப்புல தொங்கற இனிப்பான பழம் கனிஞ்சு, பக்கத்துல உள்ள சிறிய குளத்துல விழும். கொளத்துல உள்ள வாள மீனு அதக் கவ்விச் சாப்புடும். அய்யயோ, பழத்தச் சாப்ட்டுட்டியேன்னு மீனக் குத்தஞ் சொல்ல முடியுமா. அதுமாதிரிதான், என்னை ஏன் குத்தஞ் சொல்றீங்க. அவனாத்தான் என்னைத்தேடி, இந்தப் பரத்தையத் தேடி, வந்தான்.

எங்கூட இருக்கிறப்போ என்னை வருணிக்கிறமாதிரி அழகாப்பேசுவான். அவன் நெனைக்கிறப்படி பேசிச்சிரித்து மகிழ்ச்சியா இருந்தான். இப்ப அவன் வீட்டுக்குப் போனப்புறவு என்ன ஆச்சுத் தெரியுமா? பாவைக்கூத்து பொம்மயோட கையும் காலும், கட்டுப்படுத்தறவங்களோட அசைவுக்கு ஏத்தமாதிரி ஆடும். அதுமாதிரி ஆய்ட்டான்.

ஒவ்வொரு மகனும் தன் தாயைத்தான் விழுந்து விழுந்து கவனிப்பாங்க. ஆனா, அவன் தன் பொண்டாட்டி சொன்னதயெல்லாஞ் செஞ்சுட்டு இருக்கான். ஹ.

கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே
(ஆலங்குடி வங்கனார்)

குறும்பா 11 (குறுந்தொகை 99) · 20 மே

பெருவெள்ளமா எனக்குள்ள ஓடிட்டு இருந்தக் காமம், உன்கிட்ட வந்துச் சேர்ந்ததுக்கு அப்புறம், கையால இறைக்குற நீரளவுக்குச் சமநிலைக்கு வந்துருச்சு.

புருஷா, நீ இவ்ளோ நாளா என்னப்பிரிஞ்சு பொருள் ஈட்டறத்துக்காகப் போயிருந்தியே, என் ஞாமகம் எப்பாவாவது வந்துச்சா உனக்கு?

எப்போவும் உன்னோட ஆழ்ந்த ஞாபகந்தான் தோழீ. இப்படி உன்னையே எண்ணி இருக்கறதுனால உன் நினைவும், உன் உருவமுந்தான் என் நெஞ்சுல. இப்படி உன் நினைவுலயே இருந்தாலும், என்ன பண்றது? நாம வாழறதுக்கு பொன் வேண்டாமா. அதனால இங்க வந்தத நெனச்சு, எங்க உன்கிட்ட திரும்பவே முடியாதோன்னு நெனச்சு, பயந்து இருந்தேன்.

தோழீ, பெரிய மரத்துக் கிளைகிட்டவரை வர்ற வெள்ளம்மாதிரி, எனக்குள்ள இருந்தக் காமம் ரொம்பப் பெருசா இருந்துச்சு. அந்த வலிமைமிகுந்த வெள்ளநீருல எல்லாமே அடிச்சுக்கிட்டுப் போயிடும்; மரம் மட்டுந்தான் நிக்கும். அதுமாதிரிதான், அந்தக்காமத்துல, எனக்கு மத்த விஷயம் எதுவும் கண்ணுக்குத் தெரியாம நீ மட்டுந்தான் என் நெஞ்சுல இருந்த. அந்தப் பெருவெள்ளம் இறஞ்சு ஓடுறச் சத்தம்மாதிரி, என் மூச்சும், நெஞ்சுத்துடிப்பும் எப்போவுமே வேகமா ஓடிட்டு இருந்துச்சு.

அந்தப் பெருவெள்ளம் அடங்கனுதுக்குப் பிறகு, கையால இறைக்குற அளவுக்குக் கொஞ்சமா, இல்லாதமாதிரி ஆகிடும். இப்ப உன்ன வந்துச் சேர்ந்ததுக்கு அப்புறமா, அந்தப் பெருங்காமமும் அடங்கிருச்சு; என் மூச்சும், துடிப்பும் சமநிலைக்கு வந்துருச்சு.

உள்ளினெ னல்லெனோ யானே யுள்ளி
நினைத்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து
மருண்டனெ னல்லெனோ வுலகத்துப் பண்பே
நீடிய மரத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்
கனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே

(ஔவையார்)

குறும்பா 10 (குறுந்தொகை 384) · 19 மே

தோழி: நீ செஞ்சச் சத்தியமும் நன்று. நீ பரத்தையரிடம் போய் மகிழ்ந்ததும் நன்று. உன்ன உள்ளே விடமுடியாது.

உழுந்தங்காயை அடிக்கிற தடியைப் போல தேஞ்சும், பருத்தும் உள்ள கழுத்துடைய, கரும்பை வண்ணமாக தீட்டின தோளுடைய, நீண்ட கூந்தல்கொண்ட சிறிய கையில சிறிய வளையல் போட்டிருக்கிற மகளிர்களின் பெண்மையை நுகர்ந்துவிட்டு வந்திருக்க. ஆஹா, நீ செஞ்சச் சத்தியமும் ரொம்ப அருமை; நீ பரத்தையரிடம் போய் மகிழ்ந்ததும் ரொம்ப அருமை. சபாஷ். உன்னைத் தலைவியப் பாக்க அனுமதிக்கமுடியாது.

உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே

(ஓரம்போகியார்)

குறும்பா 9 (குறுந்தொகை 291) · 18 மே

நண்பா, நரகாசமாச் சத்தம்பண்ற கருவிகூட, அவள் கையில இருந்தா, இனிமையான இசைமாதிரி ஒலிக்கும்.

நண்பா, நான் நேத்திக்கு நம்மூரு வயல்பக்கமா போயிருந்தேன். அங்கப் பக்கத்துல வெட்டுனமரங்கள அடுக்கி வெச்சுருந்தாங்க. அதுமேல சாஞ்சு ஒக்காந்து ஓய்வு எடுத்துட்டு இருந்தேனா. அப்போ, தினைப்பயிரெல்லாம் சாப்பிட்டு இருக்குற கிளிங்கள ஓட்டுறத்துக்கு அவ வந்தா.

கையில டப்டப்னு சத்தம்பண்ற கிளிய பயமுறுத்துற கருவி வெச்சுருந்தா. ஆனா அவ கையில இருக்கிறதுனால அந்தக் கருவியோட நரகாசமான டப்டப் சத்தம் தாளம் மாதிரியும், அவ வளையல் சத்தம் அழகானப்பாட்டுமாதிரியும் கேட்டுச்சு. அந்தக் கிளிங்கக் கூட, தலைவி ஏதோ இனிமையாப் பாடுறாங்கன்னு நெனச்சு, பயப்படவே இல்ல; பறக்கவும் இல்ல. அதுகமாட்டுக்கும் மகிழ்ச்சியா தினையத் தின்னுட்டு இருக்கு. கிளிங்க பயப்படவே இல்லையேன்னுட்ப் பாத்து, வருந்தி, அவக் கண்ணுல தண்ணி நிக்குது.

நண்பா, நீ அந்த மலைப்பக்கம் போயிருக்கீல்ல. அங்க ஒரு சின்னச் சுனை இருக்கு, பாத்திருக்கியா. அதுல, அழகா வெள்ளவெளேர்னு குவளைப்பூப் பூத்திருக்கும். லேசா மழைப்பெஞ்சதுக்கு அப்புறம், குவளைப்பூ இதழ்களெல்லாம் கொஞ்சம் விரிஞ்சு இருக்கும்; அவை அவ கண்ணிமைகள். பூ நடுவுல, மழைத்தண்ணி வெளியேச் சிந்தாம, மொதக்கறமாதிரி தங்கிருக்கும்; அவக் கண்ணீர் அது மாதிரி. அப்போ கருவண்டுவந்து, பூ நடுவுல உக்காரும்; அவளோட கருவிழி.

சுடுபுன மருங்கிற் கலித்த வேனற்
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையி னிசையா வின்பா ணித்தே
கிளியவள் விளியென வெழலொல் லாவே
அதுபுலந் தழுத கண்ணே சாரற்
குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை
வண்டுபயில் பல்லிதழ் கலைஇத்
தண்டுளிக் கேற்ற மலர்போன் றனவே

(கபிலர்)

குறும்பா 8 (குறுந்தொகை 37) · 17 மே

ஆண் யானை யாமரத்த வேரோடப் பிடுங்கி, பட்டைய உரிச்சு வரத் தண்ணியப் பெண் யானைக்குக் கொடுக்குற அன்புதான் அவர்கிட்டேயும் இருக்கு.

தோழி, உன் காதலர் வணிகத்துக்காகதானே போயிருக்கிறார். உனக்காகத் தானே, இவ்வளவு சிரமப்பட்டு, தண்ணியில்லாப் பாலைநிலம் வழியா போயிருக்கிறார். நீ பாலைநெலத்தப் பாத்ததில்லதானே. அங்க எந்த உசுருக்குமே தண்ணியே கெடைக்காது. அப்போ, ஆண் யானை என்ன செய்யும் தெரியுமாடி? யாமரம் இல்ல யாமரம்; அத அப்படியே வேரோடப் பிடுங்கி, கஷ்டப்பட்டுப் பட்டைய உரிச்சு, அதுலேர்ந்து வரத் தண்ணியப் பெண் யானைக்குக் கொடுக்கும். அதே அன்புதான் உங் காதலர்கிட்டேயும் இருக்கு. நீ மகிழ்ச்சியா இருக்கணும்னுதான், என்ன துன்பம்வந்தாவது பரவாயில்லனு இவ்வளவு தூரம் போயிருக்கார். அந்த யானைக்காட்சியப் பாத்தா உன் ஞாமகம் சட்டுன்னு வந்துரும். சீக்கிரம் திரும்பிருவார்.

நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே

(பாலைபாடிய பெருங்கடுங்கோ)

குறும்பா 7 (குறுந்தொகை 41) · 16 மே

யாருமில்லா வீட்டுமுத்தத்துல அணில் ஓடியாடி வெளையாடுறமாதிரி, காதலரப்பிரிஞ்ச காதலி மனத்துலயும் துன்பம் ஓடியாடி வெளையாடுதாம். ஹ.

தோழி, எங் காதலர் எம் பக்கத்துல இருந்தபோது, ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன். நம்பூருல விழா எடுக்கும்போது எப்படி எல்லாரும் கொண்டாட்டமா இருந்தாங்களோ, அப்படிக் கொண்டாடிட்டு இருந்தேன். வாழ்க்கையில ஒரு துளி வருத்தங்கூட இல்லாம இருந்துச்சு. அவர் இப்ப என்னவிட்டுட்டுப் போய்ட்டார்.

நீ பக்கத்து ஊருக்குப் போயிருக்கியா. இப்ப மழையில்லாம பாலைநெலமா மாறிடுச்சு. அந்த ஊருல இருக்குற வீடுகளவிட்டு எல்லாரும் போய்ட்டாங்க. அந்த வீடுமாதிரியே என் மனமும் வெறிச்சோடி காலியா ஆயிடுச்சு.

தோழி, இதையே நேத்து நம்பூருக்கு வந்த ஒரு புது புலவர்கிட்ட சொன்னேன். அவர் அருமையா ஒரு பா எழுதிட்டாரு தெரியுமா. அவர் இன்னும் அழகாச் சொல்றார் பாரு. அணிலாடு முன்றில், அப்படீன்னு உவமைய தெளிக்கிறார். அதாவது, பாலையில இருக்குற யாருமிலா வீட்டுமுத்தத்துல அணிலுங்க எல்லாம் பயமே இல்லாம அதுமாட்டுக்கும் சுத்திட்டு இருக்குமாம். தலைவரப் பிரிஞ்ச என், வெறிச்சோடி இருக்குற, பொலிவெழந்த மனத்துல, துன்பம் அணில்மாதிரி ஓடியாடி வெளையாடுதாம்.

நீ என்னச் சொல்ற, நல்லா இருக்குதானே? இரண்டு கழஞ்சுப் பொன் தருவதா இன்னிக்கு வரச்சொல்லியிருக்கேன்.

காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே

(அணிலாடு முன்றிலார்)

குறும்பா 6 (குறுந்தொகை 156) · 15 மே

நீ பிரிக்கப் போறக் காதலச் சேர்த்துவைக்க நீ படிச்ச வேதத்துல ஏதும் பரிகாரம் சொல்லியிருக்கா என்ன? கொஞ்சம் நீயே சொல்லேன்.

பார்ப்பன நண்பா, நீதான் சிவப்புப்பூப் பூக்குறப் புரசமரத்துப் பட்டைய நீக்கிட்டு, அதோடத் தண்டுலேர்ந்துச் செஞ்ச கமண்டலம் வெச்சுருக்க; தினமும் விரத உணவு மட்டும் சாப்பிட்டு இப்படி ஒல்லியா இருக்குற; நாலு வேதத்தையும் வேற கரைச்சுக் குடிச்சுருக்கியே; வேதத்துல, தலைவனும் தலைவியும் பிரிஞ்சா, திரும்பவும் சேரறதுக்குப் பரிகாரம் ஏதும் சொல்லியிருக்கா என்ன? கொஞ்சஞ் சொல்லேன்.

என்ன திகைச்சுப் போயிட்டியா. ஆமா, நீதான் நானும் அவளும் காதலுல அடுத்தப்படி, காமத்தநோக்கிப் போகக்கூடாது, நாங்க ரெண்டுப்பேரும் பிரிஞ்சுப் போயிரணும்னு மனசுல நெனைக்கிறியே; எனக்குத் தெரியாதா என்ன !

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ மயலோ விதுவே

(பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்)

குறும்பா 5 (குறுந்தொகை 1) · 14 மே

என் மலையில ரத்தவெள்ளம்மாதிரி செக்கச்செவேல்னு காந்தள்பூவா இருக்கும். அங்கேந்து பறிச்சப் பூச்செண்டு, இந்தா வச்சுக்கோ.

முருகன் கோவத்தோடப் போர்ச்செய்த களம். சிவந்த அம்பு, சிவந்த யானைதந்தம் என பாக்கற இடமெல்லாம் சிவப்பா இருக்கிறதப் பார்த்திருக்கியா தோழி? என் மலையில அந்த ரத்தவெள்ளம்மாதிரி செக்கச்செவேல்னு எங்கப்பாத்தாலும் காந்தள்பூவா நெறஞ்சு இருக்கும். அப்ப தோணுச்சு, இந்த எல்லாச் சிவப்பும் உன்னுடையக் கோவந்தான். எங்கப் பாத்தாலும் நீதான். அங்கேர்ந்து பறிச்சப் பூச்செண்டு இது, இந்தா வச்சுக்கோ.

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழறொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

(திப்புத்தோளார்)

குறும்பா 4 (குறுந்தொகை 152) · 13 மே

தோழீ, சீக்கிரம் அவரவந்து என்னைப் பெண்கேக்கச்சொல்லு, தாயில்லா ஆமைமுட்டைபோல மனசு நொறுங்கிட்டு இருக்கு.

அவர் என்னப் பிரிஞ்சுப் போய்ட்டார். அதனால நா கல்யாணம் பண்ணிக்காம ஒக்காந்து இருக்கேன். எல்லாரும் என்னச் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கச்சொல்லிக் கேக்குறாங்க. அதனால என் மனசு ரொம்ப நோவுது. அவங்களுக்கு என்னத் தெரியும். கடலோரத்துல தாய் ஆமை மண்ணுக்குள்ள முட்டை இடும். தாய் ஆமைக்கு ஏதாவது ஆச்சுன்னா, அந்த முட்டைங்க தாய் இல்லாததுனால, அப்படியே ஒடஞ்சு, அழுகி, மண்ணுக்குள்ளேயேப் பொதஞ்சுடும். அதுமாதிரிதான், அவரில்லாம என் மனசும் உள்ளேயே நொறுங்கிட்டு இருக்கு. தோழி, அவர எப்படியாவதுப் பாத்துப் பேசி, சீக்கிரம் வந்து என்னைப் பெண்கேக்கச்சொல்லு.

யாவது மறிகிலர் கழறு வோரே
தாயின் முட்டை போலவுட் கிடந்து
சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ
யாமைப் பார்ப்பி னன்ன
காமங் காதலர் கையற விடினே

(கிளிமங்கலங்கிழார்)

குறும்பா 1 (குறுந்தொகை 157) · 11 மே

அய்யோ கோழி கூவிருச்சு. வாள் கிழிக்கிறமாதிரி, சூரியக்கதிர் எங்க இரண்டுபேரையும் பிரிச்சுருமே. மனசு பக்பக்னு இருக்கு.

வெளிய கோழி கூவுறச் சத்தங் கேக்குது. அதுக்குள்ளப் பொழுது விடிஞ்சுருச்சா ? இன்னைக்கு அவரப் பிரியற நாளாச்சே. கூரியவாள் கிழிக்கிறமாதிரி சூரியக்கதிர் எங்க இரண்டுப்பேரையும் பிரிக்கப்போவுதே. என் நெஞ்சு முழுக்க அச்சம் நிரம்பி ரொம்ப கனக்குதே.

குக்கூ வென்றது கோழி யதனெதிர்
துட்கென் றன்றென் றூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே

(அள்ளூர் நன்முல்லையார்)

குறும்பா 2 (குறுந்தொகை 32) · 11 மே

காலை, மதியம், மாலை, இரவு இப்படிலாம் தனித்தனியா உணரமுடிஞ்சுச்சுனா அது காதலே இல்லியாம்.

என்னோடக் காதல் உண்மையானது. நானும் அவளும் சேர்ந்திருந்தபோது, எது காலை, எது மதியம், எது மாலை, இரவு என்றுகூட தெரியாம, ஒரு கனவுல மொதக்கறமாதிரி வாழ்ந்தேன். அவ இப்போ பிரிஞ்சு போய்ட்டா. ஆனா, அதுக்காக எங்களோடக் காதல ஊர்முழுக்க டமாரம் அடிக்கமாட்டேன். அப்படிச் செஞ்சா ஊர்காரங்க எங்களுக்குக் கல்யாணம் பண்ணிவெப்பாங்க. ஆனா அதுவே அவள அவமானப்படுத்தறமாரி ஆகிடும். ஆனா, கல்யாணம் செய்யாமலும் இருக்கமுடியாது. சாகறதுதான் ஒரே வழியா ?

காலையும் பகலுங் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலொடு மறுகிற் றோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே

(அள்ளூர் நன்முல்லையார்)

குறும்பா 3 (குறுந்தொகை 95) · 11 மே

முரடனா இருந்தேன். அவ வந்தவுடனே -நெருப்புமேல தண்ணியக் கொட்டுனா விஷ்ஷ்னு சத்தம்வந்து அடங்கற மாதிரி- அடங்கிட்டேன்.

இதோ மலைக்காட்டுல நிக்கறேன். இங்கதான் எங்கேயோ அவ வீடு இருக்கு. உயரத்துலேர்ந்து அருவி கொட்டுது. கீழ பாறமேல விழறப்ப விஷ்ஷ்னு சத்தம் போட்டுக்கிட்டே விழுது. விழுந்து பாறை இடுக்குகவழியா ஓடுது. நா மொதல முரடனாதான் இருந்தேன். அவ வந்தவுடனே -நெருப்புமேல தண்ணியக் கொட்டுனா விஷ்ஷ்னு சத்தம்வந்து அடங்கற மாதிரி- அடங்கிட்டேன். என்னோட மொரட்டுத்தனம் எல்லாம் எங்கேயோ வழிஞ்சு ஓடிருச்சு.

மால்வரை யிழிதருந் தூவெள்ளருவி
கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே

(கபிலர்)

தேட ஆரம்பியுங்கள் / Start typing to search